அரசாங்கத்துள் நடப்பவைகளை பத்திரிகைகள் வாயிலாகவே தாம் அறிய நேரிடுவதாக ஜனாதிபதி கூறுகிறார். அப்படியானால் அவருக்கு பத்திரிகை விநியோகிக்கும் ஆளைக் கடத்தினால் அவருக்குத் தெரியாமலே அரசாங்கம் கவிழ்ந்துவிடும் என்கிறார் மகிந்த. ஆட்களைக் கடத்துவதில் தாம் கைதேர்ந்தவர் என்பதை மகிந்த தம்மை அறியாமலே ஒப்புக் கொண்டுள்ளார்.
நுணலும் தன் வாயால் கெடுமாம்.
தமிழ் தேசிய கூட்டமைப்பு ரணிலுடன் போகுமா அல்லது, மைத்திரி பக்கம் சாயுமா என்ற கேள்;வியுடன் கடந்த வாரக் கட்டுரையின் இறுதிப்பகுதி அமைந்திருந்தது.
இதனை விரைந்து முடிவெடுக்க வேண்டிய காலம் நெருங்கி வருகிறதுபோலத் தெரிகிறது என்ற முன்னுரையுடன் இந்த வாரக் கட்டுரையை ஆரம்பிப்பது காலத்தின் கட்டாயமாகியுள்ளது.
மைத்திரி தரப்புக்கும் ரணில் அணிக்குமிடையிலான பனிப்புயல், பிணை முறிப்பு அறிக்கையைத் தொடர்ந்து சூறாவளியாக எழுச்சி கொண்டுள்ளது.
இரு தரப்பின் நாட்டாண்மைக்காரர்களும் தங்களைத் திருடர்கள் என்று ஒப்புக் கொள்ளாதவாறு தங்கள் கணைகளை மாறி மாறி தொடுத்தவாறு உள்ளனர்.
இதுவரை தம்மை ஒரு சாதுவாகக் காட்டிக்கொண்ட மைத்திரி, இப்போது விசுவாமித்திரர் கோலங்கொண்டு காடு கொள்ளாத நீதியாளராகக் காட்ட முனைகிறார்.
சில நாட்களுக்கு முன்னர் நாடாளுமன்றத்தில் கைகலப்பு ஏற்பட்டபோது, நீயா நானா கள்வன் என்ற குரல் இருதரப்பிலிருந்தும் வேறுபாடின்றி எதிரொலித்தது.
மகிந்த அரசாட்சிக் காலத்தில் களவும் கொள்ளையும் தாராளமாக இடம்பெற்றதென்றால், அப்போது அந்தப் பத்தாண்டு அரசில் அங்கம் வகித்த இன்றைய ஜனாதிபதி மைத்திரியும் ஊழல்வாதிதானென்பது ஐக்கிய தேசியக்கட்சியின் புதிய கண்டுபிடிப்பு.
இப்போது மகிந்தவை விட்டுப் பிரிந்திருப்பதால், மைத்திரியின் கரங்கள் கறைபடியாதவை என்று அர்த்தப்படாதென்பது ரணில் தரப்பின் ஆர்ப்பாட்டமற்ற நிலைப்பாடு.
இதற்கு மாறாக, பிணைமுறி மோசடியில் அகப்பட்டவர்கள், அதன் அறிக்கையில் பெயர் குறிப்பிடப்பட்டவர்கள் அனைவரும் ஐக்கிய தேசிய கட்சியினர் என்பதால் அவர்கள் தண்டிக்கப்பட வேண்டுமென்பது மைத்திரி தரப்பினரின் வாதம்.
இந்தக் குழப்பத்தின் எதிரொலியாக, இந்த வார அமைச்சரவைக் கூட்டத்திலிருந்து ஜனாதிபதி வெளிநடப்புச் செய்துவிட்டு, தமது அறைக்குள் சென்று நி~;டையில் இருக்க நேர்ந்தது.
இலங்கையின் அரசியல் வரலாற்றில் ஜனாதிபதி ஒருவர் அமைச்சரவைக் கூட்டத்திலிருந்து வெளிநடப்புச் செய்தது வரலாற்று நிகழ்வாதலால், இது கின்னஸ் புத்தகத்தில் பதியப்பட வேண்டியது.
இந்த வெளிநடப்புத் தொடர்பாக ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த அமைச்சரவைப் பேச்சாளர் ராஜித சேனரத்ன, இயற்கையின் அழைப்புக் காரணமாகவே (கழிப்பறைக்குச் செல்வதற்கு) கூட்டத்திலிருந்து ஜனாதிபதி இடைநடுவில் சென்றதாகத் தெரிவித்தமை இந்த வருடத்தின் அதியுன்னத ஜோக் எனலாம்.
யார் என்னதான் சொன்னாலும் ஜனாதிபதி தமது முடிவிலிருந்து விட்டுக்கொடுப்பதாகத் தெரியவில்லை. இதற்குச் சான்றாக சில விடயங்களைக் கவனிக்கலாம்.
