எதிர்வரும் பொதுத் தேர்தல் மகிந்தவை காப்பாற்றும்

எதிர்வரும் ஏப்ரல் மாதம் பாராளுமன்றம் கலைக்கப்பட்டு ஜூன் மாதம் பொதுத் தேர்தல் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஜனாதிபதித் தேர்தல் முடிந்து நான்கு மாதங்களுக்குள் பாராளுமன்றத்தைக் கலைப்பது ஜனாதிபதி மைத்திரிக்கு ஆரோக்கியமானதல்லதாயினும் தேர்தலின் போது, தான் வழங்கிய வாக்கைக் காப்பாற்றும் பொருட்டு பாராளுமன்றக் கலைப்பும் பொதுத் தேர்தலும் உரிய காலத்தில் இடம்பெறும் என உறுதிபடக் கூறமுடியும்.

பாராளுமன்றத் தேர்தல் நடைபெறுவதற்கு முன்னதாக, முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்­வை தேர்தலில் போட்டியிடாதவாறு தடுக்கும் வகையில் சில திட்டங்களை மைத்திரி அரசு செய்யும். அதாவது நடைபெற இருக்கும் பொதுத் தேர்தலில் மகிந்த  ராஜபக்­ போட்டியிட்டு, பிரதமர் பதவியைக் கைப்பற்ற வேண்டும் என மகிந்தவின் விசுவாசிகள் விரும்புகின்றனர்.

ஜனாதிபதியாக இருந்த ஒருவர் பாராளுமன்ற உறுப்பினர் பதவிக்காகப் போட்டியிடுவதா? என்ற கெளரவப் பிரச்சினை இவ்விடத்தில் ஏற்படச் செய்யுமாயினும் மகிந்த ராஜபக்­வைப் பொறுத்தவரை அப்படியான கெளரவப் பிரச்சினைகள் ஏதும் இருப்பதாகத் தெரியவில்லை.

மைத்திரிக்கு தலையிடி கொடுப்பதற்காகவேனும் பாராளுமன்ற உறுப்பினராகத் தான் வரவேண்டும் என மகிந்த ராஜபக்­ நிச்சயம் நினைப்பார். எனினும் அந்த நினைப்பு நிறைவேறுமா? என்பதுதான் கேள்விக்குரிய விடயம்.

பொதுத் தேர்தலில் மகிந்த ராஜபக்­ போட்டியிடுவதை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன விரும்பினாலும் பிரதமர் ரணில் ஒரு போதும் விரும்பமாட்டார். எனவே எதிர்வரும் பொதுத் தேர்தலில் மகிந்த போட்டியிடுவதை தடுப்பதற்கு இரண்டு வழிகள் உண்டு.

அதில் ஒன்று, பல்வேறு குற்றச்சாட்டுக்களை முன்வைத்து மகிந்தவைச் சிறையில் அடைத்து, தேர்தலில் போட்டியிடுதல் என்ற நினைப்பை அவரிடம் இல்லாமல் செய்தல். இதைச் செய்யும் போது மகிந்த தரப்பு ஜனாதிபதி மைத்திரிக்கும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் எதிராகக் கடும் பிரசாரம் செய்யும்.

புலிகளை வென்ற சிங்கத்தை சிறையில் அடைத்து வைத்திருப்பது முறையோ! என்று விமல் வீரவன்ச போன்றவர்கள் கூப்பாடு போடுவர்.

கூடவே, மகிந்தவை சிறையில் அடைத்து வைத்திருப்பதன் நோக்கம் விடுதலைப் புலிகளை மீண்டும் எழுகை பெறச் செய்வதே என்ற பிரசாரமும் முழங்கும். எனவே இது ஒரு நல்ல வியூகம் அல்ல என மைத்திரி தரப்பு முடிவு செய்யும்.

இங்குதான் ரணிலின் இராஜதந்திரம் வேலை செய்யும். அதாவது மகிந்த ராஜபக்­வை பிரதமர் ரணில் சந்திப்பார். சந்தித்து நீங்கள் சட்டத்திற்குப் புறம்பாகச் சேர்த்த சொத்துக்கள், உங்கள் மீதான குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் நாங்கள் எதுவும் கண்டு கொள்ள மாட்டோம். இதற்காக நீங்கள் பொதுத் தேர்தலில் போட்டியிடாமல்-அரசியலில் இருந்து ஒதுங்க வேண்டும் என்று கேட்பார்.

என்ன செய்வது? எம்.பியாகுவதை விட, மாபெரும் குற்றச்சாட்டுக்களில் இருந்து தப்புவதே மேல் என்று மகிந்த முடிவு செய்வார். அப்படி ஒரு முடிவை ரணில் விக்கிரமசிங்கவினால் நிச்சயம் ஏற்படுத்த முடியும்.

ஆக, எதிர்வரும் பொதுத் தேர்தல் மகிந்தவை காப்பாற்றுகின்ற அருமருந்தாக அமையப் போகிறது என்பதை மட்டும் இப்போதைக்குக் கூறிக் கொள்ள முடியும்.   
Share this article :
Print PDF

Related Post:

 
Support : Eelam5.com | Untamil.com | News4tamil.com
Powered by Eelanila
Copyright © 2011. ஈழநிலா.கொம் - All Rights Reserved
Eelanila.com
Design by: Nilavan Published by: Eelanila