எது எவ்வாறாயினும் இலங்கை அரசுகளுடன் அல்லது ஆட்சியாளர்களுடன் இணங்கிப் போவதென்ற நிலைப்பாடுகளை பின்நோக்கிப் பார்க்கும்போது, அது தமிழ் மக்களுக்குப் பாதமாக இருந்துள்ளதை நாம் அவதானிக்க முடியும்.
அந்தளவுக்கு இந்த நாட்டின் ஆட்சியாளர்கள் ஏதோவொரு வகையில் தமிழர்களை ஏமாற்றுபவர்களாக - தமிழினத்துக்குப் பாதகம் செய்பவர்களாக இருக்கின்றனர்.உதாரணத்துக்கு புதிய அரசியலமைப்புச் சீர்திருத்தம் வெளிவரும் என்ற நம்பிக்கையை தமிழ் அரசியல் தலைமை தமிழ் மக்களிடம் ஏற்படுத்தி வருகின்ற அதேநேரம், முல்லைத்தீவிலும் வவுனியாவிலும் புத்தர் சிலைகளை நிறுவுவதில் பெரும்பான்மை இனத்தின் ஒரு பகுதியினர் தீவிரம் காட்டி வருகின்றனர்.
தமிழர் தாயகம் என்ற ஓர் எல்லைப்பகுதி இருந்துவிடக்கூடாது என்ற நினைப்பில் தமிழர் தாயகம் எங்கும் பெளத்த விகாரைகளை அமைப்பதிலும் அதன் முன்னேற்பாடாக புத்தர் சிலைகளைப் பிரதிஷ்டை செய்வதிலும் பெளத்த சிங்களப் பேரினவாதம் முனைப்புடன் செயலாற்றுகின்றது.
வடக்குக் கிழக்கில் இரண்டாயிரம் புத்தர் சிலைகளை ஸ்தாபிப்பது என்ற திட்டத்தின் மூலம் தமிழர் தாயகம் என்ற பூர்வீகம் இல்லாது செய்யப்படுகின்றது என்பது தெட்டத் தெளிவு.இதன் ஏற்பாடாகவே சண்டித்தனப் போக்கில் புத்தர் சிலைகள் வைக்கப்படுகின்றன.
இதுதான் என்றால், இல்லை. இப்போது வடக்கு மாகாணத்திலுள்ள மத்திய அரசின் நேரடி
வட மாகாணத்தில் இயங்கக்கூடிய இலங்கை மின்சார சபையில் கணிசமான சிங்கள இளைஞர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அந்த வகையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையிலும் கணிசமான சிங்கள இனத்தவர்களுக்கு நியமனம் வழங்கப்பட்டுள்ளதான தகவல்கள் தமிழ் மக்களை வெறுப்படையச் செய்கின்றன.
இதற்கு மேலாக, வட பகுதியில் உள்ள பல்கலைக்கழகங்கள் மற்றும் உயர்கல்வி நிறுவனங்களின் வெற்றிடங்கள் இடமாற்றம் என்பதனூடாக சிங்களவர்களைக் கொண்டு நிரப்பி விட்டு, அவர்களின் இடமாற்றத்தால் தென்பகுதியில் உள்ள பல்கலைக்கழகங்களில் ஏற்பட்டுள்ள வெற்றிடங்கள் பெரும்பான்மை இனத்தின் மூலமாக நிரப்பப்படுகின்ற மிக மோசமான சதி வேலைகளும் நடக்கின்றன.
இத்தகைய செயல்கள் எந்தவகையிலும் நியாயமற்றவை என்பதனுடன் அவர்களுடன் சேர்ந்து வாழ முடியாது என்ற தமிழர்களின் நிலைப்பாட்டை மேலும் உறுதிப்படுத்துவதாக உள்ளது.