யுத்தக் குற்றச் செயல் விசாரணைகள் குறித்த கெடுபிடிகளை அமெரிக்க தளர்த்திக்கொள்ளக் கூடாது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமசந்திரன் தெரிவித்துள்ளார்.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையினால் இலங்கை யுத்தக் குற்றச் செயல்கள் தொடர்பில் நடத்தப்பட்டு வரும் விசாரணைகளை தொடர்ந்தும் அமெரிக்கா கண்காணிக்க வேண்டுமென அவர் கோரியுள்ளார்.
இலங்கைக்கு விஜயம் செய்துள்ள அமெரிக்க துணை ராஜாங்கச் செயலாளர் நிசா பிஸ்வாலை இன்றைய தினம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சந்திக்க உள்ளது.
தமிழ் மக்கள் எதிர்நோக்கி வரும் பிரச்சினைகள் குறித்து இன்றைய தினம் நடத்தப்பட உள்ள சந்திப்பில் கலந்துரையாடப்பட உள்ளதாகத் தெரிவித்துள்ளார். யுத்தக் குற்றச் செயல் விசாரணைகள் குறித்த நிலைப்பாட்டை தளர்த்திக் கொள்ளக் கூடாது என கோர உள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
வடக்கு கிழக்கு தமிழ் மக்கள் தொடர்பிலான நான்கு முக்கிய விவகாரங்கள் குறித்து இன்றைய சந்திப்பில் கவனம் செலுத்தப்பட உள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.
அரசியல் கைதிகள், காணாமல் போனவர்கள், இடம்பெயர் மக்களை மீள்குடியேற்றல் போன்ற விடயங்கள் குறித்து தெளிவுபடுத்த உள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
சில அரசியல் கைதிகள் எவ்வித கிரமமான விசாரணைகளுக்கும் உட்படுத்தப்படாமல் கடந்த பத்து பதினைந்து ஆண்டுகளாக தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.