இரணைமடு குளத்தை அபகரிக்க மத்திய அரசு திட்டம்!


வடக்கின் மிகப்பெரிய குளமான இரணைமடுவைக் கையகப்படுத்தும் நோக்கோடு காரியங்கள் கச்சிதமாக ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இரணைமடுக் குளத்தின் மீது அரசின் கழுகுப்பார்வை திரும்பியுள்ளது என வடமாகாண முன்னாள் விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன் தெரிவித்துள்ளார்.
வடக்கின் மிகப்பெரிய குளமான இரணைமடுவைக் கையகப்படுத்தும் நோக்கோடு காரியங்கள் கச்சிதமாக ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இரணைமடுக் குளத்தின் மீது அரசின் கழுகுப்பார்வை திரும்பியுள்ளது என வடமாகாண முன்னாள் விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன் தெரிவித்துள்ளார்.
இரணைமடுக்குளத்தின் 99 ஆம் ஆண்டினை முன்னிட்டு இன்று கிளிநொச்சி கனகாம்பிகை அம்மன் ஆலயத்தின் முன்னால் 99 பானைகள் வைத்துப் பொங்கும் விசேட வழிபாட்டு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றியபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் தொடர்ந்தும் அங்கு உரையாற்றுகையில்,' இரணைமடுக்குளம் மீண்டும் எல்லோரினதும் பேசுபொருளாக ஆகியுள்ளது. கொழும்பு அரசியல் கொந்தளிப்புகளின் மத்தியிலும் நேரமொதுக்கி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கிளிநொச்சிக்கு வந்து இரணைமடுவின் வான் கதவுகளைத் திறந்துவைத்திருக்கிறார். வெள்ள அனர்த்தங்களைப் பார்வையிட வந்த நீர்ப்பாசன அமைச்சர் ஹக்கீம் இவ்வளவு வெள்ளப் பெருக்கு ஏற்பட்ட பிறகும் யாழ்ப்பாண மக்களுக்கு என்ன சொல்லப்போகிறோம். இனிமேலும் இரணைமடுவிலிருந்து யாழ்ப்பாணத்துக்கு குடிநீர் விநியோகிக்கும் திட்டத்தைக் கைவிட இயலாது என்று பேசிச்சென்றிருக்கிறார்.
சில அறிவுஜீவிகள் கிளிநொச்சி வெள்ளப்பெருக்குக்கு மாகாண நீர்ப்பாசனத் திணைக்களத்தைக குறைகூறி விசாரணையை வலியுறுத்துகின்றனர். ஆளுநரால் விசாரணைக் குழுவும் அமைக்கப்பட்டுள்ளது. இவையெல்லாம் வெள்ளப்பெருக்கைச் சாட்டாக வைத்து இரணைமடுக்குளம் மீது அரசின் கழுகுப்பார்வை திரும்பியிருக்கிறது என்பதையே காட்டுகிறது. இதுபற்றி விழிப்பாக இல்லாதுவிட்டால் குளம் பறிபோகும். இதன் பின்விளைவுகள் தமிழ் மக்களுக்குப் பாரதூரமாக அமையும்.
மாகாணசபைச் சட்டங்களின்படி இரண்டு மாகாணங்களுக்கிடையே நீர் பங்கிடப்படுமாக இருந்தால் அந்தக் குளங்கள் மத்திய அரசுக்குச் சொந்தமாகி விடும். வடக்கில் 64 பாரிய, நடுத்தரக்குளங்கள் இருக்கின்றன. இவற்றில் கட்டுக்கரைகுளம், கல்லாறுக்குளம், வியாட்டிக்குளம், ஈரப்பெரியகுளம், பாவற்குளம் என்று பத்துப் பெருங்குளங்கள் வடமத்திய மாகாணத்தில் இருந்து நீரைபெறுவதால் மத்திய அரசுக்குச் சொந்தமாகி விட்டது. இப்போது வடக்கின் மிகப்பெரிய குளமான இரணைமடுவைக் கையகப்படுத்தும் நோக்கோடு காரியங்கள் கச்சிதமாக ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
இரணைமடுவிலிருந்து யாழ்ப்பாணத்துக்கான குடிநீர்த்திட்டத்தை ஆரம்பித்தால் வரட்சியான காலங்களில் நீர்விநியோகம் தடைப்படுவதைச் சாட்டாக வைத்து இரணைமடுவை மகாவலியுடன் இணைக்கும் மறைமுகத் திட்டத்தோடு அரசாங்கம் செயற்பட்டு வருகின்றது. அவ்வாறு மகாவலியுடன் இணைக்கப்பட்டால் இரணைமடு மத்திய அரசுக்குச் சொந்தமாகி விடும். அதன் பிறகு மகாவலி அதிகாரசபை தனக்குள்ள அதிகாரங்களின்படி சிங்களக் குடியேற்றங்களை இங்கு மேற்கொள்ளாது என்பதற்கு எவ்வித உத்தரவாதமும் இல்லை.
மகாவலி நீர்ப்பாசனத்திட்டம் விவசாயத்துக்கும் மின்சக்தி உற்பத்திக்குமாகவே தொடங்கப்பட்டது என்று கூறப்பட்டாலும், அது சிங்களக் குடியேற்றத்தையே மறைமுக இலக்காகக் கொண்டிருந்தது. திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் பிரதேசத்தின் இனவிகிதாசாரத்துக்கு ஏற்ப அல்லாமல் இலங்கையின் இனவிகிதாசாரத்துக்கு ஏற்பவே குடியேற்றங்கள் ஏற்படுத்தப்பட்டன. இதனால் தமிழ்ப்பகுதிகளில் சிங்களகுடியேற்றம் பெருமெடுப்பில் நிகழ்ந்து இனவிகிதாசாரம் மாற்றியமைக்கப்பட்டது.
புதிய அரசியலமைப்பில் மாகாணங்களுக்கிடையே நீர் பங்கிடப்பட்டாலும், குளங்களை மத்திய அரசு சுவீகரிக்காமல் மாகாணங்களே தொடர்ந்தும் பராமரிக்கும் என்று மாற்றம் செய்யப்பட வேண்டும். மகாவலி அதிகாரசபையின் குடியேற்ற அதிகாரங்கள் சட்ட ரீதியாக இல்லாது ஒழிக்கப்பட வேண்டும். இரணைமடுவை நம்பிப் பயிர் செய்யும் விவசாயிகளின் நீர்த்தேவைபூர்த்தி செய்யப்பட வேண்டும். இவற்றின் பின்னரே இரணைமடுவிலிருந்து யாழ்ப்பாணத்துக்குக் குடிநீர் கொண்டுவரும் திட்டத்தைப் பரிசீலிக்க முடியுமென்று எமது தலைவர்கள் அரசாங்கத்துக்கு அழுத்தம் கொடுக்க முன்வர வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.
Share this article :
Print PDF

Related Post:

 
Support : Eelam5.com | Untamil.com | News4tamil.com
Powered by Eelanila
Copyright © 2011. ஈழநிலா.கொம் - All Rights Reserved
Eelanila.com
Design by: Nilavan Published by: Eelanila