16.03.2015 அன்று ஜெனிவா முன்றலில் பன்னாடுகளில் வாழும் தமிழர்களின் ஒன்றுகூடல் ஆனது முக்கியத்துவம் வாய்ந்தது. ஒரு மாதமே இருக்கின்ற இத்தகைய சூழ்நிலையில் அது பற்றிச் சிந்திப்பது முக்கியமானது.(இங்கு குறிப்பிடப்படும் விடயங்கள் தொடர்பாக அனைத்து எழுச்சி நிகழ்வுகளிலும் கவனிக்கப்பட வேண்டியது முக்கியமானதொன்றாகும் ) வருடந்தோறும் நடைபெறும் இத்தகைய ஆர்பாட்டம் ஏறக்குறைய 191 நாடுகள் ஒன்று கூடுகின்ற மாமன்றத்தின் முற்றத்தில் நின்று கொண்டு ஈழத்தமிழர்களின் நியாயமான பிரச்சனைகளை எடுத்துச் சொல்வதற்கான ஒரு தகுதி வாய்ந்த வாய்ப்பாக ஐ.நாவைப் பயன்படுத்திக் கொள்கிறோமாஃ அல்லது வருடாவருடம் கட்டாயம் செய்யவேண்டுமேஃ என்ற நிலைப்பாட்டில் இந்நிகழ்வைச் செய்வதன் மூலம் சர்வதேசத்தின் மத்தியில் ஏற்கனவே இருக்கின்ற எம்மைப்பற்றிய சாதகமான அபிப்பிராயங்களைக் நாங்களாகவே கெடுத்துக்கொள்ளப் போகிறோமா?
என்கின்ற இரு கேள்விகளை எழுப்புவதன் மூலம் நாம் எத்தகை பிரச்சனையைச் சொல்லப் போகிறோம்? எவ்வாறு சொல்லப்போகிறோம்? என்பதில் தெளிவாக இருப்பதன் மூலம் ஜெனிவா முன்றலில் நாங்கள் எவ்வாறு நடந்து கொள்ளப் போகின்றோம் என்கின்ற திட்டவட்டமான ஒழுக்கநெறிகளை கைக்கொள்ள வேண்டியவர்களாக இருக்கின்றோம். கடந்த காலங்களில் நடைபெற்ற கசப்பான அனுபங்களில் இருந்து பெற்ற படிப்பினைகளைக்கொண்டு இந்தவருடமாவது நேர்த்தியான முறையில் இவ் ஒன்றுகூடலை சம்மத்தப்பட்டவர்கள் நெறிப்படுத்துவதோடு பங்குபெறுபவர்களும் உண்மையான விசுவாத்தை வெளிப்படுத்த வேண்டியவர்களாக இருக்கின்றோம்.
இங்கு “கடந்த கால கசப்பான அனுபவங்களின் படிப்பினைகள் ” என்பதிலிருந்து கூறவருவது யாதெனில்? கடந்த காலங்களில் ஒன்று கூடல்கள் நடைபெற்ற விதம் ஏற்றுக் கொள்ளக்கூடியதாக இருக்கவில்லை. இந்நிகழ்வானது வெறுமனே வேடிக்கைக்காகவோ பொழுதுபோக்குக்காகவோ நடைபெறுகின்ற ஒன்றல்ல. இறுதி நிகழ்வு நடைபெறும் மேடைக்கருகில் நின்று கொண்டு சில அரங்கேற்றுகின்ற செயல்பாடுகள் அசிங்கமான, அருவருக்கத்தக்க செயற்பாடுகளில் ஈடுபடுவதானது அந்நிகழ்வின் ஒட்டுமொத்த நோக்கத்தையே திசை மாற்றி விடுகிறதென்பதோடு வெளிநாடுகளில் பிறந்து இந்நிகழ்வில் ஆர்வத்தோடு பங்குகொள்கின்ற இளந்தலைமுறைக்கு முற்றிலும் பிழையான முற்கற்பிதத்தை கொடுத்துவிடலாம் என்பதனை நாம் கவனத்தில் கொள்ளவேண்டும்.
குறிப்பாக தேசியக் கொடி ஏற்றப்டுகிறது - கொடிப்பாடல் இசைக்கப்படுகிறது என்றால் அந்தச் சந்தர்ப்பத்தில் எவ்வாறு இருக்க வேண்டும் என்கின்ற நியமங்கள் உண்டு ஆகக் குறைந்தது கொடியைப் பார்த்தவண்ணம் அமைதியாகவாவது நிக்கவேண்டும் ஆனால் ஜெனிவா நிகழ்வில் அப்படியல்ல ஒரு புரம் தேசியக் கொடிப் பாட்டிசைத்து கொடியேற சிலர் மரியாதை செய்த வண்ணம் சீரான நிலையில் நிற்பர். மறு புறத்தில் மேளங்களை வாசித்து(ட்றம்ஸ்), ட்ரம்பெற் இல் சினிமாப்பாடல்களை இசைத்துக் கொண்டும் தமிழீழத் தேசியக் கொடியை ஆடைபோன்று முதுகுப்புற்திலோ இடையிலோ கட்டிக் கொண்டு மெய்மறந்த நிலையில் ஆடிக்கொண்டு இருந்ததைக் காணக்கூடியதாக இருந்தது. இதில் மனவருத்தத்திற்குரிய ஒன்று என்னவென்றால் இத்தகைய செயற்பாடுகளில் ஈடுபட்டவர்களில் பலர் மது அருந்தியிருந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
ஒரு கட்டத்தில் கடமையில் ஈடுபட்டிருந்த சுவிஸ் காவர்துறையினர் மீது தண்ணீர்போத்தல், தடி , பதாகைகள் கையில் கிடைத்தவைகளைக் கொண்டு தாக்கிக் கொண்டு மிகவும் நிறைகுறைந்த வார்த்தைப் பிரயோகங்களையும் கையாண்டனர். இதனால் குழப்;பமடைந்த கலகமடக்கும் காவல்துறை கண்ணீர்ப்புகையினைப் பாவித்து நிலமையைக் கட்டுக்குள் கொண்டுவர முயற்சித்தவேளை தாக்கியவர்கள் அங்கிருந்தோடி நாசுக்காக தப்பித்துக் கொண்டார்கள்.
