ஜெனிவா அறிக்கை ஒத்திவைக்கப்பட்டமை தொடர்பான அறிக்கை - தமிழ் சிவில் சமூக அமையம்

ஜெனிவா அறிக்கை ஒத்திவைக்கப்பட்டமை தொடர்பான அறிக்கை -  தமிழ் சிவில் சமூக அமையம்:-
 தமிழ் சிவில் சமூக அமையம்
Tamil Civil Society Forum
 


வவுனியா,
20 பெப்ரவரி 2015


இலங்கை தொடர்பான ஐ. நா. மனித உரிமை ஆணையாளர் அலுவலகத்தின் விசாரணை அறிக்கையை வெளியிடும் திகதி ஆறு மாதங்களுக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ள தீர்மானம் எம்மை ஆழ்ந்த கவலைக்கு உட்படுத்தியுள்ளது. ஐ.நா மனித உரிமைப் பேரவையின் இத்தீர்மானம் ஐ. நா மனித உரிமை ஆணையாளரின் பரிந்துரையின் பெயரில் எடுக்கப்பட்டமை எமக்கு கூடுதல் வருத்தத்தைத் தருகின்றது. பாதிக்கப்பட்ட மக்கள் இத்தாமதத்தினை தேவையற்றதென்று கருதுகின்றனர். சர்வதேச வழிமுறையின் ஊடாக நீதியைப் பெற்றுக் கொள்வதற்கான வழிகள் யாவும் மூடப்பட்டு விட்டனவோ என்றும் எண்ணத் தலைப்படுகின்றனர். நாட்டிற்க்கு உட்பட்டு நீதி கிடைக்கப் பெற மாட்டாது என்பது அவர்கள் முடிவாக இருக்க, இந்தத் தாமதம் முழுமையாக பொறுப்புக்கூறலின் சாத்தியமற்ற தன்மையை பறை சாற்றுவதாக அவர்கள அச்சம் கொள்கின்றனர்.

முழுத் தமிழ்ச் சமூகத்தின் ஏகோபித்த நிலைப்பாட்டடை உதாசீனம் செய்யும் வகையில்  அறிக்கையை தாமதப்படுத்தும் முடிவை ஐ.நா மனித உரிமைப் பேரவையும், ஐ. நா மனித உரிமை ஆணையாளரும், உறுப்பு நாடுகளும் எடுத்துள்ளனர் என்பதனை நாம் மிகுந்த ஏமாற்றத்தோடு சுட்டிக் காட்டுகின்றோம். இந்த அறிவிப்பானது செப்டம்பர் 2008 இல் கிளிநொச்சியிலிருந்து மக்களின் எதிர்ப்புக்கு மத்தியில், போர் பிரதேசங்களிலிருந்து மக்களைக் காக்கும் கடமையை உதாசீனம் செய்து ஐ.நா  வெளியேறிய சம்பவத்தை எமக்கு ஞாபகப்படுத்துகின்றது.

ஐ. நா. மனித உரிமை ஆணையாளர் இவ்வறிக்கையை கால தாமதத்துக்கு உட்படுத்துவதற்கு இரண்டு காரணங்களைக் கூறுகிறார்:

1.    புதிதாகத் தகவல் கிடைப்பதற்க்கான வாய்ப்பு.
2.    புதிய அரசாங்கம் பல்வேறு பட்ட மனித உரிமை விடயங்களில் ஒத்துழைப்பதற்கான வாய்ப்பு.

முதலாவது காரணத்தைப் பொறுத்த வரையில், புதிதாகத் தகவல்கள் கிடைக்கப் பெற வேண்டுமாயின் ஐ. நா விசாரணைக் குழுவானது இலங்கைக்கு வருகை தந்து நேரடியாக எமது மக்களின் சாட்சியத்தை பெற்றுக் கொள்ள வாய்ப்பு இருக்க வேண்டும். இலங்கை வெளியுறவு அமைச்சர் ஐ. நா. மனித உரிமை ஆணையாளருக்கு 13 பெப்ரவரி 2015 அன்று எழுதிய கடிதத்தில் ஐ. நா விசாரணைக்கு ஒத்துழைப்பது பற்றி எதுவும் குறிப்பிடவில்லை என்பதழசை; சுட்டிக் காட்ட விரும்புகின்றோம்.

இரண்டாவது காரணத்தைப் பொறுத்த வரையில் அறிக்கை வெளியிடப்படுவதற்கு இது ஒரு காரணமாக இருக்க வேண்டியதில்லை என்றே நாம் கருதுகிறோம். சமகாலத்தில் மனித உரிமை நிலவரத்தில் முன்னேற்றத்தை ஏற்படுத்துவதற்கும் கடந்த காலம் தொடர்பான விசாரணையின் அறிக்கை வெளியிடப்படு வதற்குமிடையிலான தொடர்பு என்ன? தொடர்ந்து நிகழும் மீறல்களை கண்காணிக்கும் ஐ.நா. விசாரணையின் அதிகாரத்தைப் பற்றி நாம் அறிவோம். ஆனால் இது அறிக்கையை வெளியிடுவதற்குத் தடையாக இருக்கக் கூடாது.

