காணாமல்போனோர் விசாரணையும் அறிக்கையும் – ஒரு பார்வை

”எனது பிள்ளை காணாமல்போய் 7 வருடங்களுக்கு மேலாகிவிட்டன. ஆயினும் அவன் வருவான் என்ற எண்ணத்தில் இன்றும் நான் சாப்பாடு பரிமாறும் போது அவனுக்கான உணவையும் பீங்கானில் போட்டுவைப்பேன். மறுநாள் நான் அதை யாருக்கும் பரிமாற மாட்டேன் அதை மீள கொட்டி விடுவேன் இவ்வாறு தொடர்ந்து செய்து வருகின்றேன் ஏனெனில் என் மகன் மீளத்திரும்பி வருவான் என்ற நம்பிக்கையில் வாழ்ந்து வருகின்றேன்”
என வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட தனது மகனைத் தேடும் தாய் ஒருவர் சொன்னார். இவரது இந்த கருத்தும் எதிர்பார்ப்பும் பலரது மனதை வருட்டிய சம்பவமாக கேட்டவர்களுக்கு இருந்தது. ஆனால் அவரைப் பொறுத்தவரை இது தினம் தினம் அவரது மனதை ரணமாக்கி கொண்டிருக்கும், வாட்டும் சம்பவமாகவுள்ளன?
இலங்கையில் குறிப்பாக வடகிழக்கில் பல வருடங்களாகியும் யுத்தத்தில் காணாமல் ஆக்கப்பட்ட பிள்ளைகளை தேடும் ஒவவொரு பெற்றாரின் பின்னணியிலும் இவ்வாறான மனதை உருக்கும் கதைகள் நிகழ்ந்த வண்ணமே உள்ளன.
சாட்சிகளுடன் முறையிட்டாலும் தீர்வில்லை. கையால் சரணடையவென கொடுக்கப்பட்டவர்களும் கூட காணாமல் போனவர்களாக்கப்பட்டுள்ளனர். இதற்கெல்லாம் முடிவில்லையா? என கண்ணிர் வடிக்கின்றனர். கணவன் இருக்கின்றாரா இல்லையா எனத்தெரியாமல் நெற்றியில் பொட்டோடு நம்பியும், நம்பியும் நம்பாமலும், நடைப்பிணமாக அலைகின்றனர் இவர்களை பலர் அரசியலுக்காக பயன்படுத்தியும் வருகின்றனர்.
தனது ஆட்சி்காலத்தில் 100 நாளை முடித்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இக்காலத்திற்குள் பல்வேறு மாற்றங்களை கொண்டு வந்துள்ளதாக நாட்டு மக்களுக்கு கடந்தவாரம் ஆற்றிய உரையில் பட்டியலிட்டார். அதற்கும் மேலாக ஜனாதிபதியின் அதிகாரங்களை மட்டுப்டுத்தும் மிகமுக்கியமான 19வது திருத்தச்சட்டத்யே பெரும் பான்மைபலத்துடன் நிறைவேற்றி சாதனை படைத்துள்ளார். இவ்விடயம் பெரும் வரலாற்று மாற்றமாக .சாதனையாக கொள்ளப்படுகின்றன.
இந்தநிலையில் வடகிழக்கில் உள்ள தமிழ் மக்களின் பல அவலங்களை இந்த 100 நாளில் பெரிதாக அவர்கண்டு கொள்ள வில்லை. மாறாக முன்னைய மகிந்த ராஜபக்ஷவின் போக்கையே கொண்டுள்ளரா? என்ற சந்தேகத்தை பாதிக்கப்பட்டு மீளத்துடிக்கும் மக்கள் கேள்வி எழுப்பிநிற்கின்றனர்.
காணாமல் ஆக்கப்பட்டோர் விவகாரம் இராணுவஆதிக்கத்தில் இருக்கும் காணி விவகாரம் மக்கள் மீளகுடியேற்றம், கைதிகள் விடுதலை, சரணடைந்தவர்களின் பிரச்சனை என பல பிரச்சனைகளுக்கு குறிப்பான முன்னேற்றகரமான நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டுகள் பலமாகவுள்ளன.
