பிரித்தானியா சென்றுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு எதிராக அங்குள்ள தமிழர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளமையை கண்டித்து கொழும்பில் இன்று ஆர்ப்பாட்டம் ஒன்று நடந்தது.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன லண்டனுக்கு விஜயம் செய்திருந்த போது லண்டன் ஹீத்ரு விமான நிலையத்தில் எதிர்ப்பு ஒரு தொகுதியினர் தமது எதிர்ப்பை வெளியிட்டு இருந்தனர்.
வடக்கு கிழக்கு நல்லிணக்கத்திற்கான மக்கள் அமைப்பு என்ற பெயரில் சில இளைஞர்கள் இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு பிரித்தானிய தூதரகத்திற்குச்சென்று மகஜர் ஒன்றையும் கையளித்தனர்.
விடுதலைப் புலி ஆதரவாளர்கள் மற்றும் தீயசக்திகள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக அவர்கள் சுட்டிக்காட்னார்கள்.
வடக்கு கிழக்கில் சுமூகமான நிலமை நிலவுகின்ற போதும் அங்குள்ளவர்கள் இங்குள்ள நிலமையை மோசமானதாக சித்திரிப்பதாக அவர்கள் குறிப்பிட்டனர்.
இவ்வாறு தங்கள் சுயநலன்களுக்காக ஆர்ப்பாட்டம் செய்து இங்கு மீண்டும் யுத்தத்தை ஏற்படுத்த வேண்டாம் என்றும் அவர்கள் இதன்போது தெரிவித்தனர்.
எவ்வாறாயினும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கொச்சைத் தமிழில் பேசியிருந்தனர். இதன்போது சிங்களத்தில் பேட்டி தருமாறு கேட்டபோதும் தனக்கு சிங்களம் தெரியாது என கொச்சைத் தமிழில் பேசி இளைஞர் தெரிவித்தார்.
அத்துடன் குறித்த இளைஞரின் பெயரைக் கேட்டபோது முதலில் தடுமாற்றமடைந்த அவர் பின்னர் பரமநாதன் நகுலேந்திரன் என்பது தனது பெயர் எனக் கூறினார்.
மகிந்த ராஜபக்ச காலத்தில் ஐ.நா உள்ளிட்ட அமைப்புக்களுக்கும் புலம்பெயர் அமைப்புக்களுக்கும் எதிராக நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டப் பாணியில் குறித்த ஆர்ப்பாட்டமும் அமைந்திருந்ததா? என்ற கேள்வி எழுவதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
குளோபல் தமிழ் விசேட செய்தியாளர்