எம்மைப் பொறுத்த வரையில் கடந்த ஒரு மாத காலப்பகுதியில் புதிய அரசாங்கம் தமிழ் மக்களை நேரடியாகப் பாதிக்கும் விடயங்களில் காத்திரமான நடவடிக்கை எதனையும் இது வரை எடுக்கவில்லை. வடக்கு கிழக்கை விட்டு இராணுவத்தை விளக்கப் போவதில்லை என்று அரசாங்கம் தெரிவித்துள்ளது. பொதுப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் இராணுவத்திற்கு பொலிஸ் அதிகாரங்களை வழங்கும் வர்த்தமானி அறிவித்தல் மீள் பிரசுரம் செய்யப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் வலிகாமம் பிரதேசத்தில் சிறு பகுதியளவில் மீள் குடியேற்றம் செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ள போதிலும் முன்னைய அரசாங்கத்தின் கீழ் கை விடப்பட்ட ஒரு மாதிரி குடியேற்றத் திட்டத்தேயே இந்த அரசாங்கமும் மீள் குடியேற்றம் என்ற போர்வையில் மீள் சுழற்சி செய்கிறது. சம்பூர் (திருகோணமலை), முள்ளிக்குளம் (மன்னர்) , கேப்பாப்பிலவு (முல்லைத்தீவு) உயர் பாதுகாப்பு வலயங்கள் தொடர்பில் அரசாங்கம் மௌனம் சாதிக்கின்றது.

மேலும் ஐ. நா. மனித உரிமை ஆணையாளரையும் ஐ. நா.வின் காணாமல் போனார் தொடர்பான குழுவையும் நாட்டுக்கு வருகை தர இலங்கை வெளியுறவு அமைச்சர் ஐ. நா. மனித உரிமை ஆணையாளருக்கு 13 பெப்ரவரி 2015 அன்று எழுதிய கடிதத்தில் விடுத்துள்ள அழைப்பு வெறுமனே தாம் சர்வதேச மனித உரிமை நியமங்களுக்கு ஒழுக நடக்கின்றோம் என்றவோர் பிம்பத்தைக் கட்டியெழுப்பவே அன்றி உண்மையான பொறுப்புக்கூறலுக்கான அடையாளமாகக் கருதுவதற்கில்லை. அவ்வாறாயின் அரசாங்கம் ஐ.நா விசாரணைக் குழுவை நாட்டிற்குள் முதலில் அனுமதிக்க வேண்டும். ஆனால் இதற்கு அரசாங்கம் தயாரில்லை. ஐ.நா மனித உரிமைப் பேரவையின் 2014 தீர்மானத்தையேனும் ஏற்க அரசாங்கம் தயாரில்லை. இலங்கையில் உள்ளகப் பொறிமுறை மூலம் தீர்வு ஏற்பட வாய்ப்பில்லை என்பதை எமது 12 பெப்ரவரி 2015 ஆம் திகதிய கடிதம் மூலம் ஏற்கனவே தெளிவுபடுத்தியுள்ளோம் என்பதையும் இவ்விடத்தில் சுட்டிக் காட்ட விரும்புகிறோம்.

மேற்கூறிய காரணங்களுக்காக விசாரணை அறிக்கையைத் தாமதப்படுத்துவதற்கான நியாயமான காரணங்கள் எதுவுமில்லை என நாம் கருதுகிறோம். ஐ.நா விசாரணைக் குழுவை நாட்டிற்குள் அனுமதிக்குமாறு அழைப்பு விட நாம் ஐ. நா. மனித உரிமை ஆணையாளரை வேண்டுகிறோம். அவ்வாறு வேண்டாதவிடத்து அறிக்கையைத் தாமதப்படுத்தும் முடிவானது அரசியல் காரணங்களுக்காக மேற் கொள்ளப்பட்டதென்ற வாதத்தை மேலும் வலுப்படுத்துவதாக அமைந்து விடும்.

                                               

 (ஒப்பம்)
குமாரவடிவேல் குருபரன்
இணைப் பேச்சாளர்     
 (ஒப்பம்)                                
எழில் ராஜன்
இணைப் பேச்சாளர்                      

தமிழ் சிவில் சமுக அமையமானது இலங்கையின் வடக்கு கிழக்கில் செயற்படுகின்ற 100க்கு மேற்பட்ட சிவில் சமுக செயற்பாட்டாளர்களின் வலையமைப்பாகும். அதன் அழைப்பாளர் ஆயர் இராயப்பு ஜோசப் ஆண்டகை ஆவார். மேலதிக விபரங்களுக்கு: h
Share this article :
Print PDF

Related Post:

 
Support : Eelam5.com | Untamil.com | News4tamil.com
Powered by Eelanila
Copyright © 2011. ஈழநிலா.கொம் - All Rights Reserved
Eelanila.com
Design by: Nilavan Published by: Eelanila