கலகத்தில் பிறக்கும் நீதி

orupaarvai7865கலகம் பிறந்தால் நீதி பிறக்கும் எனத் தமிழில் ஒரு பழமொழி உண்டு. சீனாவில் முதலாளித்துவம் புத்துயிர் பெறும் நடவடிக்கைகளுக்கு எதிராகச் செங்காவலர்கள் என அழைக்கப்பட்ட இளைஞர்கள் மாபெரும் கலாசாரப் புரட்சி என்ற போராட்டத்தில் இறங்கியபோது சீனத் தலைவர் மாஓசேதுங் அவர்கள் கலகம் செய்வது நியாயமானது என அறைகூவல் விடுத்தார்.
அதாவது அநியாயங்கள் அமைதியான முறையில் மேலோங்கும்போது கலகங்கள் நியாயங்களைத் தேடி எழுச்சி பெறுகின்றன. அது மட்டுமன்றி அவை தவிர்க்க முடியாதவையாகவும் மாறிவிடுகின்றன. தமிழ் தேசியக் கூட்டமைப்பைப் பொறுத்தவரையில் மாகாணசபை உறுப்பினர்களான சிவாஜிலிங்கம், அனந்தி சசிதரன் ஆகியோர் அதன் தலைமையில் உள்ள சிலரால் வேண்டத்தகாத குழப்பவாதிகளாகவும் கலகக்காரர்களாகவும் பேசப்படுகின்றனர். அவர்களின் தன்னிச்சையான போக்குகளும் ஏற்றுக்கொள்ளப்படமுடியாதவையாகத் தென்பட்ட போதிலும் அவை தவிர்க்க முடியாதவையாகவே உள்ளன.
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைமையில் உள்ள ஒரு சிலரின் ஊசலாட்டப் போக்கையும் சரணாகதி முயற்சிகளையும் அம்பலப்படுத்துவதில் அவர்களின் தீவிரமான நடவடிக்கைகள் காத்திரமான பங்கை வகித்துவருகின்றன. குறிப்பாக இலங்கையில் இடம்பெற்றதாகக் கூறப்படும் போர்க்குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் என்பன தொடர்பாக ஒரு சர்வதேச விசாரணையைக் கோரி அவர்கள் ஜெனிவா புறப்படவுள்ளதும் தெரிவித்திருப்பதும் அங்கு சில பயனுள்ள நடவடிக்கைகளை எடுக்கப்போவதாகவும் தெரிவித்திருப்பது ஒரு குறிப்பிடத்தக்க ஆக்கபூர்வமான நடவடிக்கைகளாகும்.
சிவாஜிலிங்கம் அவர்கள் வடமாகாண சபையில் நிறைவேற்றப்பட்ட இனப்படுகொலை தொடர்பான தீர்மானத்தின் பிரதிகளையும், போர்க்குற்றங்கள் தொடர்பான விசாரணைகள் ஒரு சர்வதேசத் தீர்ப்பாயம் மூலம் மேற்கொள்ளப்படவேண்டும் என்ற தீர்மானத்தின் பிரதியையும் முதலமைச்சரின் கையெழுத்துடன் ஜெனீவாவில் வெளிநாட்டுப் பிரதிநிதிகளிடம் விநியோகம் செய்யவுள்ளார். இது வடபகுதி மக்களின் அபிலாசைகளைச் சர்வதேசத்தின் முன்பு கொண்டு செல்லும் ஒரு காத்திரமான முயற்சியாகும். இதற்கு முதலமைச்சர் சி.வி. விக்கினேஸ்வரன் அவர்களும் தனது முழுமையான ஆதரவை வழங்கியுள்ளார்.
அதேவேளை அனந்தி சசிதரன் போருக்குள் வாழ்ந்து போரின் சகல கொடுமைகளையும் கண்களால் கண்டவர் என்பதாலும் அதன் பாதிப்புகளையும் அனுபவித்தவர் என்பதாலும் தன் கணவர் உட்படக் காணாமற் போனோர் தொடர்பான போராட்டங்களில் தீவிரமாக ஈடுபட்டு வருபவர் என்பதாலும் அவரும் எத்தகைய தடை ஏற்பட்டாலும் நான் ஜெனீவா சென்று வெளிநாட்டுப் பிரதிநிதிகளுக்கு எமது பிரச்சினைகளை விளக்கப்போவதாக உறுதிபடத் தெரிவித்துள்ளார். அதன் காரணமாகத் தான் மாகாணசபை உறுப்பினர் பதவியிலிருந்து நீக்கப்பட்டாலோ தமிழரசுக் கட்சியிலிருந்து வெளியேற்றப்பட்டாலோ கூட தன் பணியிலிருந்து பின்வாங்கிவிடவில்லையெனவும் கூறியுள்ளார்.
