
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தர் மற்றும் வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் ஆகியோரைக் கைது செய்து விசாரணை செய்யுமாறு வலியுறுத்தி கடும் பௌத்த இனவாத அமைப்புக்களான பொதுபல சேனா, சிங்கள ராவய, ராவணா பலய ஆகிய அமைப்புகள் பொலிஸ் தலைமையகத்தில் நேற்று (சனிக்கிழமை) முறைப்பாடு செய்துள்ளன. இவர்கள் நாட்டில் பிரிவினையினை தூண்டுவதாகவும் புலிகளை நியாயப்படுத்தி ஆயுதப் போராட்டத்தை மீண்டும் தோற்றுவிக்கும் வகையில் செயற்படுவதாகவும் அந்த அமைப்புக்கள் குற்றம் சுமத்தியுள்ளன. பொலிஸாரிடம் கொடுக்கப்பட்ட முறைப்பாட்டிற்கு அமைய விசாரணை உரிய முறையில் மேற்கொள்ளப்படவேண்டும் எனவும், அவ்வாறு பொலிஸ் விசாரணைகள் இடம்பெறாது போனால் நீதிமன்றத்தை நாடவுள்ளதுடன், சிங்கள அமைப்புக்களை ஒன்றிணைத்து பாரிய ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடவுள்ளதாகவும் எச்சரித்துள்ளன. வடக்கு கிழக்கு பகுதிகள் மொழிசார் பிராந்தியங்களாக உருவாக்கப்பட வேண்டும் எனவும் மலையக தமிழ் மக்களின் பிராந்தியங்களும் உருவாக்கப்பட வேண்டும் எனவும் வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்கினேஸ்வரன் கடந்த சில வாரங்களுக்கு முன்னர் தெரிவித்திருந்த நிலையில் அதனை கண்டிக்கும் வகையில் பொதுபல சேனா, சிங்கள ராவய, ராவணா பலய ஆகிய அமைப்புகள் கடும் எதிர்ப்பினை தெரிவித்திருந்தன. அதேபோல் எதிர்க்கட்சி தலைவர் இரா.சம்பந்தன் எதிர்க்கட்சி தலைவர் என்ற ரீதியில் செயற்படாது தமிழ் மக்கள் சார்ந்து தனது முடிவுகளை எடுப்பதாகவும் புலிகளை நியாயப்படுத்தும் வகையில் கருத்துகளை முன்வைப்பதாகவும் தெரிவித்தனர். இந்த நிலைலேயே வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்கினேஸ்வரன் மற்றும் எதிர்க்கட்சி தலைவர் இரா.சம்பந்தன் ஆகியோரை உடனடியாகக் கைதுசெய்யக்கோரி பொதுபல சேனா, சிங்கள ராவைய, ராவணா பலய ஆகிய அமைப்புகள் கோட்டையில் அமைந்துள்ள பொலிஸ் தலைமை அலுவலகத்தில் முறைப்பாடு செய்துள்ளன .