பிணைமுறி ஊழல் மூலம் சூறையாடப்பட்ட பணத்தை எப்படியும் மீள அறவிட்டே தீருவேன் என்று சூளுரைத்துள்ள மைத்திரி, அவர்களுக்கு நிச்சயம் தண்டனை வழங்கப்பட்டே தீருமென உறுதி கூறியுள்ளார்.
ரணிலின் நெருங்கிய நண்பரான மத்திய வங்கியின் முன்னாள் ஆளுனர் அர்ஜூன மகேந்திரன், இவரது மருமகன் உட்பட ஐக்கிய தேசிய கட்சியின் பிரதானிகள் சிலர் இப்பொறியில் அகப்பட்டுள்ளனர்.
அடுத்த மாதம் நடைபெறவிருக்கும் உள்;ராட்சிச் சபைகளின் தேர்தல் பரப்புரைக்கு, மகிந்த அணியினருக்கு சோளப்பொரியாக பிணைமுறி ஊழல் அறிக்கை கிடைத்துள்ளது.
இதே அறிக்கையை நல்ல ஆயுதமாக்கி ரணில் தரப்பை இத்தேர்தலில் மண் கவ்வ வைக்க மைத்திரி தரப்பும் தலையால் மண் எடுக்கிறது.
மொத்தத்தில், மைத்திரி அணியும் மகிந்த அணியும் தனித்தனியாக பிணைமுறி அறிக்கையை முன்னால் நிறுத்தி, ரணிலுக்குப் பாரிய நெருக்கடி கொடுக்க ஆரம்பித்துள்ளனர்.
பிணைமுறி ஊழல் விசாரணை அறிக்கை லஞ்ச ஊழல் விசாரணைக் குழுவின் முன்னாலும் ஜனாதிபதியால் வைக்கப்பட்டுள்ளது.
இதற்கப்பால் இன்னொரு முக்கிய விடயத்தையும் சகல நிறைவேற்று அதிகாரங்களையும் கொண்ட ஜனாதிபதி மைத்திரி வெட்கமின்றி பகிரங்கமாகத் தெரிவித்துள்ளார்.
அரசாங்கத்துள் நடைபெறும் பல விடயங்கள் தமக்கு முற்கூட்டியே தெரிவிக்கப்படுவதில்லை என்பது இவரது பாரிய குற்றச்சாட்டு.
இது உண்மையோ, பொய்யோ என்று ஆராய்வதற்கு முன்னர், சொல்வது ஜனாதிபதியாகவே இருப்பதால் அதனை நம்பியேயாக வேண்டும்.
தமக்குத் தெரியாது நடைபெறும் விடயங்களை பத்திரிகைகள் வாயிலாகவே தாம் அறிந்து கொள்வதாகவும் இவர் தெரிவிப்பதைப் பார்க்கும்போது, ஜனாதிபதிக்குமா இந்த நிலை என்று வாய் முணுமுணுக்கிறது.
தாம் கூறும் கூற்றுக்கு நிரூபணமாக இரண்டு விடயங்களை ஜனாதிபதி முன்வைத்துள்ளார்:
மதுபான விற்பனை நிலையங்களைத் திறக்கும் நேர அதிகரிப்பு, இங்கு பெண்கள் பணிபுரிவது மற்றும் மதுபானங்களைக் கொள்வனவு செய்வதை அனுமதிப்பது தொடர்பாக நிதியமைச்சர் மங்கள சமரவீரவின் வர்த்தமானி அறிவித்தல் வெளியானதை பத்திரிகைகளைப் பார்த்தே தாம் அறிந்து கொண்டதாகவும் தெரிவித்த இவர், அதனை உடனடியாக ரத்துச்செய்ய உத்தரவிட்டார்.
ரவி கருணநாயக்க நிதி அமைச்சராக இருந்தபோது லொத்தர் சீட்டுகளின் விலையைத் திடீரென அதிகரித்ததையும், பத்திரிகைகள் மூலம் அறிந்தே தாம் அதனை ரத்துச் செய்ததாகவும் மைத்திரி தெரிவித்தார்.
மங்கள சமரவீரவும், ரவி கருணநாயக்கவும் ரணிலின் ஐக்கிய தேசிய கட்சியைச் சேர்ந்தவர்களென்பதை இங்கே மறவாது கவனிக்க வேண்டும்.
அதேசமயம், தமக்குத் தெரியாமலே பல விடயங்கள் நடைபெறுகின்றன என்ற மைத்திரியின் அறிவிப்பை முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச எள்ளிநகையாடியுள்ளார்.
மைத்திரிக்குப் பத்திரிகை போடுபவரை கடத்திச் சென்றுவிட்டால் அவருக்குத் தெரியாமலே எல்லாம் நடைபெற்று அரசாங்கம் கவிழ்ந்துவிடுமென்பது மகிந்த வெளியிட்ட கருத்து.
இக்கருத்தினூடாக, ஆட்கடத்தல் விடயங்களில் (வெள்ளைவான் கடத்தல் உட்பட) தாம் கைதேர்ந்த விண்ணன் என்பதை மகிந்த ராஜபக்ச ஒப்புக் கொண்டுள்ளதை நோக்க முடிகின்றது.
