விக்னேஸ்வரனுடனான முரண்பாடு காரணமாக அவருடனான சந்திப்பைத் தவிர்த்துக்கொண்ட பிரதமர், தன்னுடைய நிகழ்வுகளுக்கு மாகாண சபை அமைச்சர்களுக்கும் அழைப்பு அனுப்பவில்லை. இதனால் மாகாண சபை உறுப்பினர்களும் ரணிலின் நிகழ்வுகளைப் புறக்கணிததார்கள். இருந்தபோதிலும் வடமாகாண ஆளுநர் பாளிகார இந்த நிகழ்வுகளில் பங்கேற்றார்.
வடமாகாண சபை இந்த நிகழ்வுகளைப் புறக்கணித்தமை ரணிலின் விஜயத்தின் போது முக்கிய விவகாரமாக நோக்கப்பட்டது. சர்வதேசத்துக்கும் இது ஒரு செய்தியை வெளிப்படுத்தியது.
இந்தப் பின்னணியில் வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுடனான முரண்பாடுகளைத் தவிர்த்துக்கொண்டு, அவருடன் இணைந்து செயற்பட முன்வர வேண்டும் என சிவில் அமைப்புக்கள் மற்றும் முக்கிய பிரமுகர்களிடமிருந்து கடுமையான அழுத்தம் பிரயோகிக்கப்பட்டிருக்கின்றது.
பிரதமரின் விஜயம் குறித்து அவரது அலுவலகத்திலிருந்து முதலமைச்சருக்கு எந்தவிதமான அழைப்பும் அனுப்பப்பட்டிருக்கவில்லை. இதனையடுத்து வடமாகாண அமைச்சர்கள், உறுப்பினர்கள் ரணில் விக்கிரமசிங்க பங்குகொள்ளும் நிகழ்வுகள் எதிலும் கலந்துகொள்வதில்லை எனத் தீர்மானித்திருந்தனர்.
அதேவேளையில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர்கள் மாவை சேனாதிராஜா, ஈ.சரவணபவன், சுரேஷ் பிரேமச்சந்திரன் ஆகியோர் இந்த நிகழ்வுகளில் பங்குகொண்ட போதிலும், யாழ். மாவட்ட எம்.பி. சிவஞானம் சிறிதரன் இவற்றைப் புறக்கணித்ததுடன், அது தொடர்பில் அறிக்கை ஒன்றையும் வெளியிட்டிருந்தார். வடமாகாண சபைக்கு உத்தியோகபூர்வமாக அழைப்பு விடுக்கப்படாமையால்தான் இதனை தான் புறப்பணிப்பதாக சிவஞானம் தெரிவித்திருந்தார்.
இந்தப் பின்னணியில் ரணில் விக்கிரமசிங்க கலந்துகொண்ட பைவங்கள் பலவற்றிலும், “விக்கினேஸ்வரனுடன் முரண்பட வேண்டாம்” என அழுத்தம் கொடுக்கப்பட்டிருப்பதாகத் தெரியவருகின்றது. பொதுத் தேர்தல் நடைபெறவிருக்கும் நிலையில், ஐ.தே.க.வுக்கு இது பாதிப்பை ஏற்படுத்தும் எனவும் அவருக்கு எடுத்துக்கூறப்பட்டிருக்கின்றது.
மாகாண சபையுடன் முரண்பட்டுக்கொண்டு வடக்கில் ஐ.தே.க.வினால் அரசியல் செய்ய முடியாது எனவும் ரணிலுக்கு தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.
இந்தப் பின்னணியில் முதலமைச்சரையும், பிரதமரையும் சந்திக்கவைப்பதற்கான முயற்சிகளில் சில முக்கியஸ்த்தர்கள் இறங்கியிருப்பதாகவும் தெரிகின்றது. ஆளுநரும், மதப்பெரியார்கள் சிலரும் இது குறித்து இரு தரப்பினருடனும் ஏற்கனவே பேசியிருப்பதாகவும் நம்பிக்கையான வட்டாரங்கள் தெரிவித்தன.
இன்று சனிக்கிழமையும் ரணில் விக்கிரமசிங்க யாழ்ப்பாணத்திலேயே தங்கியிருப்பார் என்பதால், இன்றைய தினம் சந்திப்பு ஒன்றுகான ஏற்பாடுகள் செய்யப்படலாம் எனத் தெரியவருகின்றது. இதன் மூலம் முரண்பாடுகளை முடிவுக்குக் கொண்டுவர முடியும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
முதலமைச்சர் விடயத்தில் தாம் எதனையும் செய்ய முடியாது என கூட்டமைப்பின் தலைமையும் சொல்லிவிட் டநிலையில், மூன்றாவது தரப்பு மத்தியஸ்த்தத்தின் மூலம் சந்திப்புக்கான ஏற்பாடுகள் இடம்பெறுவதாகச் சொல்லப்படுகின்றது.