இந்த நெரிசலில் சிக்கிய குழந்தைகள், முதியவர்கள் மற்றும் கற்பிணித்தாய் ஒருவரும் கடுமையாகப் பாதிக்கப்பட்ட நிலையில் அவர்களை மீட்டுப் பாதுகாப்பான இடத்துக்குக் கொண்டுவர வேண்டியிருந்தது .
இந்த நிலையில் கற்பிணித்தாய் மயக்கமுற முதியவர்கள் குழந்தைகள் மிகுந்த கண் எரிச்சலில் அழுது கொண்டிருந்தமையானது நிகழ்வின் தன்மையையே மாற்றிவிட்டதென்றால் அது மிகையல்ல. இந்த அல்லோலகல்லோல நிகழ்வில் மனதைப் பிழியும் வேதனையைத் தரும் இன்னுமொன்றையும் அவதானிக்க முடிந்தது, எமது மதிப்பிற்குறிய மேதகு தேசியத்தலைவர்கள் அவர்களுடைய படங்கள் நிலத்தில் அங்கொன்றும் இங்கொன்றுமாக மிதிபடுவதை வெறுமனே பார்த்துக் கொண்டு இருக்க முடியாதவர்களாக இயன்றவரைக்கும் சிறு பகுதியையே சேகரித்துப் பாதுகாக்க முடிந்தது. இத்தகைய நிலைமை ஏற்றுக் கொள்ளக்கூடியதோ சகித்துக்கொள்ளக்கூடிய ஒன்றோ அல்ல. இது முற்றிலும் மாற்றப்பட வேண்டிய ஒன்று.
இத்தகைய வேண்டத்தகாத செயற்பாடுகள் தொடர்பாக நிகழ்வு சம்மந்தப்பட்ட நபர்களோடு பேச முற்பட்டவேளை அவர்கள் தந்த பதில் மிகுந்த மன வேதனையையும் சோர்வையும் தந்தது. இவ்வாறான நிலைமையைக் கட்டுப்படுத்துவதன் மூலம் நிகழ்வில் பங்குபெற்றுகின்ற பலரை இழக்கவேண்டி வரும் ஆகையால் இத்தகைய செயற்பாடுகள் தொடர்பாக பல்வேறுபட்ட ஆதங்கங்கள் இருக்கின்ற பொழுதிலும் நழுவல் போக்கினை கடைப்பிடித்ததனை அவதானிக்க முடிந்தது.
இவ்வாறான குழப்பகரமான பிறழ்வான நிகழ்வுகளைப்பார்த்து அடைந்த மன வேதனையோடு இந்நிலைப்பாட்டினை மாற்ற வேண்டும் என்கின்ற உயரிய நோக்கத்தினைக் கொண்டும் இக்கட்டுரையை எழுதுகின்றோம். மேற்கூறிய குழப்பங்களுக்கு காரணமானவர்கள் யார்? அவர்களது பின்னனி என்ன?. இவர்கள் மிகுந்த ஆர்வக்கோளாறு காரணமாகவோ ஒன்று கூடலின் நோக்கம் பற்றிய தெளிவற்றோ இவ்வாறு நடந்து கொள்கிறார்களா?. அல்லது எமது போராட்டம் மீதான வெறுப்பின் காரணமாக இவ்வாறு நடந்து கொள்ளலாம். எனவே இவ்வாறானவர்கள் தொடர்பாக நிகழ்வு ஒழுங்கமைப்பாளர்கள் அதிகம் கவனம் செலுத்துவதோடு அதில் பங்கு பெற்றும் ஒவ்வொருவரும் இனியாவது மிகுந்த கரிசணையோடு இருப்பது சாலச்சிறந்து.
எமது விடுதலைப்போரட்டமும் அதற்கு ஆதரவான எழுச்சி நிகழ்வுகளும் எமது விடுதலையை நிச்சயம் விரைவுபடுத்தும். எனவே இவ்வாறான எழுச்சி நிகழ்வுகளில் நெகிழ்வுப்போக்குகளைக் கடைப்பிடிக்காது ஏற்கனவே வகுக்கப்பட்டுள்ள ஒழுக்க நியமங்களைப் பின்பற்றிநடப்பதுடன் எமது விடுதலையானது இந்தத் தலைமுறையால் எட்ட முடியாது போனால் அடுத்த தலைமுறையாவது விடுதலையடைய சரியான முறையில் எமது போராட்டப் பணிகளை அவர்களின் கையில் கொடுப்பது முக்கியமானது.
“இதனை இதனால் இவன் முடிக்குமென்றாய்ந்து
அதனை அவன்கண் விடல் ”