புலம்பெயர் உறவுகளுடன் நல்லுறவைப் பேணுவது அவசியம்

நாட்டின் 67-வது சுதந்திர தின நிகழ்வில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் ஆகியோர் கலந்து கொண்டமை பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
சுதந்திரதின நிகழ்வில் இரா.சம்பந்தனும், சுமந்திரனும் கலந்து கொண்டமை மிகப் பெரிய தவறு எனத் தமிழரசுக் கட்சியின் சிரேஷ்ட துணைத் தலைவர் பேராசிரியர் சி.க.சிற்றம்பலம் அவர்கள் கருத்துரைத்துள்ளார்.
இந்நிலையில் சுதந்திர தின நிகழ்வில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்கள் கலந்து கொண்டமை கூட்டமைப்பிற்குள்ளும் கருத்து முரண்பாடு ஏற்பட்டுள்ளதை அவதானிக்க முடிகிறது.
இத்தகைய கருத்து முரண்பாடுகள், கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தர்; கட்சியின் மத்திய குழுவுடன் கலந்துரையாடி முடிவுகளை எடுப்பதில்லை என்பதைச் சுட்டிக்காட்டுகிறது.
67-வது சுதந்திரதின நிகழ்வில் சம்பந்தர் கலந்து கொண்டதில் நியாயங்கள் உண்டு என்று கூறுவதிலும் தவறில்லை.
ஆனாலும் கட்சியின் முக்கிய தலைவர்களுடன் கலந்துரையாடி, ஒரு தீர்மானத்தை எடுத்த பின்பு அதை நடைமுறைப்படுத்தும் போது தேவையற்ற விமர்சனங்கள் எழுவதைத் தடுக்க - தவிர்க்க முடியும்.
ஆனால், அப்படியாகத் தீர்மானம் எடுக்கும் நடைமுறை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்குள் இல்லை என்பதை பல சந்தர்ப்பங்களில் உணர முடிந்துள்ளது.
எதுவானாலும் இப்போதிருக்கின்ற நிலைமையில் தமிழ்த் தலைமைகள் எடுக்கின்ற தீர்மானங்கள் எழுந்தமானவையாக இருக்குமாயின் அதன் விளைவு பாரதூரமானதாகிவிடும் என்பதுடன் தமிழ் மக்களிடையே வேறுபட்ட கருத்துக்கள் பரிமாறத் தொடங்கிவிடும்.
ஆகையால், தமிழ்த் தலைமைகள் மிக நிதானமா கச் செயற்படவேண்டியுள்ளது. அந்த நிதானம் என்பது தனி மனித தீர்மானங்களால் ஏற்படமாட்டாது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் செயற்பாடு குறித்து சிங்கள அரசியல் தலைமைகள் விமர்சனம் செய்யலாம். முஸ்லிம் தரப்புக்கள் கூட வாதம் புரியலாம். ஆனால் தமிழ் மக்களிடையே விமர்சனங்கள் எழக்கூடாது.
எனினும் துரதிர்ஷ்டவசமாக, தமிழ்த் தேசியக் கூட்டமைப்புத் தொடர்பில் புலம்பெயர் தமிழர்கள் வெறுப்பு அடைந்துள்ளனர். குறிப்பாக இலங்கையின் 67-வது சுதந்திரதின நிகழ்வில் இரா.சம்பந்தர் பங்குபற்றியமைக்கு புலம்பெயர் தமிழ் அமைப்புகள் கண்டனம் தெரிவித்துள்ளதுடன், ஆர்ப்பாட்டமும் நடத்தியுள்ளனர். இது தமிழினத்திற்குச் சாதகமானதல்ல.
இன விடுதலைப் போராட்டத்தில் புலம்பெயர் தமிழ் உறவுகளின் வகிபாகம் சாதாரணமானதல்ல. வன்னியில் யுத்தம் நடந்த போது சர்வதேசத்தில் இருக்கக் கூடிய எங்கள் உறவுகள் நடத்திய போராட்டங்கள்; கையளித்த மகஜர்கள்; மகிந்த மீது சர்வதேசத்திற்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியது.
மகிந்த ராஜபக்ச அரசு மீது போர்க்குற்ற விசாரணை நடத்தப்பட வேண்டும் என்ற சர்வதேசத் தீர்மானத்தின் பின்புலமாக இருந்தவர்கள் புலம்பெயர் தமிழர்கள் என்ற உண்மையை எவரும் மறந்தவிடலாகாது.
நிலைமை இதுவாகவிருக்கையில், புலம்பெயர் உறவுகளின் விருப்பங்களை அல்லது அவர்களின் கருத் தியலை நாம் செவிமடுக்காமல் விடுவது மகா தவறு.
அதேநேரம் இலங்கையில் இனத்துவ ஒற்றுமை அவசியம் என்பது உண்மையாயினும் அந்த ஒற்றுமை என்பது தமிழர்களின் விட்டுக்கொடுப்பால் மட்டும் ஏற்பட்டு விடக்கூடாது.
தமிழர்கள் விட்டுக்கொடுத்ததால் இனஒற்றுமை என்ற நிலைமை தோன்றுமாயின் தமிழ் இனத்தின் ஒற்றுமை குலையும்.
ஆம், ஜனாதிபதித் தேர்தலில் மைத்திரிபால சிறிசேனவை கூட்டமைப்பு ஆதரித்ததற்கும்; 67-வது சுதந்திர தின நிகழ்வில் சம்பந்தர் கலந்த கொண்டதற்கும் இடையில் வேறுபட்ட புலக்கட்சி ஏற்பட்டுள்ளது.
அதன் விளைவு, மகிந்தவுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்திய புலம்பெயர் தமிழர்கள் இப்போது சம்பந்தருக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்தும் நிலைமையை தோற்றுவித்து விட்டது.
எனவே, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தீர்மானங்கள் மிகவும் நுட்பமாக அமைதல் அவசியம்.
Share this article :
Print PDF

Related Post:

 
Support : Eelam5.com | Untamil.com | News4tamil.com
Powered by Eelanila
Copyright © 2011. ஈழநிலா.கொம் - All Rights Reserved
Eelanila.com
Design by: Nilavan Published by: Eelanila