தமிழர்களுக்கான தீர்வை ஒரே குரலில் கூறுங்கள்


தமிழ் மக்களுக்கான தீர்வு என்ற விடயத்தில் இலங்கை அரசுக்கான சர்வதேச அழுத்தம் மிகவும் அவசியமானதாகும்.

சர்வதேச அழுத்தம் இல்லையாயின் இனப்பிரச்சினைக்கான தீர்வு என்பதும் சாத்தியப்படமாட்டாது.
அதேநேரம் சர்வதேச அழுத்தம் என்பதற்கு அப்பால், தமிழ் மக்களின் ஒருமித்த குரல் என்பதும் கட்டாயமானதாகும்.

எங்களுக்கான தீர்வு இதுவாகவே இருக்க முடியும் என்று ஒரே குரலில் தமிழ் மக்கள் கூறுவார்களாயின் அதனை சர்வதேச சமூகம் நிச்சயம் ஏற்றுக் கொள்ளும். 

எனவே, தமிழ் மக்களுக்கான தீர்வுத்திட்டம் என்ற விடயத்தில் தமிழர்களின் ஒன்றுபட்ட குரலே வலிமையானதாக இருக்கும். இதனைத் தமிழ்த் தரப்புக்கள் உணர்ந்து கொள்வது அவசியம். 
இதனை விடுத்து ஆளுக்கொரு தீர்வுத்திட்டம் தயாரிக்க முற்பட்டால் அதன் விளைவு எங்களுக்கு பாதகமாகவே அமையும்.

ஆக, ஒரு முழுமையான,  ஏற்புடையதான தீர்வுத் திட்டம் ஒன்றை தமிழ் மக்கள் பேரவை தயாரித்துள்ள நிலையில், ஏனைய அமைப்புக்கள் தாங்களும் தீர்வுத்திட்டம் தயாரித்தல் என்பதை விடுத்து, 

தமிழ் மக்கள் பேரவை தயாரித்த தீர்வுத்திட்டத்தை  ஆராய்ந்து அவற்றை ஏற்றுக் கொள்ளுதல் அல்லது திருத்தங்களை முன்வைத்து குறித்த தீர்வுத்திட்டத்தை மேலும் செம்மைப்படுத்தல் என்ற ஒரு நிலைப்பாட்டுக்கு வந்தாக வேண்டும். 

இவ்வாறு செய்வதன் மூலம் அனைத்துத் தமிழ் மக்களும் ஏற்றுக்கொண்டதான தீர்வுத்திட்டம் தமிழர் தரப்பில் உருவாகிவிடும்.

இதன் பின்னர் இலங்கை அரசாயினும் சரி; சர்வதேச சமூகமாயினும் சரி எவரிடமும் இதுவே எங்களுக்கான தீர்வுத்திட்டம்.  இதனையே தமிழ் மக்கள் ஏற்றுக் கொள்வர் என்று உறுதிபட நாம் கூறமுடியும். 

இதனைவிடுத்து தமிழ் மக்கள் பேரவை தீர்வுத் திட்டத்தை தயாரிக்கும் நல்லதொரு முயற்சியை, எவரும் செய்யாத வேளையில் செய்து முடித்த பின்பு நாங்களும் தீர்வுத்திட்டம் தயாரிப்போம் என்று கிளர்ந்தெழுவது தமிழ் மக்கள் சார்ந்த செயற்பாடாக இருக்க முடியாது.

மிகப்பெரும் இழப்புகளைச் சந்தித்த தமிழினம்  எதுவும் இல்லாமல் வாழ்வதென்பது எந்த வகையிலும் ஏற்புடையதன்று என நினைத்தால், 
எங்கள் இனம் எதிர்காலத்திலாவது சுதந்திரமாக வாழ வேண்டும் என்று நாம் கருதினால், ஒட்டுமொத்த தமிழினமும் ஒன்றாக-ஒரே குரலில்; ஓ! சர்வதேசமே எங்கள் மீது உனக்கு கரிசனை இருந்தால் நாங்களும் இந்த நாட்டில் நிம்மதியாக வாழ வேண்டும் என்று நீ நினைத்தால்,

இதோ! எங்களுக்கான தீர்வுத்திட்டம். இதை அமுலாக்கு என்று கேட்பதே ஒரே வழியாக இருக்கும். இதனைச் செய்வதாக இருந்தால், தமிழ் மக்கள் பேரவை தயாரித்த தீர்வுத்திட்டத்தை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உள்ளிட்ட கட்சிகளும் பொது அமைப்புகளும் ஆராய்ந்து திருத்தங்கள் இருப்பின் அதனை முன்மொழிந்து செம்மையாக்கி தமிழ் மக்கள் பேரவை தயாரித்த தீர்வுத்திட்டத்தை தமிழ் மக்கள் அனைவரும் தமக்கான தீர்வாக முன் வைக்கின்றனர் என ஒரே குரலில் வெளிப்படுத்துவதே சிறந்ததும் தமிழ் மக்களுக்கு நன்மை தரக் கூடியதுமான செயலாகும்.    
Share this article :
Print PDF

Related Post:

 
Support : Eelam5.com | Untamil.com | News4tamil.com
Powered by Eelanila
Copyright © 2011. ஈழநிலா.கொம் - All Rights Reserved
Eelanila.com
Design by: Nilavan Published by: Eelanila