இனப்படுகொலை: உலகம் ஏற்கத் தயங்குவது ஏன்?


...மறுபுறம் 13 முதல் 16 வயதான சிறுமிகள், இராணுவத்திடமிருந்து தப்ப குழந்தை திருமணத்திற்குள் தள்ளப்படுகின்றனர். சிறுவர்களை. மிக எளிதாக கிடைக்கும் போதை பொருட்களின் பிடியில் சிக்காமல் காக்க பெற்றவர்கள் தவிக்கின்றனர்.

கல்வியை பெரிதாக மதிக்கும் அச்சமூகத்து குழந்தைகள், கல்விக்கு வழியின்றி முடங்கிக் கிடக்கின்றனர். இவை அனைத்தும் சிங்களப் பேரினவாதம் தமிழர்கள் மீது மேற்கொண்டுள்ள பண்பாட்டு இனப்படுகொலையின் விளைவுகளே.

ஈழத்தில் வாழும் தமிழர்கள் மீது தொடரும் இந்த மக்கள் பரம்பல், கட்டமைப்பு மற்றும் பண்பாட்டு இனப்படுகொலைகளுக்கு இணையாக, தமிழ்நாடு உட்பட உலகெங்கும் வாழும் தமிழ் மக்களிடம் தோல்வி மனப்பான்மையை நிரந்தரமாக ஏற்படுத்தும் வகையில் ஒரு மிகப் பெரும் உளவியல் இனப்படுகொலையை இலங்கை அரசு மேற்கொண்டுள்ளது.

இலங்கையில் தமிழர்கள் மீது நடத்தப்பட்ட ஆயுதப் போர் 2009 ஆண்டில் நிரந்தரமாகவோ, தற்காலிகமாகவோ ஒரு முடிவுக்கு வந்திருக்கலாம். ஆனால் இன்று வரையில் தமிழர்கள் மீதான உளவியல் போர் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது.

எல்லாம் முடிந்தது, இந்தியாவை நம்பக்கூடாது, ஐ. நா வை நம்பக்கூடாது, உலக நாடுகளும் ஏமாற்றுக்காரர்கள் என்று நம்மில் சிலரே பேசுகிறோம்.

மாற்று எதுவும் சொல்லாமல் வெறுமனே எவரையும் நம்பி பயனில்லை என்று பேசுதும்கூட இலங்கை அரசின் தோல்வி மனப்பான்மையை ஏற்படுத்தும் உளவியல் போருக்குத் துணை செய்வதாகவே இருக்கும். இருக்கும் கட்ட மைப்பிற்குள் நின்று நாம் என்ன செய்ய முடியும் என்பதை பேசுவதே அந்த உளவியல் போருக்கு சரியான பதிலடியாக இருக்கும்.

‘2009 உடன் போர் முடிவுக்கு வந்து விட்டது. இனி எந்த சிக்கலும் இல்லை’ என்று இலங்கை அரசு சொல்வது உண்மை தான். போர் முடிந்ததுடன், எவ்வித தடையும் இன்றி இனப்படுகொலையைத் தீவிரமாக நடத்தி முடிப்பதில் இலங்கை அரசுக்கு எவ்வித சிக்கலும் இல்லை.

அண்மையில் கொலையுண்ட மாணவி வித்யாவிற்கு ஆதரவாக குரல் கொடுத்த தமிழீழ பள்ளி மாணவர்கள், “இருப்பவர்கள் இருந்திருந்தால் இப்படி நடக்குமா?” என்ற பதாகையை உயர்த்திப் பிடித்திருந்தனர். அதுதான் உண்மை.

இனப்படுகொலையை பரவலாக நடத்தத் தடையாக இருந்தவர்கள் நீக்கப்பட்டுள்ளார்கள். இனி அவர்கள் மீண் டும் எழுந்து வந்துவிடக்கூடாது.. அதற்கும் அனைத்தையும் அழித்து விட வேண்டும் என்பதே இலங்கை அரசின் நோக்கம்.

இதனை உணர்ந்து நாம் விரைந்து செயலாற்ற வேண் டும். போர்க் காலத்தில் மட்டுமல்லாமல், வரலாற்று ரீதியாகவும், போருக்குப் பின்னும், இன்று வரையிலும் தமிழர்கள் மீது நடந்ததும் நடப்பதும் இனப்படு கொலை என்பதை உறுதிப்படுத்துவதற்கான ஆதாரங்களைத் திரட்டுவதில் நாம் திட்டமிட்டு வேலை செய்ய வேண்டும்.

இதன்மூலம் மட்டுமே உலக அளவில் இனப்படுகொலை என்ற சொல்லைப் பயன்படுத்தும் வாய்ப்பை நாம் பெற முடியும்.

