புதிய அரசியலமைப்பு ஒன்றை உருவாக்கும் நோக்கத்தில் அரசாங்கம் செயற்படுவதாக தெரியவில்லை. இந்த ஆட்சிக்காலத்தில் புதிய அரசியலமைப்பு உருவாக்கப்படுமா என்பதில் சந்தேகம் உள்ளது என தேசிய சமாதான பேரவையின் தலைவர் கலாநிதி ஜெஹான் பெரேரா தெரிவித்தார். நல்லிணக்கத்தை உருவாக்கும் பயணத்தில் அரசாங்கம் சரியான பாதையில் பயணிக்கவில்லை. மீண்டும் நாட்டில் இனவாத செயற்பாடுகளை பரப்பும் சூழல் உருவாக்கப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
நல்லிணக்க வேலைத்திட்டம் மற்றும் புதிய அரசியலமைப்பு உருவாக்கம் தொடர்பிலான நகர்வுகள் குறித்து வினவியபோதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
இது குறித்து அவர் மேலும் கூறுகையில், ஆட்சி மாற்றம் மூலமாக நாட்டின் நல்லிணக்க செயற்திட்டங்கள் முன்னேடுக்கப்படும் என்பதே இந்த அரசாங்கம் கொடுத்த வாக்குறுதியாகும். சர்வதேச தரப்புக்கும் இந்த வாக்குறுதிகள் வழங்கப்பட்டுள்ளன. எனினும் அரசாங்கம் கொடுத்த வாக்குறுதிகளை செயற்படுத்த உறுதியான வேலைத்திட்டங்கள் எதனையும் முன்னெடுக்க முயற்சிக்கவில்லை.
நல்லிணக்கத்தை உருவாக்கும் பாதையில் இவர்கள் பயணிக்கவில்லை. மாறாக காலத்தை கடத்தும் வகையில் அரசாங்கம் செயற்பட்டு வருகின்றது. நாட்டில் மத அடக்குமுறை செயற்பாடுகள் மற்றும் இன ரீதியிலான பாகுபாடுகள் மீண்டும் தலைதூக்கியுள்ளன. இந்த விடயங்களை இன்று பல தரப்பினரும் முன்வைத்து வருகின்றனர்.
அதேபோல் புதிய அரசியலமைப்பு ஒன்று உருவாக்கப்பட வேண்டும் என்ற நோக்கம் ஆரம்பத்தில் இருந்த போதிலும் தற்போது அந்த நோக்கமும் இல்லாது போகின்றதா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இந்த ஆண்டு இறுதிக்குள் புதிய அரசியல் அமைப்பு உருவாக்கபடும் என அரசாங்கம் வாக்குறுதி வழங்கியுள்ள போதிலும் வேலைத்திட்டங்களில் பாரிய தாமதங்கள் நிலவுகின்றன.
இவ்வாறான செயற்பாடுகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படுமாயின் 2020 ஆம் ஆண்டு வரையில் இவர்களினால் புதிய அரசியல் அமைப்பு ஒன்று உருவாக்கப்படப்போவதில்லை. இந்த ஆட்சி காலம் முடிய முன்னர் புதிய அரசியல் அமைப்பு உருவாக்கப்படாவிட்டால் இனிமேல் எப்போதும் புதிய அரசியல் அமைப்பு ஒன்று உருவாக்கப்பட போவதில்லை. அதற்கான வாய்ப்புகளும் அமையப்போவதில்லை என்றார்.