நுணலும் தன் வாயால் கெடும் என்பார்கள்.
இலங்கை அரசியலில் இந்த வாரம் முக்கியமாகப் பார்க்கப்பட வேண்டிய இன்னொன்று, மைத்திரியின் ஜனாதிபதிப் பதவிக்காலம் தொடர்பாக உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு.
18வது அரசியல் திருத்தம் நடைமுறையிலிருந்தபோது ஜனாதிபதியின் பதவிக்காலம் ஆறு ஆண்டுகளாக இருந்ததை, 2015 ஜனவரியில் தாம் பதவிக்கு வந்ததும் 19வது திருத்தத்தினூடாக ஐந்து ஆண்டுகளாகக் குறைத்தவர் மைத்திரி.
ஆனால், தமது மூன்றாண்டு கால முடிவில் தம் பதவிக்காலம் ஐந்தா அல்லது ஆறு ஆண்டுகளா என்ற சந்தேகம் ஏற்பட்டதால் உச்சநீதிமன்றத்தின் ஆலோசனையை இவர் நாடினார்.
நல்லாட்சி அரசின் பங்காளிகளான ஐக்கிய தேசிய கட்சியுடன் இதுபற்றி அவர் மூச்சுக்கூட விடவில்லை. மக்கள் வழங்கிய ஆணை ஐந்த ஆண்டுகளே என்பதையும் பதவி ஆசையால் அவர் மறந்துவிட்டார்.
முன்னைய மூன்ற ஜனாதிபதிகள் இதே கதிரை ஆசையால் கவிழ்ந்து வீழ்ந்ததையும் அவர் நினைக்கவில்லை.
ஐந்து உச்ச நீதிமன்ற நீதியரசர்கள் இவரது கோரிக்கையை பரிசீலனை செய்யக் கூடியபோது, சட்டமா அதிபர் இவர்கள் முன் தோன்றி மைத்திரியின் ஆட்சிக்காலம் ஆறு ஆண்டுகளுக்கே என்று வாதாடினார்.
அந்த நீதிபதிகள் அதனை ஏற்காது, ஐந்தாண்டுகளுக்கு மட்டுமே என்று தீர்ப்பு வழங்கிவிட்டனர்.
இதனையடுத்து மைத்திரி தமது பதவிக்காலம் பற்றி மௌனவிரதம் மேற்கொள்ள ஆரம்பித்துவிட்டார். ஆனால் அவரது சகபாடிகள் சும்மா இருக்கவில்லை.
ஜனாதிபதி ஆட்சி முறையை ஒழிப்பேன் என்று கூறிக்கொண்டு பதவிக்கு வந்த மைத்திரி அதனை மறந்துவிட்டார்.
அதேசமயம், இவர் மீண்டும் அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவாரென சகபாடிகள் தெரிவிக்க ஆரம்பித்துள்ளனர்.
ஒருபுறத்தே இந்தச் சதிராட்டங்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கையில், பிரதமர் பதவியை வகிக்கும் ரணில் பிணைமுறிப்புத் தொடர்பாக குயுக்தியான ஓர் அறிக்கையை வெளியிட்டுளார்.
பிணைமுறி விசாரணைக்குழு அதன் அறிக்கையில் தெரிவித்த சிபார்சுகளை ஆராய்ந்து தமக்கு அறிக்கை சமர்ப்பிக்க ஐக்கிய தேசிய கட்சியைச் சார்ந்த அமைச்சர் திலக் மாரப்பன தலைமையில் தாம் அமைத்த குழு தரும் அறிக்கையின் அடிப்படையில் குற்றவாளிகளாகக் காணப்படும் ஐக்கிய தேசிய கட்சியினருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என்பது ரணிலின் அறிவிப்பு.
பிணைமுறி விசாரணைக்குழு அறிக்கையின் அடிப்படையில் எந்த விசாரணையும் கிடையாது என்பதையும், தமது கட்சிக் குழுவின் அறிக்கையின் அடிப்படையிலேயே எதுவும் தீர்மானிக்கப்படும் என்பதுவும் ரணிலின் அறிவிப்பின் தாற்பரியம்.
இது, பிணைமுறி விசாரணைக்குழு அறிக்கையில் தமக்கு நம்பிக்கை இல்லையென்பதை ரணில் மறைமுகமாகச் சொல்வதாகும்.
சீட்டாட்டத்தில் துரும்பு என்பதுதான் வெற்றி தோல்வியை நிச்சயிப்பது.
பிணைமுறி அறிக்கையின் தீர்ப்பும் தண்டனையும் இப்போது ரணிலின் கைகளில் இருக்கிறதா? அல்லது மைத்திரியின் மடியில் இருக்கிறதா?
இங்கு எழுந்து நிற்கும் முக்கிய கேள்வி, தமிழ் தேசிய கூட்டமைப்பு ரணிலுடன் போகுமா? அல்லது மைத்திரியின் பக்கம் சாயுமா?