வடக்கு மக்களின் நிலங்களை இராணுவத்தினர் கைப்பற்றி அந்த இடங்களில் விவசாயம் மேற்கொண்டு வருகின்றனர். இவ்வாறு மேற்கொள்ளப்படும் விவசாய உற்பத்திப் பொருட்களை சந்தைக்குக் கொண்டு வந்து விற்பனை செய்கின்றனர். இவர்களுக்கு விவசாயக் காணிகளை கொள்வனவு செய்வதற்கான செலவு இல்லை. விவசாய செய்கைக்கான செலவினை அரசாங்கம் வழங்குகின்றது. அரசாங்க வாகனங்கள் பொருட்களை சந்தைப்படுத்துவதற்கான போக்குவரத்திற்குப் பயன்படுத்தப்படுகின்றன. சாதாரணமாக ஒரு விவசாயிக்கு ஒரு கிலோ வெங்காயத்தினை உற்பத்தி செய்வதற்கு 80 ரூபா செலவாகின்றது. ஆனால் இராணுவத்திற்கு 40 ரூபா மட்டுமே செலவாகின்றது. இராணுவத்தினர் குறித்த வெங்காய உற்பத்திகளை 50 ரூபாவிற்கு சந்தைப்படுத்தும் போது ஏனைய விவசாயிகளின் நிலை என்னவாகின்றது? இராணுவத்தினால் விவசாயச் செய்கைக்கு எனக் கைப்பற்றப்பட்டுள்ள பொது மக்களின் காணிகளை திருப்பிக் கொடுக்க வேண்டும் என்று நாங்கள் கோரிக்கை விடுக்கின்றோம். மக்களின் இடங்களை சுவீகரித்து கோல்ப் மைதானம் அமைக்கப்பட்டுள்ளது. கோல்ப் மைத்தானத்திற்கும் பாதுகாப்புப் படைக்கும் என்ன சம்பந்தம் இருக்கின்றது? அது மட்டுமல்ல பொது மக்களின் நிலங்களில் ஹொட்டல்கள் கட்டப்பட்டுள்ளன. இராணுவம் ஹொட்டல்களைக் கட்டுவதற்கு யார் அதிகாரம் கொடுத்தது? இது மக்களை மேலும் கஷ்டத்தில் தள்ளுவதாகும். ஆகவே பாதுகாப்புக்குத் தேவையான நிலங்களை வைத்துக் கொண்டு மற்றைய இடங்களை மக்களிடம் ஒப்படைக்க வேண்டும். இவர்கள் அரசியல் பலத்திற்காக அரசியல் செய்கின்றார்கள். யுத்தம் முடிவடைந்து ஐந்து வருடங்கள் ஆகின்றது. ஒரு இலட்சத்திற்கு மேலான மக்கள் தமது சொந்த இடங்களுக்குச் செல்ல முடியாது வேறு இடங்களில் கஷ்டப்படுகின்றனர். இவை குறித்து சர்வதேசத்துடன் கலந்தாலோசித்து முடிவுகளை எடுக்க வேண்டும். பிரச்சனை தீர்க்கப்பட வேண்டியது இலங்கையில் தான். இந்த மக்களின் பிரச்சனைகளை முடிவுக்குக் கொண்டு வரவில்லை என்றால், அவர்களின் இதயத்தின் வலிக்கு மருந்து கொடுக்கவில்லை என்றால் இந்தப் பிரச்சனை ஒரு நாளும் தீராது. இதற்கு ஒரே தீர்வு பாதுகாப்புக்குரிய பகுதிகளில் மட்டும் இராணுவத்தினரை வைத்துக் கொண்டு ஏனைய பகுதிகளில் இருந்து அகற்றிவிடுவதே சிறந்தது எனவும் அவர் தெரிவித்தார். |
வடக்கில் தேவையற்ற பகுதிகளில் இருந்து இராணுவத்தை விலக்க வேண்டும்! - ஜேவிபி கோரிக்கை
Related Post:
Add Comments