யாழ்.நகரப்பகுதியினில் ஜெயச்சந்திரன் என்பவரால் சட்டவிரோதமாக இயக்கப்பட்டுவரும் தனியார் விளம்பர ஒலிபரப்பு தொடர்பினில் நடவடிக்கை எடுப்பதாக முதலமைச்சர் விக்கினேஸ்வரன் உறுதியளித்துள்ளார்.
வடமாகாண சபையின் மாதாந்த அமர்வு இன்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற போது, கூட்டமைப்பு சார்பு வடமாகாணசபை உறுப்பினர் பரஞ்சோதியினால் கொண்டுவரப்பட்ட பிரேரணையொன்றினில் யாழ்.நகரப்பகுதியினில் சட்டவிரோதமாக இயக்கப்பட்டுவரும் தனியார் விளம்பர ஒலிபரப்பு தொடர்பாக தெரிவித்திருந்தார்.
யாழ்.மாநகரசபை கலைக்கப்படுவதற்கு முன்னதாக அவசர அவசரமாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டு மகேஸ்வரி நிதியத்திற்கு இவ்விளம்பர ஒலிரப்பு சேவை வழங்கப்பட்டுள்ளது.மாநகரசபை கடந்த ஆண்டினில் ஓகஸ்ட் கலைக்கடவிருந்த நிலையினில் ஜீலை 31ம் திகதி அவசர அவசரமாக அது ஒதுக்கிவழங்கப்பட்டுள்ளது.
எந்தவொரு கேள்வி கோரலுமின்றி அப்போதைய முதல்வர் யோகேஸ்வரி பற்குணராசா தனிநபரான ஜெயச்சந்திரனிற்கு வழங்;கப்படுவதற்காகவே அவ்வாறு ஒதுக்கி வழங்கப்பட்டுள்ளதாக மாநகரசபை ஆணையாளர் பிரணவநாதன் உறுதிப்படுத்தியுள்ளார்.தற்போது அதனை நடத்திவரும் நபர் மகேஸ்வரி நிதியத்திடமிருந்து உப ஒப்பந்தம் செய்தே அதனை தான் நடத்திவருவதாகவும் தெரிவித்துள்ளதாக கூறப்பட்டது.
இது தொடர்பினில் பக்கச்சார்பற்ற விசாரணையினை நடத்த சபையினில் கோரிக்கை விடுக்கப்பட்டதையடுத்து அடுத்த அமர்வினில் இது பற்றி நடவடிக்கை எடுக்கப்படமென முதலமைச்சர் தரப்பினில் உறுதி அளிக்கப்பட்டுள்ளது.
தனது ஒலிபரப்பு நிலையத்தினில் பயிற்சி வழங்குவதாக தெரிவித்து இளம்பெண்கள் மீது பாலியல் துஸ்பிரயோகங்களை மேற்கொண்டதாக குற்றச்சாட்டுக்கள் அவர் மீது அண்மையினில் வைக்கப்பட்டுள்ளது.அத்துடன் அது தொடர்பினில் தனக்கும் முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றிருப்பதாகவும் பரஞ்சோதி ஊடகவியலாளர்களிடம் தெரிவித்திருந்தார்.