தாயாரைச் சந்தித்தார் விபூசிகா

பயங்கரவாதத் தடைச்சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் தனது தாயாரான ஜெயக்குமாரியை சிறுமி விபூசிகா நேற்றுமுன்தினம் சந்தித்தார்.
நீண்ட இழுபறியின் பின்னர் மகசின் சிறையில் சுமார் அரைமணி நேரம் நீடித்த இந்த சந்திப்பில் தாயும் மகளும் அதிக நேரம் கண்ணீராலேயே பேசிக்கொண்டனர். காணாமல் போனோரைத் தேடியறியும் போராட்டங்களில் தீவிரமாக ஈடுபட்டு வந்த இருவரும் 11 மாதங்களுக்கு முன்னர் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனர். பின்னர் இருவரும் கிளிநொச்சி மாவட்ட நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டனர்.
ஜெயக்குமாரியை தடுத்து வைத்து விசாரிக்க அனுமதித்த நீதிமன்றம் விபூசிகா சிறுமி என்பதால் அவரை மகாதேவா ஆச்சிரமத்தில் தங்க வைத்துப் பராமரிக்க உத்தரவிட்டது.
இந்நிலையில் சிறுமி விபூசிகா தனது தாயாரைப் பார்வையிட அனுமதிக்குமாறு நீதிமன்றத்தின் உதவியை நாடினார். இதையடுத்து நேற்றுமுன்தினம் திங்கட்கிழமை விபூசிகா தனது தாயாரை சந்திக்க நீதிமன்றம் அனுமதியளித்தது.
நீதிமன்ற உத்தரவின் பிரதியுடன் தனது தாயாரைப் பார்க்கும் ஆவலில் திங்கட்
கிழமை காலை 9 மணிக்கு விபூசிகா மகசின் சிறைக்குச் சென்றிருந்தார்.
அவரைத் தடுத்த சிறை அதிகாரிகள் நீதிமன்றத்தின் உத்தரவு தமக்குக் கிடைக்கவில்லை என்றும் இதனால் விபூசிகா தனது தாயாரை சந்திக்க முடியாது என்றும் கூறினர்.
சிறை அதிகாரிகளிடம் தங்களிடம் இருக்கும் நீதிமன்ற உத்தரவைக் காட்டி விபூசிகா கெஞ்சி அழுத போதும் தாயாரைச் சந்திக்க அனுமதி வழங்கப்படவில்லை. இந்நிலையில் நீண்ட நேரக் காத்திருப்பின் பின்னர் மாலை 4 மணியளவில் தாயாரை சந்திக்க விபூசிகாவுக்கு அனுமதி வழங்கப்பட்டது.
சந்திப்பின் போதும் இருவரும் பேச முடியாமல் கதறி அழுதனர். இருவரையும் சமாதானப்படுத்திய அதிகாரிகள் ஒருவாறாக தாயையும் மகளையும் பேச வைத்தனர்.
சிறையில் எலிகளின் தொல்லையால் ஒழுங்காக நித்திரை கொள்ள முடிவதில்லை என்றும் எலிகள் கடித்ததால் தமக்கு காயங்கள் உள்ளன என்றும் ஜெயக்குமாரி விபூசிகாவுடன் தன்னை சந்தித்த சட்டத்தரணிகளிடம் தெரிவித்தார்.
மேலும் முன்னர் பூசாவில் தடுத்து வைக்கப்பட்டிருந்த போது பெரும் துன்பங்களை சந்தித்தார் என்றும் இங்கு (மகசினில்) அப்படியானவை எதுவும் இல்லை என்றும் அவர் கூறினார்.இதேவேளை மகாதேவா ஆச்சிரமத்தின் பராமரிப்பில் விபூசிகா இருந்த சமயம் பூப்படைந்து இருந்தார். இவரின் பூப்புனித நீராட்டு விழா வரும் மார்ச் 6 ஆம் திகதி நடக்கவுள்ளது.
வரும் 24 ஆம் திகதி வழக்கு விசாரணையின் போது  பூப்புனித நீராட்டு விழாவில் தாயாரை பங்கேற்க அனுமதிக்குமாறு நீதிமன்றைக் கோரப்போவதாக சட்டத்தரணிகள் தெரிவித்தனர்.
- See more at: http://www.thinakkural.lk/article.php?local/zxtzx6pzkj8829384cb8546425532ihvhb4425079baeec43aa82534fzspwl#sthash.mpNCUz2u.dpuf
Share this article :
Print PDF

Related Post:

 
Support : Eelam5.com | Untamil.com | News4tamil.com
Powered by Eelanila
Copyright © 2011. ஈழநிலா.கொம் - All Rights Reserved
Eelanila.com
Design by: Nilavan Published by: Eelanila