வளலாய் மக்களின் வாழ்வாதாரத்துக்கும் வளத்துக்கும் உறுதுணையாக இருந்த மக்களின் சொந்த நிலங்களை மேலாதிக்க நிலையில் அபகரித்து வளலாய் மாதிரிக்கிராம வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படுவதை நிலத்தின் உரிமையாளர்களும் வளலாய் மக்களும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்று வளலாய் மீள் குடியேற்ற செயற்குழு அறிவித்துள்ளது.
வளலாய் கிராமத்தில் 240 ஏக்கர் நிலத்தில் ஆயிரத்து 22 குடும்பங்களை குடியேற்றுவதற்கு மாதிரிக் கிராமம் அமைப்பது தொடர்பாக அரசு அறிவித்தல் செய்துள்ளது.
இந்தக் குடியிருப்பில் வலி வடக்கில் இருந்து இடம்பெயர்ந்து முகாம்களில் தங்கியிருக்கும் குடும்பங்களைக் குடியேற்றம் செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதற்கு வளலாய் மீள்குடியேற்ற செயற்குழு தனது ஆட்சேபனையை வெளியிட்டுள்ளது.
வளலாய் மீள்குடியேற்ற செயற் குழுநிர்வாகியான ஓய்வுநிலை நிர்வாக சேவை அதிகாரி வ.கந்தசாமி கருத்துத் தெரிவிக்கையில்;
"மாதிரிக்கிராமம் அமைப்பதற்கு அரசு அறிவித்துள்ள காணிகள் வளலாய் மக்களின் பூர்வீக சொத்து; இதற்கான உறுதிகள், ஆவணங்கள் உள்ளன. அவற்றைச் சமர்ப்பித்து நிலத்தின் உரிமையை மீளப் பெறுவதற்கு நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இந்த நிலம் வளலாய் மக்களின் வாழ்வாதாரத்துக்கும் வளத்துக்கும் நிலைக்களமாக இருந்தது. இதைப் பாதுகாப்பு வலயம் என்று அறிவித்து பாதுகாப்பு வேலி அமைத்து உள்ளடக்கி அரசு தனது விருப்பத்துக்கு ஏற்ப நடவடிக்கையை மேற்கொண்டு வருகின்றது. இதனை வளலாய் மீள்குடி யேற்ற செயற்குழு வன்மையாகக் கண்டிக்கின்றது.
2013 ஆம் ஆண்டு மஹிந்த அரசு முன்னெடுத்த மாதிரிக் கிராம வேலைத்திட்டம் மக்களின் எதிர்ப்பை அடுத்து கைவிடப்பட்டது. அதனையே புதிய ஜனாதிபதி தலைமையிலான அரசு செயற்படுத்த முற்படுகின்றது.
பெரும்பான்மை இன அரசியல் தலைவர்கள் ஒரேமாதிரித்தான் செயற்படுகின்றனர். தமிழர்களின் உணர்வுகளை மதிக்கவில்லை என்பதையே இது எடுத்துக் காட்டுகின்றது'' என்று தெரிவித்தார்.
வளலாய் மாதிரிக்கிராம வேலைத் திட்டத்துக்கு தமிழ் தேசியக்கூட்டமைப்பும் தனது கண்டனத்தைத் தெரிவித்துள்ளது.