2ஆம் இணைப்பு:-
அப்புத்தளையில் எதிர்கட்சி தலைவர் ரணில்விக்கிரமசிங்க உரையாற்றவிருந்த பொதுக்கூட்டத்தின் மீது அவர் அங்கு வருவதற்கு சற்று முன்னர் காடையர் கும்பலொன்று தாக்குதலை மேற்கொண்டுள்ளது.
ஊவா மாகாணசபை எதிர்கட்சி தலைவர் ஹரிண்பெர்ணாண்டோ ஏற்பாடு செய்திருந்த பொதுக்கூட்டத்தின் மீதே தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. அப்புத்தளை நகரசபை தலைவரின் சகோதரரும் அவரது ஆதரவாளர்களுமே இந்த தாக்குதல்களை மேற்கொண்டதாக குற்றம்சாட்டியுள்ள ஹரீண்பெர்ணாண்டோ, அவர்கள் மேடையை சேதப்படுத்தி உள்ளதுடன், கொடிகளை பிடுங்கி எறிந்துள்ளதாகவும், கூட்டத்தை நிறுத்துமாறு அச்சுறுத்தியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
பொலிஸாரின் முன்னிலையில் அரசதரப்பு அரசியல்வாதியொருவர் இந்த தாக்குதல்களை மேற்கொண்டனர்,பொலிஸார் வெறுமனே வேடிக்கை பார்த்தவண்ணமிருந்தனர் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவளை தேர்தல் கண்காணிப்பு அமைப்புகளும் இந்த சம்பவத்தை உறுதிசெய்துள்ளன. அரச தரப்பினரே இந்த தாக்குதலை மேற்கொண்டுள்ளதாகவும்,மின்சாரத்தை துண்டித்து, பொதுச்சொத்துகளுக்கு சேதமேற்படுத்தி உள்ளதாகவும்,இந்த தாக்குதலில் பலர் காயமடைந்து உள்ளதாகவும், ஒருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளதாகவும் தெரிவித்துள்ளனர். தாக்குதலுக்கு காரணமானவர்களை கைதுசெய்துமாறு பவ்ரல் அமைப்பு கோரியுள்ளது.
பொலிஸ் பேச்சாளரும் இந்த தாக்குதலை உறுதிசெய்துள்ளதுடன் எதிர்கட்சி தலைவர் வருவதற்கு சில நிமிடங்களுக்கு முன்னர் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
ஊவா மாகாணத்தின் ஹப்புத்தளையில் ஐ.தே.க. கூட்டத்தின் மீது தாக்குதல் 4 பேர் படுகாயம்:-
ஹப்புத்தளையில் ஐக்கிய தேசியக் கட்சி நடத்திய கூட்டத்தின் மீது இனம்தெரியாத நபர்கள் தாக்குதல் மேற்கொண்டுள்ளனர்.
இதன்போது, 4 பேர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இத்தாக்குதல் சம்பவத்தையடுத்து நீண்ட நேரத்தின் பின் பொலிஸார் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக சம்பவ இடத்திற்கு சென்றுள்ளதாகவும் கூட்டம் இடைநிறுத்தப்பட்டு உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
மேலும் இத்தாக்குதலின் போது, வாகனங்களும் சேதமடைந்துள்ளன.