முதலமைச்சரின் வாக்குறுதியை ஏற்காத உண்ணாவிரதிகள் ஆளுநரிடம் அடிபணிந்தனர்!


யாழ்ப்பாணத்தில் சுத்தமான குடிதண்ணீரை உறுதிப்படுத்தக் கோரியும், அடுத்த 78 மணித்தியாலயங்களுக்குள் தமக்கு தீர்வு அறிவிக்க வேண்டும் என்று வலியுறுத்தியும் யாழ். நல்லூர் ஆலய பகுதியில் உண்ணாவிரதப் போராட்டம், வடக்கு ஆளுநர் பளிகக்காரவின் உறுதிமொழியைத் தொடர்ந்து கைவிடப்பட்டது. 
யாழ்ப்பாணத்தில் சுத்தமான குடிதண்ணீரை உறுதிப்படுத்தக் கோரியும், அடுத்த 78 மணித்தியாலயங்களுக்குள் தமக்கு தீர்வு அறிவிக்க வேண்டும் என்று வலியுறுத்தியும் யாழ். நல்லூர் ஆலய பகுதியில் உண்ணாவிரதப் போராட்டம், வடக்கு ஆளுநர் பளிகக்காரவின் உறுதிமொழியைத் தொடர்ந்து கைவிடப்பட்டது.
           