ஜனாதிபதியின் உரையைக் கேட்ட காணாமல் ஆக்கப்பட்ட குடும்பத்தினரின் பிரதிநிதிகள், ஜனாபதியின் பட்டியலை கண்டு அவர்களது கண்கள் குளமாகிநிற்கின்றன. இந்த 100 நாளில் எமது பிள்ளைகளின், உறவினரின் பிரச்சனைகளுக்கு எந்த விதமான விடிவையும் தரவில்லையே?..என கண்ணீருடனும் விசனத்துடனும் விபரிக்கின்ற நிலமைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
Balendran Jeyakumari, Vithushainiகடந்த மகிந்த அரசினால் நியமிக்கப்பட்டு செயற்பட்ட அதே ஆணைக்குழு மீது, பல குற்றச்சாட்டுக்களை பொதுமக்களும் புத்திஜீவிகளும் சிவில் அமைப்புக்களும் ஏன் தமிழ் அரசியல் கட்சிகளும் முன்வைத்த நிலையில், இந்த ஜனாதிபதியும் மேலும் ஓகஸ்ட் வரை கால நீடிப்பு செய்ததும், இக்குழுவுக்குள் எந்தவிதமான மாற்றங்களை செய்யாமலும், விசாரணையை தொடர ஆனுமதித்ததும், பெரும் ஏமாற்றத்தை தந்துள்ள விடயமாவுள்ளதாக திருகோணமலை மாவட்ட காணாமல் ஆக்கப்பட்டோரின் சங்கத்தினர் சுட்டிக்காட்டி நிற்கின்றனர்.
விசாரணைக்குழுவின் உருவாக்கம்
இவ்வாணைக்குழுவைப் பொறுத்தவரை, தமிழ் மக்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட பலதரப்பட்ட கொலைகள், கைதுகள், காணாமல் ஆக்கல்கள் அத்தமீறல்கள் கற்பழிப்புக்கள் போன்ற மனித உரிமை மீறல்களை இலங்கையரசு சரியாக கையாளவில்லை, விசாரிக்கவில்லை என்ற பலமான குற்றச்சாட்டு உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் எழுந்த நிலையில், இவை ஐ.நா வின் மனித உரிமைகள் பேரவையிலும் கடுமையாக எதிரொலிக்க ஆரம்பித்தன. குறிப்பாக ஐ.நாவின் செயலாளர் நாயகத்தையும் மன்னிப்புக்கோரும் நிலைக்கு தள்ளின.
இதன் பயனாக பான்கீமூன் அவர்களால் 3 பேர் கொண்ட ஆலோசனைக்குழுவும் அமைக்கப்பட்டு அவர்களும் மனித உரிமைகள் மீறல்கள் பற்றி அழுத்தமான தகவல்களையும் அறிக்கையையும் ஆலோசனையையும் முன்வைத்த பின்னணியில் அதனைத்தடுக்கவும் அதன் தொடர் செயற்பாட்டை முடக்கவும் இலங்கை ஜனாதி மகிந்தவால் சர்வதேசத்தை ஏமாற்றவே ஜனாதிபதி நல்லிணக்க ஆணைக்குழு நியமிக்கப்பட்டன. அவ்வாணைக்குழு கூட, விசாரணைகளின் முடிவில் காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பாக தனியான விசாரணைக்குழுவை அமைக்க வேண்டும் என சிபார்சை செய்திருந்தது.
இந்த நிலையில், தான் அமைத்த குழுவின் சிபார்சை தான் நடைமுறைப்படுத்துவதாக காட்ட காணாமல் போனோரை கண்டறிவதற்கான ஜனாதிபதி ஆணைக்குளழுவாக முன்னாள் மேல்நீதீமன்ற நீதியரசரான பரணகமவின் தலைமையிலான ஆணைக்குழு 2013 பெப்ரவரியில் நியமிக்கப்பட்டன.
