இதன்போது மேலும் அவர் கூறுகையில்:-
வடமாராட்சி கிழக்கு பகுதியில் சட்டவிரோதமாக வெளிமாவட்ட மீனவர்கள் கடலட்டை பிடித்தபோது அவர்களை கடற்படையினர் கைது செய்தார்கள். ஆனால் கடற்றொழில் நீரியல்வளத்துறை திணைக்களம் அவர்களை காப்பாறியுள்ளது.
இதன் பின்னர் எமது மீனவர்களுக்கு சொந்தமான 12லட்சம் பெறுமதியான வலைகள் வெளிமாவட்ட மீனவர்களால் அறுக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக நாங்கள் போராட்டம் ஒன்றை ஜனாதிபதிக்கு எதிராக நடாத்த திட்டமிட்டிருந்த நிலையில் மத்திய கடற்றொழில் அமைச்சர் எம்மை சந்தித்து வெளிமாவட்ட மீனவர்களை வெளியேற்றுமாறு பொறுப்புவாய்ந்தவர்களுக்கு உத்தரவிட்டார்.
அந்த உத்தரவு கொடுக்கப்படும்போது யாழ்.மாவட்ட கடற்றொழில் நீரியல்வளத்துறை திணைக்கள பணிப்பாளரும் அங்கே இருந்திருந்தார்.
ஆனால் தமக்கு எழுத்துமூல உத்தரவு கிடைத்தால் மட்டுமே நடவடிக்கை எடுப்போம் என கூறுகிறார்.
இதேபோல் தமிழ்தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனை சந்திக்க பல தடவைகள் நாங்கள் முயற்சித்தோம். ஆனால் எங்களுக்கு அந்த வாய்ப்பு கிடைக்கவில்லை.
நாங்கள் தொடர்ந்து ஏமாற்றப்பட்ட நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் கடற்றொழிலாளர் சங்கங்களை சார்ந்த 7 பேர் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரனை சந்தித்தோம்.
பிரதானமாக இழுவை படகுகளை கட்டுப்படுத்துவதற்கான தனிநபர் சட்டமூலம் ஒன்றை கொண்டுவந்து அதனை நிறைவேற்றினீர்கள். ஆனால் அதனை அமுல்ப்படுத்தாமல் இருப்பதன் நோக்கம் என்ன? என நாங்கள் கேட்டோம். அப்போது அவர் கூறினார் அதனை அமுல்ப்படுத்தும்படி கேட்டேன் என்றார்.
நாங்கள் மீண்டும் கேட்டோம் நாடாளுமன்றில் இதனை கேட்டீர்களா? என்றால் இல்லை. பின்னர் கூறினார் ஒரு மாதத்திற்குள் அதனை அமுல்ப்படுத்த நடவடிக்கை எடுப்பதாகவும் இல்லையேல் சட்ட நடவடிக்கை எடுக்க தீர்மானிப்பேன் எனவும் கூறினார்.
அப்போது நாங்கள் கூறினோம் மீன்பிடி அமைச்சராக இருந்த மஹிந்த அமரவீர அந்த சட்டமூலத்தை நீங்களே தடுப்பதாக எமக்கு கூறினார் என கூறியபோது அவ்வாறில்லை என கூறியுள்ளார்.
பின்னர் இந்திய இழுவை படகுகள் இப்போதும் வருகிறதா?
என சுமந்திரன் கேட்டபோது உள்ளுர் இழுவை படகுகளை கட்டுப்படுத்த முடியவில்லை.
பின்பு எதற்காக இந்திய இழுவை படகுகளை கேட்கிறீர்கள் என எம்முடன் வந்த ஒருவர் கோபமடைந்து கேட்டார். இவ்வாறான நிலையில் தமிழ்தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் 16 பேரும்
எதற்காக இருக்கிறீர்கள்? நிறைவேற்றப்பட்ட ஒரு சட்டத்தை அமுல்ப்படுத்தும்படி கேட்க முடியாத நிலையில் எதற்காக நாடாளுமன்றில் இருக்கவேண்டும்? இந்த நிலை தொடர்ந்தும் நீடித்தால் வடமாகாணத்தில் உள்ள கரையோர மக்கள் ஒரு வருடத்திற்குள் பூரணமாக இறந்து விடுவார்கள்.
இப்போதே பல மீன் இனங்கள், கடல்வளங்கள் அழிக்கப்பட்டிருக்கின்றன. தொழிலுக்கு செல்வதற்கு பயன்படும் எரிபொருள் செலவுக்கு கூட மீனை பிடிக்க முடியாத நிலையில் எங்கள் மீனவர்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.
இதனை தடுக்கும் பொறுப்பில் உள்ள நாடாளுமன்ற உறுப்பினர்களும், கடற்றொழில் நீரியல்வளத்துறை திணைக்கள அதிகாரிகளும் விலைபோய்விட்டார்கள். 117 கடற்றொழிலாளர் சங்கங்களுக்கும் பதில் சொல்லவேண்டிய கடற்றொழல் சமாசங்களின் சம்மேளன தலைவர் தவச்செல்வம் நித்திரை கொள்கிறார்.
தென்னிலங்கை மீனவர்கள் தாங்கள் நினைத்தாற்போல் வெளிச்சம்பாய்ச்சி, டைனமைற் பயன்படுத்தி என சட்டத்திற்கு முராணான அனைத்தையும் செய்கிறார்கள்.
இதனை தட்டிக்கேட்கவேண்டிய நாடாளுமன்ற உறுப்பினர்களும், அதிகாரிகளும் நல்லாட்சி அரசு என சொல் லப்படும் இந்த நயவஞ்சக அரசுக்கு துணைபோய் கொண்டிருக்கிறார்கள் என்றார்.