ஐந்து வருடங்கள் ஏமாந்தது போதும்: கிளிநொச்சியில் மக்கள் கவனயீர்ப்பு போராட்டம்

காணிப் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு தரக்கோரி கண்டாவளை பிரதேச செயலர் பிரிவு மக்கள் இன்று கிளிநொச்சியில் திரண்டு கவனயீர்ப்பு போராட்டத்தினை நடாத்தியுள்ளனர்.
கிளிநொச்சி மாவட்டத்தின் கண்டாவளை பிரதேச செயலர் பிரிவில் உள்ள நாதன்குடியிருப்பு, உழவனூர் மற்றும் புதிய புன்னைநீராவி ஆகிய கிராமங்களை சேர்ந்த மக்கள்,  இந்தக் கிராமங்களில் கடந்த 25 வருடங்களுக்கு மேலாக வசித்து வருகின்றனர். மத்திய வகுப்பு திட்ட காணிகளில் வசித்துவரும் இவர்களுக்கு இதுவரை காணி அனுமதிப்பத்திரம் வழங்க நடவடிக்கை எடுக்காததால் இவர்களுக்கு கிடைக்கக்கூடிய வீட்டுத்திட்டம் மின்சாரம் மற்றும் வீதி வசதிகள் என்பனவும் அபிவிருத்தி திட்டங்களும் கிடைக்க முடியாத அவலநிலை ஏற்பட்டுள்ளது.
எனவே இந்த மக்கள் தமது காணிப் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு தரக்கோரி இன்று பெரும் கவனயீர்ப்பு போராட்டமொன்றை கிளிநொச்சி கந்தசாமி கோவில் முன்றலில் முன்னெடுத்திருந்தனர்.

இப்போராட்டத்தினையடுத்து அங்கிருந்து கிளிநொச்சி கச்சேரிக்கு பேரணியாகச் சென்று அங்கு ஜனாதிபதிக்கான மகஜரை கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபரிடம் கொடுத்துள்ளதுடன், யாழ்ப்பாணம் கிளிநொச்சி மாவட்டங்களின் பா.உறுப்பினர் சி.சிறீதரனின் அலுவலகம் சென்று அங்கும் மகஜர்களை கையளித்துள்ளனர்.
இந்த மகஜரை பெற்றுக் கொண்ட பா.உறுப்பினர் சி.சிறீதரன் அங்கு மக்களுக்கு கருத்துத் தெரிவிக்கையில்,
கண்டாவளையின் உழவனூர், நாதன்திட்டம், புதிய புன்னை நீராவி உட்பட்ட ஏனைய கண்டாவளை பிரதேச மக்களின் தீர்க்கப்படாத பிரச்சினைகள் தொடர்பாக அறிந்துள்ளேன்.
இவற்றிற்கு தீர்வு காணும் வகையில் வடமாகாண முதலமைச்சர், கட்சியின் தலைவர் இரா.சம்மந்தன், பா.உறுப்பினர் மாவை.சேனாதிராசா, மீள்குடியேற்ற அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் ஆகியோருக்கு அறியத்தருவதுடன் பிரச்சினைகளுக்கு தீர்வு காண நடவடிக்கை எடுப்பதாகவும் தெரிவித்தார்.
Share this article :
Print PDF

Related Post:

 
Support : Eelam5.com | Untamil.com | News4tamil.com
Powered by Eelanila
Copyright © 2011. ஈழநிலா.கொம் - All Rights Reserved
Eelanila.com
Design by: Nilavan Published by: Eelanila