இராணுவ விசாரணை வளையத்தினுள் சாந்தரூபன்!


plote

அவுஸ்திரேலியாவில் இருந்து இலங்கைக்கு நாடுகடத்தப்பட்ட விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் போராளி யாழ்ப்பாணத்தில் கடும் அச்சுறுத்தலை இலங்கை படைகளிடமிருந்து எதிர்கொண்டுள்ளார்.
கடந்த மாதம் 22ஆம் திகதி அவுஸ்திரேலியாவில் இருந்து விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் போராளியான சாந்தரூபன் இலங்கைக்கு நாடுகடத்தப்பட்டிருந்தார்.கட்டுநாயக்க விமானநிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்ட அவர், குற்றப் புலனாய்வு பிரிவினரால் நான்கு மணிநேரம் விசாரணைக்கு உட்படுத்தப்படுத்தப்பட்டார்.இதனையடுத்து விடுதலை செய்யப்பட்ட சாந்தரூபன் வீடு திரும்பி பருத்தித்துறையில் வசித்து வருகின்றார்.
அவர் தங்கியிருக்கும் வீட்டிற்கு படையினர் இரண்டு முறை சென்றுள்ளனர். முதலாவது முறை சென்ற போது உள்நாட்டு யுத்தத்தின் போது 9 ஆண்டுகளுக்கு முன்னர் நடந்தவற்றை விசாரித்துள்ளனர். இரண்டாவது தடவை சென்ற போது சாந்தரூபனின் மனைவி மற்றும் குழந்தைகள் பற்றிய விபரங்களை பெற்றுக்கொண்டுள்ளனர்.
பருத்தித்துறை கடற்படை முகாமில் இருந்தே அதிகாரிகள் சாந்தரூபனின் வீட்டிற்கு சென்றுள்ளனர். ஏற்கனவே கேட்கப்பட்ட கேள்விகளை சாந்தரூபனிடம் கேட்டிருந்ததாக அவரின் மனித உரிமைகள் சட்டத்தரணி தெரிவித்துள்ளார். இதனால் சாந்தரூபனின் மனைவி அச்சப்படுகின்றார். அவர்கள் பாதுகாப்பான சூழலை உணரவில்லை.
பாதுகாப்பு படைகளின் பழிவாங்கும் நடவடிக்கை ஆழமாக இருக்கின்றது. குறிப்பாக விடுதலைப் புலிகள் அமைப்புகளுடன் தொடர்புடையவர்கள் கடும் அழுத்தங்களை எதிர்நோக்கியுள்ளனர். கடந்த ஆண்டு இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டிருந்த ஐக்கிய நாடுகள் சபையின் சிறப்பு அறிக்கையாளர் “பென் எமர்சன்,” விடுதலைப் புலிகளுடன் தொடர்பு வைத்திருந்தவர்கள் என சந்தேகிக்கப்படும் மக்களுக்கு சித்திரவதைகள் தொடர்வது வழக்கமாக இருப்பதாக தெரிவித்திருந்தார்.

அவரது அகதி அந்தஸ்து கோரிக்கை அவுஸ்திரேலியா அரசாங்கத்தினால் நிராகரிக்கப்பட்டது. இது குறித்த வழக்கு ஐக்கிய நாடுகள் சபையின் கவனத்தை ஈர்திருந்தது. இதனையடுத்து, சாந்தரூபனை நாடுகடத்த வேண்டாம் என ஐ.நா சபை கோரிக்கை விடுத்திருந்த போதிலும், கடந்த 22ஆம் திகதி அவர் நாடு கடத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Share this article :
Print PDF

Related Post:

 
Support : Eelam5.com | Untamil.com | News4tamil.com
Powered by Eelanila
Copyright © 2011. ஈழநிலா.கொம் - All Rights Reserved
Eelanila.com
Design by: Nilavan Published by: Eelanila