அரசியல் நெருக்கடியால் இலங்கை செலுத்தப் போகும் விலை!

இலங்கையில் தற்போது தீவிரம் பெற்றிருக்கும் அரசியல் அதிகார நெருக்கடி நிலைமையின் பாரதூரத்தை ‘ 30 வருடகால யுத்த காலத்தில் செய்ய முடியாமற்போனதை 3 கிழமைகளில் செய்துவிட்டனர்’ எனப் பகுதித்தறிவுடன் சிந்திக்கும் பலருடனான கலந்துரையாடல்களின் மூலமாக உணர்ந்துகொள்ளமுடிகின்றது.
தற்போது இலங்கையின் அரசியல் நெருக்கடி ஒரு மாதத்தை கடந்து முடிவின்றி சென்றுகொண்டிருக்கின்றது.
ஒக்டோபர் 26ம் திகதி ரணில் விக்கிரமசிங்கவைப் பிரதமர் பதவியில் இருந்து நீக்கி அமைச்சரவையைக் கலைத்து மஹிந்த ராஜபக்ஷவை புதிய பிரதமராக நியமித்தமை தொடக்கம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மேற்கொண்ட நடவடிக்கைகளும் அதனைத் தொடர்ந்து இலங்கையின் பாராளுமன்றத்தில் நடந்தேறிய சம்பவங்களும் இலங்கை ஒரு ஜனநாயக நாடா? என்ற கேள்வியை பலரது மனங்களிலும் எழுப்பியுள்ளதென்பதில் சந்தேகத்திற்கிடமில்லை.
எதிர்காலத்தில் இலங்கையின் பிரதமராகவோ அதனிலும் அதிகமாக ஜனாதிபதியாகவோ வரக்கூடியவர் என கருதப்படுபவரான ஐக்கிய தேசியக் கட்சியின் தற்போதைய பிரதித் தலைவர் சஜித் பிரேமதாஸவின் பார்வையில் ‘இலங்கை என்பது ஜனநாயக நாடு என்ற நிலையில் இருந்து குறைந்து சர்வாதிகார நாடு என்ற நிலையை நோக்கி அதிகரித்துச் செல்கின்றது’ என அமைந்திருக்கின்றது.
இலங்கையில் கொடூரமான போர் மூன்று தசாப்பதங்களாக இடம்பெற்ற காலத்தில் அதிகமாக பாதிக்கப்பட்ட தமிழ் மக்கள், இலங்கை ஒரு மிலேச்சத்தனமான அரச பயங்கரவாதம் முன்னெடுக்கப்படும் நாடு, அதற்கெதிராக உலக நாடுகள் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியபோதெல்லாம் ,அந்த நிலைமைக்கு செல்லாமல் இருந்தமைக்கு ஆசியாவின் மிகப்பழமையான ஜனநாயக நாடு என்ற கருதுகோள் ஆழமாக உலகில் பதிந்திருந்தமையும் ஆட்சியதிகாரம் சுமூகமாக தேர்தல் மூலம் மாற்றப்பட்டமையும் முக்கிய காரணங்களாக இருந்தன.
இறுதிப் போர் நிகழ்ந்த காலகட்டத்தில் பல்லாயிரக்கணக்கானவர்கள் கொல்லப்பட்டபோது கூட சர்வதேசம் இலங்கை மீது காத்திரமான நடவடிக்கைகள் எதனையும் இருக்காமல் இருந்தமைக்கு இது ஒரு ஜனநாயக நாடு என்ற வரலாற்றுப் பார்வையே காரணமாக இருந்தது.
ஆனால் ஒக்டோபர் 26ம் திகதியின் பின்னரான நிலைமை அனைத்மையும் மாற்றியமைத்துவிட்டது என்றால் மிகையல்ல.
ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசாங்கம் கடந்த மூன்றரை ஆண்டுகாலத்தில் வாக்குறுதிகள் மூலமாகவும் சில நல்லெண்ண நடவடிக்கைகள் மூலமாகவும் மேற்குலகத்தினர் மத்தியில் இலங்கை தொடர்பில் கட்டியெழுப்பிய மாயத்திரையை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தனது செயற்பாடுகள் மூலமாக தெரிந்தோ தெரியாமலோ சுக்குநூறாக உடைத்துவிட்டிருக்கின்றார் என்று கூறினாலும் மிகையல்ல.
ஒக்டோபர் 26ம்திகதிக்கு முன்பாக இலங்கை தொடர்பாக அடுத்த மார்ச் மாதத்தில் சர்வதேச சமூக ஜெனிவாவில் என்ன நிலைப்பாட்டை எடுக்கும்? இலங்கை பொறுப்புக்கூறலில் இருந்து சாக்குப் போக்குச் சொல்லியும் அங்கொன்றும் இங்கொன்றுமாக செய்த காணாமற்போனோருக்கான அலுவலகத்தை அமைத்தல் போன்ற சில நம்பிக்கை விதைப்பு நகர்வுகளை காண்பித்தும் தப்பித்துக்கொள்ளுமா? ஐநா மேற்பார்வையில் இருந்து கழன்றுவிடுமா ? என்ற ஐயப்பாடு மனித உரிமைகள் ஆர்வலர்கள் மற்றும் கரிசனைமிக்க தமிழர் நலன் விரும்பிகள் அரசியல் வாதிகள் மற்றும் ஊடகவியலாளர்களிடையே பரவலாக காணப்பட்டது. ஆனால் ஜனாதிபதி மைத்திரியின் தான்தோன்றித்தனமான செயற்பாடுகள் அடுத்த ஜெனிவா அமர்வுகள் இலங்கை அரசிற்கு கடுமையாக அமையும் என்பதை கோடிட்டுக்காண்பித்து நிற்கின்றது. இலங்கையிலுள்ள மேற்குலக இராஜதந்திரிகள் சிவில் சமூக பிரமுகர்கள் வெளிப்படுத்தும் கருத்துக்கள் இதையே எடுத்துணர்த்துகின்றன.

மனித உரிமைகள் விடயத்தை ஒரு புறம் வைத்துவிட்டு இலங்கையின் பொருளாதாரத்தை எடுத்துப் பார்த்தால் கடந்த ஒரு மாத காலப்பகுதியில் ஏற்பட்டிருக்கும் இழப்பு தட்டிக்கழித்துவிடமுடியாததாக அமைந்திருக்கின்றது.
உலகப் புகழ்பெற்ற லோன்லி பிளனற் சுற்றுலா சஞ்சீகை இலங்கையே உலகில் தற்போது சுற்றுலா செல்வதற்கு சிறந்த நாடு என புகழ்ந்திருந்தது. ஆனால் அரசியல் நெருக்கடி நிலைமை அதனை அடியோடு மாற்றியமைத்திருக்கின்றது. புகழ்பெற்ற இலங்கையின் தென்பகுதி சுற்றுலா விடுதிகள் பலவற்றில் முன்கூட்டிய பதிவுகள் பல ரத்துச்செய்யப்பட்டு வெறிச்சோடிக் காணப்படுகின்றதை பலரும் தமது சமூக வலைத்தளங்களில் சுட்டிக்காட்டியிருக்கின்றனர்.
Share this article :
Print PDF

Related Post:

 
Support : Eelam5.com | Untamil.com | News4tamil.com
Powered by Eelanila
Copyright © 2011. ஈழநிலா.கொம் - All Rights Reserved
Eelanila.com
Design by: Nilavan Published by: Eelanila