சர்வதேச விசாரணையில. மட்டுமே தமிழர்கள் நம்பிக்கை கொள்வர்


ரிஷானா என்ற இலங்கைப் பெண்ணுக்கு சவூதியில் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது.

குழந்தைக்குப் பால் பருக்கும் போது புரைக்கேறி குழந்தை இறந்து போனமைக்கு ரிஷானாவே காரணம் என்ற அடிப்படையில், மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது.

குழந்தைக்குப் பால் ஊட்டும் போது ரிஷானா பராயம் அடையாத சிறுமி. அறியாப் பருவம். தவறுதலாக அப்படி நடந்து விட்டது. எனவே ரிஷானாவைக் காப்பாற்ற வேண்டும் என்று சவூதி மன்னர் முதல்  மனித நேய அமைப்புக்கள் வரை கடும் பிரயத்தனம் எடுத்தன.

இருந்தும் சவூதிச் சட்டத்தின் பிரகாரம் ரிஷானாவுக்கு மன்னிப்புக் கொடுக்கும் அதிகாரம் பாதிக்கப்பட்டவர்களுக்கே உண்டு.

அந்த அடிப்படையில் இறந்து போன குழந்தையின் பெற்றோர் மட்டுமே ரிஷானாவுக்கு மன்னிப்பு அளிக்க முடியும்.

எனினும் இறந்த குழந்தையின் தாயார், ரிஷானாவுக்கு மன்னிப்புக் கொடுக்க மறுத்துவிட்டார். அதன் முடிவு ரிஷானாவின் தலை வெட்டப்பட்டது.

இங்கு  மன்னிப்பு வழங்க மறுத்த மனித வன்மம் பற்றி நாம் ஆராயவில்லை. மாறாக பாதிப்படைந்தவரே குற்றவாளிக்கு மன்னிப்பு வழங்க முடியும் என்ற உயர்ந்த சட்ட விதிமுறை பற்றி ஒரு கணம் சிந்திக்கலாம்.

குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்கும் போது அந்தத் தண்டனைக்கு மன்னிப்பு வழங்கக் கூடிய அதிகாரம் பாதிக்கப்பட்டவருக்கு வழங்கப்பட்டிருப்பது மிகவும் பொருத்தமானது.

எனினும் எங்கள் நாட்டில் ஜனாதிபதி நினைத்தால் எந்தக் குற்றவாளிக்கும் மன்னிப்பு வழங்க முடியும். அந்த அதிகாரத்தின் கீழ்த்தான் முன்னாள் இராணுவத்தளபதி சரத் பொன்சேகாவுக்கு பொது மன்னிப்பு வழங்கப்பட்டது; ´ராணிக்கு மீண்டும் பதவியேற்க சந்தர்ப்பம் கொடுக்கப்பட்டது.

அதேநேரம், விளக்கம் விசாரணை இன்றி சிறைகளில் அடைக்கப்பட்டிருக்கும் தமிழ் அரசியல் கைதிகளுக்கு இது வரை மன்னிப்பு வழங்கப்படவில்லை. இங்கு தான் அதிகாரம் துஷ்பிரயோகத்திற்கு உட்படுகின்றது.

சரத் பொன்சேகாவுக்கு மன்னிப்பு வழங்கப்பட்ட வேகம் தமிழ் அரசியல் கைதிகளின் விடயத்தில் மந்தமடைந்து போயிற்று.

இந்த நிலைமையில் வன்னியில் நடந்த போர்க்குற்றம் தொடர்பில் சர்வதேச விசாரணை அவசியம் என்ற தீர்மானம் ஜெனிவாவில் நிறைவேறிய போதிலும் அந்தத் தீர்மானம் ஜனாதிபதி மைத்திரியின் ஆட்சியி லும் நலினப்படுத்தப்படுகிறது. இலங்கை அரசின் முக்கியஸ்தர்கள் போர்க்குற்றம் தொடர்பில் உள்ளக விசாரணை நடத்தப்படவேண்டும் என்று கூறுகின்றனர்.

அதேநேரம் போர்க்குற்ற விசாரணை அறிக்கையை ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் சமர்ப்பிப்பதிலும் பிற்போடல் நடந்துள்ளது.

வன்னிப் போரில் பாதிப்படைந்தவர்கள் தமிழர்கள். மகிந்த ராஜபக்­ தலைமையிலான இலங்கை அரசு வன்னியில் நடத்திய கொடும் போரில் திட்டமிட்ட தமிழின அழிப்பு அரங்கேறியது.

நிலைமை இதுவாக இருக்கும் போது போர்க்குற்ற விசாரணையை சர்வதேச ரீதியிலா? அல்லது உள்ளக மட்டத்திலா? நடத்துவதென்பதை தீர்மானிக்கும் அதிகாரம் போரில் பாதிப்படைந்த தமிழ் மக்களுக்கே உண்டு. ஆனால் போர்க்குற்ற விசாரணை உள்ளக மட்டத்தில் நடத்தப்படும் என இன அழிப்புச் செய்ய தரப்பு சொல்கிறது எனில் நீதியை எங்ஙனம் நிலைநாட்ட முடியும்?

இதேபோல் போர்க்குற்ற விசாரணை அறிக்கையை பிற்போடுவது என்ற விடயத்தில் ஈழத்தமிழர்களின் கருத்துப் பதிவு செய்யப்பட்டதா? என்ற கேள்விக்கு இல்லை என்பது பதிலாயின் ஐ.நா சபையும் பக்கச் சார்பு கொண்டதா? என்ற சந்தேகம் எழுவது தவிர்க்க முடியாததாகி விடும்.

எனவே போர்க்குற்றம் தொடர்பில் எந்த முடிவை எடுப்பதாக இருந்தாலும் அது விடயத்தில் தீர்மானம் எடுக்கும் தகைமை போரினால் பாதிப்படைந்த தமிழ் மக்களுக்கே உண்டு.  ஆக, இது விடயத்தில் வேறு எவரும் கதைப்பது பொருத்தப்பாடாகாது.
Share this article :
Print PDF

Related Post:

 
Support : Eelam5.com | Untamil.com | News4tamil.com
Powered by Eelanila
Copyright © 2011. ஈழநிலா.கொம் - All Rights Reserved
Eelanila.com
Design by: Nilavan Published by: Eelanila