இந்த சம்பவத்தால் பொலிஸ்மா அதிபர் பூஜித ஜயசுந்திர கடுமையான அதிருப்தியடைந்துள்ளதுடன், போதைப்பொருளுக்கு எதிரான நடவடிக்கையை பாதுகாப்பு அமைச்சுடன் இணைந்து மேற்கொள்வது குறித்து ஆலோசித்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்றைய சண்டே ரைம்ஸ் ஆங்கில இதழ் இந்த தகவலை வெளியிட்டுள்ளது.
பளையில் கஞசாவுடன் கைதான கடத்தல்காரர்களையே தமிழ் தேசிய கூட்டமைப்பின் பிரமுகர் அழுத்தம் கொடுத்து விடுவித்துள்ளார். இந்த விவகாரம் உயர்மட்டத்திற்கு சென்றதையடுத்து, பளை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி உயர்மட்ட விசாரணையை எதிர்நோக்கியுள்ளார்.
பளை பகுதியில் கஞ்சா கடத்தலில் ஈடுபடும் குழுவொன்றை பற்றிய தகவல் கிடைத்ததும், பொலிஸ் சிறப்பு பிரிவினர் சம்பவ இடத்திற்கு சென்றனர் என்றும், கஞ்சா கடத்தல்காரர்கள் பொலிசாரை தாக்கினார்கள் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், “கஞ்சா கடத்தியமை, பொலிசாரின் கடமைக்கு இடையூறு விளைவித்தமை உள்ளிட்ட குற்றச்சாட்டுக்களை அவர்கள் மீது சுமத்தும் குற்றப்பத்திரம் தயாரிக்கப்பட்டு கொண்டிருந்தபோது, தமிழ் தேசிய கூட்டமைப்பின் சக்தி மிக்க ஒருவர் பொலிஸ் பொறுப்பதிகாரிக்கு தொலைபேசி அழைப்பு ஏற்படுத்தினார்.
“நீங்கள் கைது செய்து வைத்திருப்பவர்கள் எமது ஆதரவாளர்கள். அவர்களை உடனே விடுதலை செய்யுங்கள்“ என கட்டளையிடும் பாணியில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பிரமுகர் தெரிவித்துள்ளார்.
இதையடுத்து, பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியும் மறுபேச்சின்றி கஞ்சா கடத்தல்காரர்களை விடுதலை செய்தார்.
கைதான சந்தேகநபர்களில் ஒருவர், குறிப்பிட்ட அரசியல்வாதியின் வாகன சாரதியின் சகோதரர் ஆவார்.
இந்த சம்பவத்தால் கோபமடைந்த அந்த நிலையத்தை சேர்ந்த பொலிஸ் அதிகாரியொருவர்- ‘இவர்கள் எப்படி ஜனநாயகத்தை காப்பாற்றுகிறார்கள்?’ என கோபமாக கேட்டார்“ என சண்டே ரைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

இந்த விடயத்தை பொலிஸ்மா அதிபரின் கவனத்திற்கு பிராந்திய பொலிஸ் அதிகாரிகள் கொண்டு சென்றுள்ளனர்.
போதைப்பொருள் தடுப்பு விவகாரத்தில் அரசியல்வாதிகளின் தலையீடு அதிகமாக உள்ளதால், இந்த விவகாரத்தை பாதுகாப்பு அமைச்சுடன் இணைந்து முன்னெடுக்க பொலிஸ்மா அதிபர் திட்டமிட்டு வருவதாக அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.