பாலித தேவரப்பெரும எம்பியின் செயல் இனவாத மற்றும் ஜனநாயக விரோதமானது: மனோ ரணிலிடம் தெரிவிப்பு

களுத்துறை மாவட்ட ஐதேக எம்பி பாலித தேவரப்பெருமவின் செயல் வன்முறை நோக்கம் கொண்ட ஜனநாயக விரோதமானதுடன் இனவாத நோக்கமும் கொண்டது என பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடம் ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.
 இது தொடர்பில் மனோ கணேசன் ஊடகங்களுக்கு கூறியுள்ளதாவது,
தாக்குதலுக்கும், அவமானத்துக்கும் உள்ளான களுத்துறை மாவட்ட பாலிந்தநுவர பிரதேச சபை உறுப்பினர் முருகன் புஸ்பகுமார், தன் மீது நடததப்பட்ட சம்பவங்கள் தொடர்பில் என் கவனத்துக்கு கொண்டு வந்துள்ளார்.
தேர்தல் முடிவுகளுக்கு பின்னர் அவர் ஐதேக ஆதரவாளர்களால் ஜனவரி 9ம் திகதியும், ஜனவரி 15ம் திகதியும் என இரண்டு முறை தாக்குதல்களுக்கு உள்ளாகியுள்ளார். முதலாவது தாக்குதல் தொடர்பில் நான் ஏற்கனவே பாலிந்தநுவர பிரதேச சபை உள்வரும் அகலவத்தை தொகுதி ஐதேக அமைப்பாளர் கித்சிறி கஹடபிடியவிடம் உரையாடி அந்த பிரச்சினையை முடிவுக்கு கொண்டு வந்தேன். இந்நிலையில் இரண்டாம் முறையும் அவர் தாக்கப்பட்டுள்ளார்.
தாக்குதல் சம்பவத்தில் காயமடைந்த பிரதேச சபை உறுப்பினர் மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுள்ளார். இரண்டாம் முறை தாக்குதலின் போது ஐதேக எம்பி பாலித தேவரப்பெரும, பாலிந்தநுவர பிரதேச சபை உறுப்பினர் முருகன் புஸ்பகுமாரை அகலவத்தை நகர மத்தியில் முழந்தாளிட வைத்து, அவமானப்படுத்தி தாக்குதல் நடத்தியுள்ளார்.
இதை தொலைக்காட்சி செய்திகளிலும் காணமுடிந்தது. எம்பி பாலித தேவரப்பெருமவும், அவரது மகன் சாந்த தேவரப்பெருமவும், தன்னை தாக்கியதுடன் இனவாத நோக்கில் இழிவு படுத்தும் வார்த்தை பிரயோகமும் செய்தனர் என பிரதேச சபை உறுப்பினர் முருகன் புஸ்பகுமார் என்னிடம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் பணிப்பின் பேரில் காவல்துறை நடவடிக்கை எடுத்துள்ளது. தேர்தல் ஆணையக அதிகாரிகளும் முருகன் புஷ்பகுமாரை சந்தித்து வாக்குமூலம் பெற்று, இது தொடர்பில் கவனம் செலுத்தியுள்ளார்கள்.
முருகன் புஷ்பகுமார், ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி உறுப்பினர் ஆகும். அவர் மீது தாக்குதல் நடத்தவும், இனவாத வார்த்தை பிரயோகம் செய்யவும் அவரது கட்சி உறுப்புரிமையும், தேர்தல் கால நிலைப்பாடும் காரணமாக ஒருபோதும் அமையாது என்பது நமது அரசாங்கத்தின் மற்றும் பிரதமரின் நிலைப்பாடு. நடந்த சம்பவம் தனியொரு எம்பியின் செயலாகும்.
இது தொடர்பில் சம்பந்தப்பட்ட எம்பி மீது கட்சி மற்றும் அரசாங்க மட்டத்தில் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடம் கோரியுள்ளேன்.
Share this article :
Print PDF

Related Post:

 
Support : Eelam5.com | Untamil.com | News4tamil.com
Powered by Eelanila
Copyright © 2011. ஈழநிலா.கொம் - All Rights Reserved
Eelanila.com
Design by: Nilavan Published by: Eelanila