22 ஜனவரி 2015 கடைசியாக தரவேற்றப்பட்டது 16:56 ஜிஎம்டி
இலங்கையின் முன்னாள் பாதுகாப்புச் செயலாளரும் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் சகோதரருமான கோட்டாபய ராஜபக்ஷவின் பெயரில் உள்ள வங்கிக் கணக்கொன்றில் சுமார் 8 பில்லியன் ரூபா பணம் இருந்த விவகாரம் தொடர்ந்தும் சர்ச்சைக்குரிய பிரச்சனையாக உருவெடுத்துவருகின்றது.
இலங்கை வங்கியின் தப்ரபேன் கிளையில் கோட்டாபய ராஜபக்ஷவின் பெயரில் இருந்த குறித்த பணம், நாட்டின் திறைசேரி அல்லது கருவூலம் என்று அழைக்கப்படும் அரச பொது நிதிக்குச் சேரவேண்டியது என்று புதிய நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க அண்மையில் தெரிவித்திருந்தார்.
இந்தப் பணத்தை உடனடியாக திறைசேரிக்கு மாற்றுவதற்கும் நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க நடவடிக்கை எடுத்திருந்தார்.
இராணுவத் தலைமையகத்தின் காணியை விற்ற பணமே அப்போதைய பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவின் பெயரில் உள்ள வங்கிக் கணக்கில் இருந்துவந்துள்ளது
அமைச்சரவையின் அனுமதியுடன் பாதுகாப்பு அமைச்சினாலேயே இந்த வங்கிக் கணக்கில் பணம் வைப்பிலிடப்பட்டிருந்ததாகவும் அந்தப் பணத்தைக் கொண்டு கொழும்பின் புறநகர்ப் பகுதியான பெலவத்தையில் இராணுவத் தலைமையகம் அமைக்கப்பட்டுவருதாகவும் கோட்டாபய ராஜபக்ஷ ஊடகங்களுக்கு அண்மையில் விளக்கமளித்திருந்தார்.
கோட்டாபய ராஜபக்ஷவின் இந்தக் கருத்தை நியாயப்படுத்தும் விதமாக புதிய பாதுகாப்புச் செயலாளரும் இராணுவப் பேச்சாளரும் ஊடக அறிக்கைகளை வெளியிட்டிருந்தனர்.
'புதிய அரசாங்கத்தின் நிதிக் கொள்கையின்படியே, குறித்த பணம் மீண்டும் திறைசேரிக்கு மாற்றப்படுவதாக புதிய பாதுகாப்புச் செயலாளர் பி.எம்.யூ.வி. பஸ்நாயக்க அண்மையில் கூறியிருந்தார்.
ஆனால், அரசின் கருவூலத்துக்குச் சேரவேண்டிய பணத்தை கோட்டாபய ராஜபக்ஷ தனது சொந்தப் பெயரில் உள்ள வங்கிக் கணக்கில் வைத்திருந்தமை சட்டவிரோத நடவடிக்கை என்று புதிய அரசாங்கத்தின் அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் ராஜித்த சேனாரத்ன இன்றைய முதலாவது ஊடகவியலாளர் சந்திப்பில் அறிவித்திருக்கின்றார்.
அரசின் நிதிக் கொள்கை என்னவென்று தெரியாமல் புதிய பாதுகாப்புச் செயலாளர் கருத்து வெளியிட்டுள்ளதாகவும் ராஜித்த சேனாரத்ன கூறினார்.
'அரசின் நிதிக்கொள்கையை யாராலும் மாற்றமுடியாது. அரசாங்கத்துக்கு அரசாங்கம் நிதிக்கொள்கை மாற்றமடையாது...அமைச்சுக்கு ஐந்து சதம் பணம் வந்தாலும்கூட அந்தப் பணத்தை திறைசேரிக்குத் தான் அனுப்பவேண்டும். அந்தப் பணத்தை பாதுகாப்புச் செயலாளரின் வங்கிக் கணக்கில் மட்டுமல்ல அமைச்சின் பெயரில்கூட வைத்திருக்க முடியாது' என்றார் ராஜித்த சேனாரத்ன.
அரசின் நிதிக் கொள்கையை மீறிய கோட்டாபய ராஜபக்ஷவை காப்பாற்றும் விதத்தில் புதிய பாதுகாப்புச் செயலாளர் பஸ்நாயக்க கருத்து வெளியிட்டுள்ளதாகவும் அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் ராஜித்த சேனாரத்ன கூறினார்.
'அரசசேவை அதிகாரிகள் அனுமதி பெறவேண்டும்'
புதிய பாதுகாப்புச் செயலாளர் பஸ்நாயக்க இந்தப் பிரச்சனை தொடர்பில் நேற்றைய அமைச்சரவைக் கூட்டத்தில் கவனம் செலுத்தப்பட்டபோது, 'அரசசேவை அதிகாரிகள் இனிமேல் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும்போது அரசசேவை சட்டதிட்டங்களின்படி நடந்துகொள்ள வேண்டும்' என்று தீர்மானிக்கப்பட்டதாகக் கூறினார்.
'அரசசேவை அதிகாரிகள் தங்களின் அமைச்சு செயலாளரின் எழுத்துமூல அனுமதியின்றி எந்தவொரு ஊடகத்துக்கும் கருத்துவெளியிட முடியாது' என்று தீர்மானிக்கப்பட்டுள்ளதாக ராஜித்த சேனாரத்ன தெரிவித்தார்.
ஊடகங்களுக்கு கருத்து அதிகாரபூர்வ கருத்து வெளியிடுவதிலேயே அரச அதிகாரிகளுக்கு இந்தத் தடை உள்ளதாகவும் ஊடகவியலாளர்கள் அதிகாரிகளிடமிருந்து தகவல்களைப் பெற்றுக்கொள்வதில் தடையேதும் இல்லை என்றும் அமைச்சர் கூறினார்.
அவ்வாறே, யுத்தம் இல்லாத சூழ்நிலையில் பொலிஸ் பேச்சாளரைத் தவிர, ஏனைய படைகளான இராணுவம், கடற்படை மற்றும் விமானப்படை பேச்சாளர்களின் பதவிகள் தொடர்ந்தும் தேவையில்லை என்றும் அமைச்சரவையில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, இலங்கை இராணுவப் பேச்சாளர் ருவன் வணிகசூரியவை நீக்கிவிட்டு அந்தப் பதவிக்கு தற்காலிகமாக புதிய பேச்சாளராக பிரிகேடியர் கே.ஜே. ஜயவீர நியமிக்கப்பட்டுள்ளதாக இராணுவத் தலைமையகம் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.