முல்லைத்தீவுக் கடலில் வெளிச்சம் பாய்ச்சி மீன்பிடித்தனர் என்று தெரிவித்து பெரும்பான்மையின மீனவர்கள் மூவர் பிரதேச மீனவர்களால் பிடிக்கப்பட்டனர். அவர்கள் 3 பேரும் திருகோணமலையைச் சேர்ந்தவர்கள். அவர்களின் மீன்பிடி உபகரணங்களும் கைப்பற்றப்பட்டன.
மூவரையும் முல்லைத்தீவுப் பொலிஸாரிடம் ஒப்படைப்பதற்காகப் பிரதேச மீனவர்கள் கொண்டு சென்றுள்ளனர். அவர்களை ஏற்றுக்கொள்ளாத பொலிஸார் உங்களை யார் பிடிக்கக் கூறியது? யார் அதிகாரம் கொடுத்தது என்று அச்சுறுத்தும் வகையில் செயற்பட்டனர் என்று கூறப்படுகின்றது.
3 மீனவர்களுக்கு உணவளித்ததுடன், அவர்கள் பிடித்த மீன்கள் பழுதடையாது இருப்பதற்கு ஐஸ் கட்டிகள் கொடுத்து அனுப்பி வைத்தனர் என்றும் தெரிவிக்கப்பட்டது.
அதேவேளை, முல்லைத்தீவு மாவட்டத்தில் நடைபெறும் சட்டவிரோத மீன்பிடிகளைத் தடுக்கக் கோரி முல்லைத்தீவு மாவட்ட நீரியல்வளத் திணைக்களத்தின் முன்பாகத் தொடர் போராட்டம் நடத்தப்படுகின்றது. இது தொடர்பாக எதிர்வரும் 8ஆம் திகதி கலந்துரையாடல் ஒன்றும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.