விதைக் குழுமம், தூயநீருக்கான பாதிக்கப்பட்ட மக்கள் ஒன்றியம், சுற்றுச்சூழல் அமையம் ஆகிய அமைப்புக்களின் ஏற்பாட்டில் இந்தப் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டது. இந்த நிலையில் செவ்வாய் இரவு முதலமைச்சர் அடங்கிய வடக்கு மாகாண உறுப்பினர்கள் உண்ணாவிரதம் போராட்டத்தில் ஈடுபட்டவர்களைச் சந்தித்துக் கலந்துரையாடினர். இதன்போது எதிர்வரும் 12 ஆம் திகதிவரை பொறுத்திருக்குமாறும், அதன்பின்னர் தாம் பதில் தருவர் எனவும் வடக்குமாகாண முதலமைச்சர் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்களைக் கேட்டுக்கொண்டார்.
அதுவரை பொறுத்திருக்க முடியாது என்று குறிப்பிட்ட போராட்டக்காரர்கள், சுன்னாகம் பகுதிகளில் ஒயில் கலந்த தண்ணீரில் பாதிப்பு இல்லை என்றால் அதைப் பருகலாமா, இல்லையா? என்று எழுத்து மூலம் தமக்கு பதில் தரவேண்டும் என்றும் கோரினர். அதற்கும் 12ஆம் திகதிவரை அவகாசம் கேட்ட முதலமைச்சர், அமைச்சர்கள், வடக்கு மாகாண சபை உறுப்பினர்களிடம், "அதுவரை நாம் எந்தத் தண்ணீரைக் பருகுவது?" என்று கேட்டுள்ளனர். இந்த நிலையில் முதலமைச்சர் குழு அங்கிருந்து விலகிச்சென்றார்.
மீண்டும் இன்று வடக்கு மாகாண முதலமைச்சர் போராட்டத்தை கைவிடக் கோரி, தனது முடிவை எழுத்துமூலம் இன்று பிற்பகல் 2 மணியளவில் அறிவித்தார். முதலமைச்சரினால் அனுப்பப்பட்ட கடிதத்தில், உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் சார்பில் ஆறு மேலதிக நிபுணர்களின் பெயர்களைத் தருமாறும், அவர்கள் ஏற்கனவே நியமிக்கப்பட்ட ஒன்பது நிபுணர்களுடன் சேர்ந்து புதிய மீள் உருவாக்கப்பட்ட நிபுணர்கள் குழுவாக செயற்படுவார்கள் என்றும் - தற்போது இருக்கும் தரவுகளின் அடிப்படையில் சில கிணறுகளில் எண்ணெய், கிறீஸ் ஆகியன இருப்பது கண்டறியப்பட்டுள்ளன.
வேறு சிலவற்றில் அவ்வாறு காணப்படவில்லை. இதன் காரணத்தினாலேயே பாதிக்கப்பட்ட இடங்களில் இருக்கும் நீரை உட்கொள்வது உசிதமில்லை என்று கருதுகின்றோம். உரிய தீர்வு காணப்படும் வரையில் எம்மால் குடிதண்ணீர் விநியோகம் தொடர்ந்தும் முன்வைக்கப்படும். தர உறுதிப்பாடு, சீரான குடிதண்ணீர் வழங்கல் தொடர்பில் உரிய அதிகாரிகளின் மேற்பார்வை உறுதிப்படுத்தப்படும். நைத்திரேற்று நீரில் கலந்திருப்பதையும் சில கிணறுகளில் எண்ணெய், கிறீஸ் கலந்திருப்பதையும் அகற்ற நாம் மத்திய அரசையும், சர்வதேச நிறுவனங்களான உலக சுகாதார நிறுவனம் போன்றவற்றின் உதவியையும் நாட வேண்டியுள்ளது. இதற்கான நடவடிக்கைகள் உடனே எடுக்கப்படும்.
இதுபற்றி கௌரவ ஆளுநருக்கும் தெரியப்படுத்தப்படும். எனினும் செய்யப்பட்டுவரும் ஆய்வின் இறுதி அறிக்கை புதிய மீள் உருவாக்கப்பட்ட நிபுணர்கள் குழு கூடிய விரைவில் எமக்குச் சமர்ப்பிக்க வேண்டும். முன்னர் தயாரிக்கப்பட்ட முதல்கட்ட அறிக்கையும் இறுதி அறிக்கையும் மத்திய அரசாங்கத்திற்கும், உலக சுகாதார நிறுவனம் போன்றவற்றுக்கும் அடிப்படை ஆவணங்களாக அவர்களின் மேலதிக நடவடிக்கைகளுக்கு அனுசரனையாக அனுப்பப்படும். - என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
முதலமைச்சரால் அனுப்பப்பட்ட இந்தக் கடித்தில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்களுக்கும், தமது கோரிக்கைகளுக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை எனக் குறிப்பிட்ட போராட்டக்காரர்கள் அந்தக் கடிதத்தை ஏற்காது திருப்பியனுப்பி விட்டனர்.
இந்த நிலையில் வடக்கு மாகாண ஆளுநர் இன்று பிற்பகல் 2.30 மணியளவில் சம்பவ இடத்துக்கு வந்து போராட்டக்காரர்களுடன் கலந்துரையாடினார். ஆளுநருடன் யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் நா.வேதநாயகனும் அங்கு பிரசன்னமாகியிருந்தார். வட மாகாண ஆளுனர் எச்.எம்.ஜி.எஸ்.பலிஹக்கார, மற்றும் செயலாளர் பத்திநாதன் ஆகியோர் போராட்டக்காரர்களுடன் பேசி, எதிர்வரும் இரண்டு வாரங்களுக்குள் உரிய தீர்வைப் பெற்றுத்தருவதாகக் கோரி போராட்டத்தைக் கைவிடுமாறு கோரினார்கள்.
ஆளுனரின் அவகாசத்திற்கு சம்மதிக்காத போராட்டக்காரர்கள், ஒரு வாரத்தினுள் தீர்வு வேண்டும் என வாதிட்டனர். அதற்குச் சம்மதித்த ஆளுனர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கு நீர் வழங்கி உண்ணாவிரதத்தை நிறைவுக்குக் கொண்டு வந்தார்.
நேற்று ஆரம்பிக்கப்பட்ட இந்த உண்ணாவிரதப் போராட்டம். இன்று இரண்டாவது நாளாகவும் தொடர்ந்தது. இந்நிலையில், நேற்றிரவு குறித்த இடத்திற்கு விஜயம் செய்த வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் போராட்டக்காரர்களுடன் பேச்சு நடத்தினார். தூய குடிநீருக்கான மக்கள் அமைப்பின் பிரதிநிதிகளை கலந்துரையாடலுக்கு வருமாறு அழைத்திருந்தார். முதலமைச்சரின் உறுதிமொழிகள் எதனையும் நேற்று போராட்டக்காரர்கள் செவிமடுக்கவில்லை.
இருந்தும், தன்னால் தீர்வாக முன்வைக்கக் கூடிய விடயங்கள் குறித்து முதலமைச்சரினால் ஐந்து கடிதங்கள் போராட்டக்காரர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்ட போதும், ஒவ்வொரு முறையும் அதில் திருத்தங்கள் வேண்டும் என போராட்டக்காரர்கள் திருப்பியனுப்பி வைத்தனர். இவர்கள் இரு தரப்புக்கும் இடையில் வட மாகாண அமைச்சர் பா.டெனீஸ்வரன் தூதராகச் செயற்பட்டிருந்தார்.
இந்நிலையில், முதலமைச்சரின் கோரிக்கைகள் எதனையும் ஏற்காத – முதலமைச்சருக்கும் வட மாகாண சபைக்கும் தீர்வு தருவதற்கான கால அவகாசத்தை வழங்கியிராத போராட்டக்காரர்கள், ஆளுனரின் ஒரே விஜயத்தில் அவரின் உறுதிமொழியை ஏற்று உண்ணாவிரதத்தை நிறுத்தியமை, அதன் ஏற்பாட்டாளர்கள் மீது பலத்த சந்தேகத்தை ஏற்படுத்துவதாக இருப்பதாக பொதுமக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.
Share this article :
Print PDF

Related Post:

 
Support : Eelam5.com | Untamil.com | News4tamil.com
Powered by Eelanila
Copyright © 2011. ஈழநிலா.கொம் - All Rights Reserved
Eelanila.com
Design by: Nilavan Published by: Eelanila