எதிர்க்கட்சித் தலைவர் பதவி கூட்டமைப்புக்கு கிடைக்கும் ஹெல உறுமய சீற்றம்

நாடாளுமன்றத்தின் எதிர்க் கட்சித் தலைவர் பதவி தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு கிடைக்கும் என பிவித்துரு ஹெல உறுமயவின் பொதுச் செயலாளரான மேல் மாகாணசபை உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

அப்படி நடந்தால், சர்வதேசத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப் பின் நிலைப்பாடுகளுக்கு கூடுதலான அங்கீகாரம் கிடைக்கும் எனவும் அவர் கூறியுள்ளார்.

கொழும்பில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு அந்த பதவி கிடைக்காவிட்டாலும் தமிழர்கள் என்பதால், தமக்கு எதிர்க்கட்சித் தலைவர் பதவி வழங்கப்படவில்லை எனவும் சர்வதேசத்திற்கு செய்திகளை கொண்டு செல்ல முடியும்.

முக்கியமான தருணங்களிலேயே தேசிய அரசாங்கங்கள் அமைக்கப்படும். இரண்டாம் உலக போரின் போது பிரித்தானிய பிரதமர் வின்ஸ்டன் சேர்ச்சில் அவ்வாறான தேசிய அரசாங்கம் ஒன்றை ஏற்படுத்தினார். எனினும் இலங்கையில் 1987 ஆம் ஆண்டு இந்திய ஆக்கிரமிப்பு நடந்த போதும், சுனாமி அனர்த்தம் ஏற்பட்ட போதும், புலிகளை தோற்கடித்த சந்தர்ப்பத்திலும் ஏற்படாத தேசிய அரசாங்கம், எந்த காரணத்திற்காக தற்போது அவசரமாக ஏற்படுத்தப்பட்டது.

எதிர்க்கட்சி என்ற வகையில், அரசாங்கத்திற்கு எதிராக செயற்படுவதன் மூலம் தமது அரசியல் நிலைப்பாடுகளுக்கு இடத்தை ஏற்படுத்திக் கொள்ள ஜே.வி.பிக்கும் சந்தர்ப்பம் கிடைத்துள்ளது. இது அந்த கட்சி பெற்றுள்ள வெற்றி.

எதிர்க்கட்சித் தலைவர் பதவி தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு கிடைப்பது அவர்களுக்கு வெற்றியென்பது போல், அரசாங்கத்தின் மீதான எதிர்ப்புகளை பகிர்ந்து கொள்வதன் மூலம் ஐக்கிய தேசியக் கட்சிக்கும் இது வெற்றியாகும்.

இவர்கள் அனைவரும் வெற்றி பெற்றுள்ள நிலையில், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தோல்வியடைந்துள்ளது.

1956 ஆம் ஆண்டு தல்துவே சோமராம ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஸ்தாபகர் எஸ்.டபிள்யு.ஆர்.டி. பண்டாரநாயக்கவை சுட்டுக்கொன்றார். 2015 ஆம் ஆண்டு மேலும் ஒரு சோமராமவினர் பண்டாரநாயக்கவை அரசியல் ரீதியாக கொலை செய்துள்ளனர்.

தல்துவோ சோமராமவுக்கு சட்டம் தண்டனை வழங்கியது. இந்த சோமராமாக்களுக்கு எதிர்வரும் தேர்தலில் தண்டனை கிடைக்கும் எனவும் உதய கம்மன்பில குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை தேசிய அரசாங்கம் அமைக்கப்பட்டமையினால் பாராளுமன்றத்தில் அடுத்த எதிர்க்கட்சித் தலைவர் யார்? என்ற கேள்வியும், தேசிய அரசாங்கத்தின் பொது இணக்கப்பாட்டின் அடிப்படையில் தற்போதைய எதிர்க்கட்சித் தலைவர் நிமல் சிறிபால டி சில்வா தொடர்ந்தும் எதிர்க்கட்சித் தலைவராக தொடர்வாரா என்ற கேள்வியும் எழும்பியுள்ளது.

நேற்றுமுன்தினம் வழங்கப்பட்ட அமைச்சரவை நியமனங்களை அடுத்து பாராளுமன்றத்தில் எதிர்க் கட்சிகளாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும், ஜே.வி.பியும் விளங்குகின்றன.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்றத்தில் ஜே.வி.பியை விடவும் அதிக உறுப்பினர்களைக் கொண்டிருக்கின்றது.

எனவே எதிர்க்கட்சித் தலைவராக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் நியமிக்கப்படலாம் என எதிர்பார்க் கப்படுகிறது.

2010ஆம் ஆண்டு இடம்பெற்ற பொது தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு 12 ஆசனங்களும் ஐக்கிய தேசிய கட்சிக்கு 60 ஆசனங்களும் ஜனநாயக கட்சிக்கு 07 ஆசனங்களும் கிடைக்கப்பெற்றமை குறிப்பிடத்தக்கது.
Share this article :
Print PDF

Related Post:

 
Support : Eelam5.com | Untamil.com | News4tamil.com
Powered by Eelanila
Copyright © 2011. ஈழநிலா.கொம் - All Rights Reserved
Eelanila.com
Design by: Nilavan Published by: Eelanila