தியத்தலாவ பகுதியில் அண்மையில் பேருந்து ஒன்றில் இடம்பெற்ற குண்டு வெடிப்பு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்து. இந்த சம்பவம் குறித்து பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்திருந்தனர்.
விசாரணைகளின் பிரகாரம் சம்பவம் தொடர்பில் தற்போது பரபரப்பான தகவல் ஒன்று வெளியாகியுள்ளதாக கொழும்பு ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
அந்த வகையில், தற்கொலை செய்துகொள்வதற்காக எடுத்துச் சென்றபோதே குண்டு தவறி வெடித்ததாக, குண்டை எடுத்துச் சென்றதாக கருதப்படும் இராணுவ வீரர் பொலிஸாருக்கு வாக்குமூலம் வழங்கியுள்ளார்.
ஜானக்க சந்திரசேன என்ற இந்த அதிகாரியை எதிர்வரும் 16 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு பண்டாரவளை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சந்தேக நபர், இராணுவத்தின் 6 வது மின் மற்றும் இயந்திர பொறியியல் பிரிவின் மனிலந்த முகாமில் கடமையாற்றி வந்தவர் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவான் குணசேகர தெரிவித்துள்ளார்.
தியத்தலாவ வைத்தியசாலையில் பொலிஸ் பாதுகாப்பில் தடுத்து வைக்கப்பட்டுள்ள குறித்த இராணுவ வீரரிடம் மேற்கொண்ட விசாரணைகளின் போது அவர் வாக்குமூலம் வழங்கியுள்ளார்.
10 லட்சத்துக்கும் மேல் கடன் வாங்கியுள்ளதாகவும், அதனை மீள செலுத்த முடியாத நிலையிலேயே தற்கொலை முயற்சிக்கு தீர்மானித்திருந்ததாகவும் அவர் பொலிஸாரிடம் கூறியுள்ளார்.
இராணுவ முகாமில் வைத்து தற்கொலை செய்துகொள்ள திட்டமிட்டிருந்த போதிலும், கைக்குண்டு இடையில் பேருந்திலேயே வெடித்து விட்டதாகவும் குறித்த இராணுவ வீரர் வாக்குமூலம் வழங்கியுள்ளார்.
கடந்த சில வருடங்களுக்கு முன்னர் வடபகுதியில் சேவையாற்றும்போது குறித்த கைக்குண்டு தனக்கு கிடைக்கப் பெற்றதாகவும், அது நல்ல நிலையில் இருக்கவில்லை எனவும் அவர் தனது வாக்கு மூலத்தில் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, தியத்தலாவ பகுதியில் அண்மையில் இடம்பெற்ற இந்த குண்டு வெடிப்பு சம்பவத்தில் பொது மக்கள், இராணுவத்தினர் என 19 பேர் காயமடைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
Add Comments