போரின் போது விடுதலைப் புலிகளின் தலைவர்களுக்கு நேர்ந்ததே புலம்பெயர் தமிழர்களுக்கு, நேரிடும் என்றே பிரிகேடியர் பிரியங்க பெர்னாண்டோ சைகை மூலம் எச்சரித்தார் என்று பௌத்த பிக்குகளின் அமைப்பொன்று விளக்கம் அளித்துள்ளது.
|
அதேவேளை கடும் விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ள பிரிகேடியர் பிரியங்க பெர்னாண்டோவின் செயற்பாட்டை பாராட்டியுள்ள பௌத்த தகவல் கேந்திர நிலையத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் முலுகல்லே ஸ்ரீ ஜினானந்த தேரர், புலம்பெயர்ந்துள்ள தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு அந்தந்த நாடுகளில் வசிக்கும் தூதரக அதிகாரிகளும், சிங்களவர்களும் பிரிகேடியர் பிரியங்க பெர்னாண்டோவைப் போன்று பதிலடி கொடுப்பதற்கு தயாராக வேண்டும் என்றும் அழைப்பு விடுத்துள்ளார்.
லண்டனில் தூதரக சேவையில் மீண்டும் பிரிகேடியர் பிரியங்க பெர்ணான்டோவை இணைத்து கொண்டதற்காக நன்றி தெரிவிப்பதற்காக இன்றைய தினம் கொழும்பிலுள்ள ஸ்ரீலங்கா வெளிவிவகார அமைச்சிற்கு சென்றிருந்த பௌத்த தகவல் கேந்திர நிலையத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் முலுகல்லே ஸ்ரீ ஜினானந்த தேரர் குறித்த நடவடிக்கையை பாராட்டி கடிதமொன்றை கையளித்துள்ளார்.
இதனையடுத்து ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட அவர், “புலம்பெயர் தமிழ் மக்களுக்கு மரண அச்சுறுத்தல் விடுத்ததாக குற்றம்சாட்டப்பட்ட பிரித்தானியாவுக்கான உயர்ஸ்தானிகர் அலுவலகத்தின் பாதுகாப்பு விவகாரங்களுக்கு பொறுப்பான அதிகாரி பிரிகேடியர் பிரியங்க பெர்னாண்டோவை மீண்டும் பணியில் அமர்த்த முடிவெடுக்கப்பட்டதையிட்டு வெளிவிவகார அமைச்சுக்கு நன்றி தெரிவித்தோம். அவரை மீண்டும் அப்பதவியில் நியமிக்கும்படி ஏற்கனவே நாங்கள் வலியுறுத்தியிருந்தோம்.
அந்த வகையில் மிகவிரைவில் அவரை அப்பதவிக்கு திரும்பச்செய்வதாக வெளிவிவகார அமைச்சின் செயலாளர் பிரசாத் பிரியதர்ஷன எமது கோரிக்கை கடிதத்தை ஏற்றுக்கொண்டு பதிலளித்தார். உண்மையிலேயே புலம்பெயர்ந்துள்ள விடுதலைப் புலிகளின் குழுக்களால் நடத்தப்பட்ட இந்த ஆர்ப்பாட்டத்தின்போது அவர்களின் கழுத்தை அறுப்பதாக பிரிகேடியர் எச்சரிக்கை விடுக்கவில்லை. ஆனால் அப்படியொரு எச்சரிக்கையையே தங்களுக்கு விடுத்திருப்பதாக பிரித்தானிய நாடாளுமன்றத்திலும் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
இருந்த போதிலும் விடுதலைப் புலிகளின் தலைவர்களுக்கு நேர்ந்ததைப் போன்றே உங்களது தலையையும் இழக்க நேரிடும் என்ற செய்தியையே பிரிகேடியர் பிரியங்க பெர்னாண்டோ வழங்கியிருக்கின்றார். விடுதலைப் புலிகளின் புலம்பெயர்ந்த குழுவினர் ஸ்ரீலங்காவுக்கு எதிராக வெளிநாட்டு அமைச்சுக்கள், நாடாளுமன்றங்களில், முறைப்பாடு செய்யப்படுவதை புலம்பெயர் சிங்களவர்கள் உன்னிப்பாக பார்க்கவேண்டும். எனவே புலம்பெயர்ந்த விடுதலைப் புலிகளின் குழுவினர் செய்வதை பார்க்கிலும் அதிகமாக அவர்களுக்கு பதில் வழங்க புலம்பெயர் சிங்களவர்கள் நடவடிக்கை வேண்டும். இதற்கு பிரிகேடியர் பிரியங்க பெர்னாண்டோவை முன்னுதாரணமாக எடுத்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்” - என்றார்.
|
புலிகளின் தலைவர்களைப் போலவே தலையை இழக்க நேரிடும் என்றே எச்சரித்தாராம் பிரிகேடியர் பிரியங்க!
Add Comments