வடக்கில் அதிகரித்துள்ள கஞ்சா விற்பனையினை முன்னாள் போராளிகள்,மற்றும் தமிழ் தேசிய ஆதரவாளர்கள் தலையில் கட்டியடிக்க இலங்கை காவல்துறை முற்பட்டுள்ளது.அவ்வகையில் மாவீரர் தினத்தன்று புன்னாலைக்கட்டுவான் பகுதியில் மாவீரர் தின முன்னேற்பாடுகளில் ஈடுபட்ட இளைஞர்கள் மீது சுன்னாகம் காவல்துறை தாக்குதல் நடத்தியுள்ளது.இதனையடுத்து சம்பவத்தை அறிய வருகை தந்த வர்த்தகரை தாக்கி அவரது மோட்டார் சைக்கிளில் இருந்து 200 கிராம் கஞ்சாவை மீட்டதாக சுன்னாகம் காவல்துறை வழக்கு தாக்கல் செய்துள்ளது. இது தொடர்பில் பாதிக்கப்பட்ட வர்த்தகர் யாழ்.மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடொன்றை செய்துள்ளார்.
ஏற்கனவே தமிழரசுக்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களான சிறீதரன்,சரவணபவனின் அனுசரணையுடன் 2011ஆம் ஆண்டு மாவீரர் தின நிகழ்வுகளை ஒழுங்கமைத்தவர்கள் என அப்பாவி இளைஞர்களை சுன்னாகம் காவல்துறை கைது செய்திருந்தது.அதில் சுமணன் எனும் இளைஞனை பிடித்து ,திருட்டு குற்ற சாட்டை பதிவு செய்து , சித்திரவதை செய்து படுகொலை செய்திருந்தனர்.அத்துடன் சடலத்தை இரணைமடு குளத்தில் வீசி விட்டு , தப்பி சென்று குளத்தில் பாய்ந்து தற்கொலை செய்ததாக செய்தி பரப்பப்பட்டிருந்தது.
இதில் சித்திரவதை குற்ற சாட்டுக்கு எதிராக யாழ்.மேல் நீதிமன்றில் நடைபெற்ற வழக்கு விசாரணைகளில் அப்போதைய சுன்னாக காவல்நிலைய பொறுப்பதிகாரி சிந்தக்க பண்டார உள்ளிட்ட ஆறு பேரை குற்றவாளியாக மன்று கண்டது.அத்துடன் கொலை குற்ற சாட்டு தொடர்பில் கிளிநொச்சி நீதிமன்றில் வழக்கு விசாரணை நடைபெற்றும் வருகின்றது.
இந்நிலையில் தற்போது புதிதாக கஞ்சா வைத்து கைது நாடகங்கள் அரங்கேற்றப்பட்டுவருகின்றது.