இவர்கள் இருவரும் மேற்கொள்ளவுள்ள நடவடிக்கைகள் அரசாங்கம் சர்வதேச விசாரணைகளை நிராகரித்து வரும் இவ்வேளையும் மிக மிக அவசியமானவையாக இருந்தபோதிலும் வடமாகாணசபை அவைத் தலைவர் சி.வி.கே சிவஞானம் அவர்கள் ஜெனீவா கூட்டத்தொடரில் மாகாண சபை உறுப்பினர்களை அனுமதிக்கப்போவதில்லை எனத் தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே சர்வதேச விசாரணை முடிந்துவிட்டது எனவும் அதன் அறிக்கை வெளிவந்த பின்பே அடுத்த கட்ட நடவடிக்கை பற்றி ஆலோசிக்க முடியுமெனத் தெரிவித்த தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் தற்சமயம் மக்கள் ஆணையை நிராகரிக்க முடியாதெனவும் அதேவேளையில் சர்வதேசத்துடன் ஒத்துப்போகாமல் விடமுடியாதெனவும் ஒரு மழுப்பலான கருத்தை வெளியிட்டுள்ளார்.
அதேவேளை தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களாக செல்வம் அடைக்கலநாதன், சிவசக்தி ஆனந்தன், சிவஞானம் சிறீதரன் போன்றோர் சர்வதேச விசாரணை கோரி தமது ஆதரவைத் திடமான முறையில் வெளிப்படுத்தியுள்ளனர்.
ஆனால் தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஜெனிவாவுக்கு அதன் சார்பில் போகப்போவது சுமந்திரனும் அவர் தலைமையிலான சில சட்டத்தரணிகளும் என தெரிவித்துள்ளது. ஏற்கனவே சர்வதேச விசாரணை என்ற பிரச்சனையில் சுமந்திரன் எதிர்ப்போக்கான கருத்தைக் கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆனால் சர்வதேச விசாரணை கோரி சர்வதேசப் பொறிமுறைக்கான தமிழர் அமைப்பு பெரும் மக்கள் ஆதரவுடன் தீவிரமாக கையெழுத்துக் கோரும் போராட்டத்தை முன்னெடுத்துவருகிறது. அதேபோல சர்வதேச விசாரணை கோரி சிவாஜிலிங்கம், அனந்தி சசிதரன் ஆகியோர் தலைமையில் இடம்பெற்ற கிளிநொச்சியிலிருந்து யாழ்ப்பாணத்துக்கான நடைபயணம் மக்களின் பேராதரவுடன் இடம்பெற்று நிறைவுபெற்றுள்ளது.
இன்னொருபுறம் பாதுகாப்பு ராஜாங்க அமைச்சர் ரூவான் விஜயவர்த்தனா சர்வதேசப் பொறிமுறையை ஏற்கப்போவதில்லையெனத் திடமாகத் தெரிவித்துள்ளார். கடந்த 12ம் திகதி மங்கள சமரவீர தலைமையிலான குழு ஜெனிவா நோக்கிப் புறப்பட்டுப் போய் தமது நியாயங்களை வெளிநாட்டுப் பிரதிநிதிகளுக்கு விளக்கி வருகின்றனர்.
ஆனால் தமிழ் தேசியக் கூட்டமைப்பு எந்த ஒரு நடவடிக்கையையும் எடுக்கவில்லை. இந்தியாவின் ஜ.நா. பிரதிநிதி தீபன் சிங்ஹா உள்ளக விசாரணைக்குத் தனது ஆதரவை உறுதியாக வெளியிட்டுவிட்டபோதிலும் சம்பந்தன் அவர்கள் ‘இன்டிப்பென்டன்ற்’ நாளிதழில் இந்தியா சர்வதேச விசாரணைக்கு ஆதரவு தரும் எனத் தமிழ் மக்களை ஏமாற்ற முனைகிறார்.
எப்படியோ சர்வதேசப் பொறிமுறைக்கான தமிழர் அமைப்பு சிவாஜிலிங்கம், அனந்தி சசிதரன் ஆகியோர் கலகத்தைத் தொடக்கிவிட்டனர். இக்கலகத்தால் நீதி கிடைக்கவேண்டும் என்பதே தமிழ் மக்களின் அபிலாசையாகும்.
Share this article :
Print PDF

Related Post:

 
Support : Eelam5.com | Untamil.com | News4tamil.com
Powered by Eelanila
Copyright © 2011. ஈழநிலா.கொம் - All Rights Reserved
Eelanila.com
Design by: Nilavan Published by: Eelanila