திறைசேரி பிணைப்பத்திரங்களை பெற்றுக் கொள்ளும் அரசாங்கத்தின் திட்ட யோசனை தோற்கடிப்பு: குளோபல் தமிழ்ச் செய்தியாளர் - கொழும்பு:-
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான புதிய அரசாங்கம் ஆட்டம் காணத் தொடங்கியுள்ளது.
குறிப்பாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமயிலான அரசாங்கத்தின் முயற்சிகள் தோல்விகளை சந்திக்கத் தொடங்கியுள்ளது.
400 பில்லியன் ரூபா பணம் பெற்றுக் கொள்ளும் நோக்கில் திறைசேரி பிணைப்பத்திரங்களை பெற்றுக் கொள்ளும் அரசாங்கத்தின் திட்டத்தை எதிர்க்கட்சிகள் தோற்கடித்துள்ளன.
புதிய அரசாங்கம் பாராளுமன்றில் முன்வைத்த யோசனை ஒன்று தோற்கடிக்கப்பட்ட முதல் சந்தர்ப்பம் இதுவாகும்.
அரச ஊழியர்களுக்கு தமிழ் சிங்க புத்தாண்டை முன்னிட்டு சம்பளங்களை வழங்க இவ்வாறு கடன் பெற்றுக்கொள்ள அரசாங்கம் முயற்சிப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் நிமால் சிறிபால டி சில்வா தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் இன்றைய தினம் பாராளுமன்றில் திறைசேரி உண்டியல்களை பெற்றுக்கொள்வது குறித்த யோசனை முன்வைக்கப்பட்டு விவாதிக்கப்பட்டது.
விவாதத்தின் இறுதியில் இது குறித்த வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.
வாக்கெடுப்பின் போது ஆதரவாக 31 வாக்குகள் மட்டுமே அளிக்கப்பட்டன.
எதிராக 52 வாககுகள் அளிக்கப்பட்டன.
இதன்படி குறித்த திறைசேரி உண்டியல் விநியோகம் குறித்த யோசனை 21 வாக்குகளினால் தோற்கடிக்கப்பட்டுள்ளது.
19ம் திருத்தச் சட்டம் சமர்ப்பிக்கப்பட உள்ள நிலையில், உண்டியல் விற்பனை குறித்த யோசனைக்கே எதிர்க்கட்சிகளின் ஆதரவினை திரட்ட முடியாத அரசாங்கம் எவ்வாறு மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் 19ம் திருத்தச் சட்டத்தை நிறைவேற்றும் என கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.