அதிலும் குறிப்பாக, இலங்கையில் ஏற்பட்டுள்ள ஆட்சி மாற்றம் பல மாயங்களை செய்து விடும் என்று தமிழர்கள் சிலரே நம்பத் தொடங்கி உள்ளனர். இதுவும் இலங்கையின் உளவியல் போரின் ஒரு பகுதி என்பதை நாம் மறந்துவிடக் கூடாது.

அங்கே இன்னமும் ஓர் இனப்படுகொலை தொடர்கிறது என்பதை நாம் உலகம் அறிய செய்ய வேண்டும். இதை குறித்த கருத்துருவாக்கத்தால் நாம் ஈடுபட வேண்டும்.
இந்தியாவெங்கும் உள்ள குடிமை சமூக த்தைச் சேர்ந்தவர்கள், மனித உரிமை ஆர்வலர்கள், மாணவர்கள், ஊடகவியலா ளர்கள் போன்றோரிடம் நாம் இக்கருத்தை எடுத்துச் செல்ல வேண்டும்.

இது வரை தமிழர்கள் நாம் மட்டுமே பேசி வந்ததை தமிழர் அல்லாதவர்களும் பேசும் படி செய்ய வேண்டும். ஈழத் தமிழர் போராட்டத்தை 30 ஆண்டுகால அறவழிப் போராட்டம், 30 ஆண்டுகால ஆயுதப் போராட்டம் என்று நாம் பிரித்துக் கூறுகிறோம்.

முதல் முப்பதாண்டு காலம் ஈழத் தமிழர்கள் மட்டுமே போராடினார்கள். தமிழ்நாட்டில் கூட அவர்கள் போராட்டம் பற்றி பெரிதாக எவரும் அறிந்திருக்கவில்லை.

அடுத்த முப்பதாண்டு காலத்தில் தமிழகம் ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக நின்றது. 2009 இற்கு பிறகு உலகம் ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக நிற்கிறது என்ற நிலையை நாம் உருவாக்க வேண்டும்.

ஒன்றரை இலட்சம் மக்கள் தங்கள் உயிரை இழந்து இப்போராட்டத்தை அடுத்தக் கட்டத்திற்கு முன் நகர்த்தி உள்ளனர் என்ற பொறுப்பு ணர்வோடு நாம் செயற்பட வேண்டும்.

உலகம் என்பது அரசுகள் மட்டுமல்ல. உலகெங்கும் உள்ள குடிமை சமூகத்தைச் சேர்ந்தவர்கள், மனித உரிமை ஆர்வலர்கள், மாணவர்கள், ஊடகவியலாளர்கள் ஆகியோரை நாம் அணுகி அவர்களுக்குப் புரிய வைக்க வேண்டும்.

அவர்களைக் கொண்டு இலங்கையில் தமிழர் மீதான இனப்படுகொலை தொடர்கிறது என்பதை பேச வைக்க வேண்டும். அதன்முதல் கட்டமாக இந்தியாவெங்கும் இதனை ஒரு விவாதப் பொருளாக மாற்ற வேண்டும்.

இந்தியா தமிழர்களுக்கு ஆதரவாக செயறபட்டு விடாதுதான். ஆனால் இப்படியான கருத்துருவாக்கத்தின் மூலமாக நாம் ஏற்படுத்தும் அழுத்தமே, இந்திய அரசு தமிழருக்கு எதிராக செயற்படும் வேகத்தை கொஞ்சமேனும் மட்டுப்படுத்த உதவும்.

இந்தப் பணியில் வெற்றி பெற நாம் யூதர்களின் சியோனிஸ்ட் இயக்கத்தைப் பின்பற்ற வேண்டும் என நினைக்கிறேன். ஹோலோ காஸ்ட்டுக்கு முன்னும் பின்னும் உலகெங்கும் பல சியோனிஸ்ட் இயக்கங்கள் இருந்தன.

ஆனால் தங்களுக்கென ஒரு நாட்டை உருவாக்க வேண்டும் என்று முடிவெடுத்த உடன் அவர்கள் தங்களுக்கு இடையிலான அனைத்து வேறுபாடுகளையும் மறந்து இணைந்து நின்று செயற்பட்டனர்.

அதனால் தான் அவர்களால் தங்கள் இலக்கை அடைய முடிந்தது. நமக்குள் ஒத்தக் கருத்து இல்லாத விடயங்களைப் பற்றிக் கவலைப்படுவதை விட்டு, ஒத்த கருத்துடையவற்றை அடிப்படையாக வைத்து பணி செய்வோம்.
                                                                          (முற்றும்)
Share this article :
Print PDF

Related Post:

 
Support : Eelam5.com | Untamil.com | News4tamil.com
Powered by Eelanila
Copyright © 2011. ஈழநிலா.கொம் - All Rights Reserved
Eelanila.com
Design by: Nilavan Published by: Eelanila