தனது சிஷ்யனான ஏகலைவனிடம் அவனது கட்டை விரலைக்கேட்ட துரோணர் போல் எனது குருவான சம்பந்தன் என்னிடம் கிழக்கு மாகாண முதலமைச்சர் பதவியைக் கேட்டாரெனத் தெரிவித்த ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் நகர அபிவிருத்தி, நீர்வழங்கல், வடிகாலமைப்பு அமைச்சருமான ரவூப் ஹக்கீம், தமிழ் முஸ்லிம் உறவு குறித்து காத்திரமான கருத்துக்களை முன்வைத்துவந்த சம்பந்தன் தற்போது காட்டமான கருத்துக்களை கூறி வருவது ஏன் எனவும் கேள்வி எழுப்பினார்.
இந்த விரிசல் அரசியல் காரணங்களுக்காக வேண்டுமென்றே ஏற்படுத்தப்படுகின்றதா அல்லது அடுத்துவரும் தேர்தலை மையமாக வைத்து தமிழ் மக்களின் வாக்குகளுக்காகப் பேசப்படுகின்றதாவெனவும் சந்தேகம் வெளியிட்ட அமைச்சர் ரவூப் ஹக்கீம், முஸ்லிம் காங்கிரஸ் தனித்துவம் பேணியதால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் அடைந்த நன்மைகளை மறந்துவிடக் கூடாது என்றும் சுட்டிக்காட்டினார்.
எதிர்வரும் 28 ஆம் திகதி நடைபெறவுள்ள முல்லைத்தீவு மாவட்டத்தின் கரைத்துறைப்பற்று பிரதேச சபைத் தேர்தலில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் மரச்சின்னத்தில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து ஆலங்குடா "பீ' முகாமில் இடம்பெற்ற பிரசாரக் கூட்டத்தில் உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்த ரவூப் ஹக்கீம் மேலும் கூறுகையில்;
எம்மை தமிழ்த் தேசியத் தலைமைகள் தாறுமாறாக விமர்சிக்கின்றன என்பதில் எனக்கே இன்னும் சரியான தெளிவு இல்லை. இவர்களின் விமர்சனம் ஆற்றாமையின் வெளிப்பாடாக இருக்கலாமென நாங்களே எங்களை சமாளித்துக் கொள்கின்றோம்.
வார்த்தைகளில் பக்குவம் வேண்டும். நேர்மையும் தூரநோக்கும் சாணக்கியமும் இருக்க வேண்டும். ஆனால் இவை எவையுமே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரின் பேச்சுகளில் தென்படவில்லை.
பூநகரி பிரதேச சபையை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கைப்பற்ற அங்கு நாம் தனித்துப் போட்டியிட்டதுதான் காரணம். நாம் அப்படி செய்திருக்காது விட்டால் மகிந்தவின் வெற்றிலைக்கு பூநகரி பிரதேசசபை போயிருக்கும்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் நினைக்கின்ற மாதிரி நாங்கள் முடிவெடுக்க வேண்டுமென நினைப்பது தவறான விடயம். நீங்கள் இழுக்கின்ற பக்கமெல்லாம் நாங்கள் போகவேண்டுமென்ற ஒரு நியதி கிடையாது.
கிழக்கின் முதலமைச்சர் பதவியை தங்களுக்கு தரவேண்டுமென்பதில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் விடாப்பிடியாகவிருந்தனர். ஆனால் அதனை விட்டுக் கொடுப்பதில்லையென்பதில் நாமும் உறுதியாகவிருந்தோம்.
அவர்களுடன் மூன்று தடவைகள் பேசியும் பயன் கிடைக்கவில்லை. இறுதியில் நாங்கள் தீர்க்கமான முடிவை எடுத்தபோது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மாகாணசபை உறுப்பினர்கள் உடன்பாடு காண வந்தார்கள். அதனையும் இப்போது தலைமையின் அங்கீகாரமின்றி நடந்ததாக அவர்கள் கூறலாம்.
சம்பந்தன் மூத்த அரசியல்வாதி. அவரை நொந்துகொள்ள நான் விரும்பவில்லை. நான் அவரை விமர்சிப்பதன் மூலம் என்னை உயர்த்திக்கொள்ள முடியும் என்றும் நான் நினைக்கவில்லை. அவரை என் குருவாகவே நான் பார்க்கின்றேன்.
இந்த இடத்தில் மகாபாரதத்தில் வருகின்ற ஓர் உதாரணத்தை கூற விரும்புகிறேன். கிழக்கு முதலமைச்சர் பதவியை சம்பந்தன் தங்களுக்கு தரவேண்டுமெனக் கேட்டதை மகாபாரத சம்பவத்தோடு ஒப்பிட விரும்புகின்றேன். இது எவ்வளவு தூரம் எமது கட்சியையும் அரசியலையும் பாதிக்கும் என்ற நிலையிலேயே இதனைக் கூறுகின்றேன்.
மகாபாரதத்தில் தனது சிஷ்யனான ஏகலைவனுக்கு வில்வித்தை பயிற்சி வழங்கிய துரோணாச்சாரியார் இறுதியில் தனது குரு தட்சிணையாக ஏகலைவனிடம் உனது கட்டை விரலை வெட்டித்தா எனக் கேட்டார். கட்டை விரலை வெட்டிக்கொடுத்தால் ஏகலைவனால் வில்வித்தை செய்ய முடியாது.
ஏகலைவனிடம் துரோணர் கட்டை விரலைக்கேட்டதுபோலவே எனது குருவான சம்பந்தன் என்னிடம் கிழக்கு மாகாண முதலமைச்சர் பதவியைக் கேட்டார்.
கிழக்கு மாகாண சபை தொடர்பில் நாங்கள் சில உடன்பாடுகளுக்கு வந்தோம். அந்த உடன்பாடுகளை நாம் நிச்சயம் கௌரவிப்போம். தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு கிடைக்க வேண்டிய அமைச்சுப் பதவிகளைக் கொடுத்து கிழக்கில் எமது தலைமையில் ஒரு தேசிய அரசு அமைந்தது என்ற பெருமையை நிலைநாட்டுவோம் என்றார்.