Maxwell-Parakrama-Paranagamaஇந்த ஆணைக்குழு முதல் அமர்வை, கிளிநொச்சியில் உள்ள ஸ்கந்தபுரத்தில் நடாத்திய பொழுது, அதே தினத்தில் இவ்வாணைக்குழுவிற்கு மக்கள் முறையிடுவதனை சீர் குலைக்க மகிந்த ஜனாதிபதி அவர்களின் புதல்வர் நாமல் ராஜபக்ஷவை அனுப்பி, காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களை பஸ்களில் எற்றிக் கொண்டு வந்து, கிளிநொச்சியில் வைத்து நடமாடும் சேவையொன்றை நடாத்தினார். விசாரணைக்கு வந்த பலர் நாமலால் பஸ்களில் ஆசை வார்த்தி கூறி ஏமாற்றி அழைத்துச் செல்லப்பட்டனர் என கிளிநொச்சியிலுள்ள காணாமல் ஆக்கப்பட்டோர் பிரதிநிதிகளும் சிவில் அமைப்பினரும் சுட்டிக்காட்டியிருந்தனர்
இந்த வகையிலான இந்த ஆணைக்குழுவின் செயற்பாட்டையும் ஆணைக்குழுவையும் பலரும் நிராகரித்ததுடன் நம்பிக்கையீனத்தையும் வெளியிட்டனர். குறிப்பாக வடகிழக்கின் சிவில் சமூகம் நம்பிக்கை கொண்டுள்ள மன்னார்ஆயர் இராயப்பு யோசப் நேரடியாக ஆணைக்குழுவிற்குச் சென்று விசாரணையில் பங்குகொள்ளாமல், நிராகரித்து கடிதம் வழங்கியிருந்தார். இது அரசின் கண்துடைப்பு வேலை என்றும் சர்வதேசத்தை ஏமாற்றும் நடவடிக்கை என்றும் குறிப்பிட்டனர். தமிழ் கூட்டமைப்பினரும் கூட நிராகரித்ததுடன் சர்வதேச தரத்திலான விசாரணையை கோரியிருந்தனர்.
ஆயினும் இந்த ஆணைக்குழு இதுவரை 11 அமர்வுகளை வடகிழக்கில் நடாத்தியுள்ளது. 20400 வரையிலான முறைப்பாடுகள் பதிவுசெய்யப்பட்டதாகவும் அதில் 15350 வரையிலான முறைப்பாடு சிவில் மக்காளல் மேற்கொள்ளப்பட்டவை எனவும் மிகுதி இராணுவத்தினர் காணாமல்போனது தொடர்பானவை எனவும் ஆணைக்குழு தலைவர் குறிப்பிட்டருந்தார்.
ஆயினும் இரண்டு வருடங்கள் கழிந்த நிலையிலும் இவ்வாணைக்குழு ஒருவரைக்கூட கண்டறியவில்லை. என்ற பல மான குற்றச்சாட்டுக்களை பரவலாக மக்களும் மனித உரிமைச் செயற்பாட்டாளர்களும் முன்வைத்து வருகின்றனர். இந்த நிலையில் இந்த புதிய ஜனாதிபதியும் இந்த ஆணைக்குழுவை தொடர அனுமதித்தமை பெரும் எமாற்றத்தை தமிழ் மக்களுக்குஏற்படுத்தின.
புதிய அரசின் பழைய விசாரணை
இதன்விளைவாக புதிய ஜனாதிபதியின் ஆட்சியில் முதன்முதலாக திருகோணமலைக்கு ஆணைக்குழு கடந்த 3ம் மாதங்களில் விசாரணைக்கு   வந்தன. ஆயினும் தமிழ் மக்களும் சிவில் அமைப்புகளும் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் சங்கங்களும் கடுமையாக எதிர்த்தன. போராட்டங்களை நடாத்தின. ஏனெனில் புதிய ஜனாதிபதி கடந்த அரசின் ஊழல்கள் பற்றி பேசிவந்ததுடன் அவர்களின் ஆட்சியில் இருந்து பல ஆட்சிக்கட்டமைப்புகள்,அதிகாரிகளை மாற்றினார். ஏன் ஜனாதிபதி முறையைக்கூட இனறு மாற்றிவிட்டார். ஆனால் தமிழ் மக்களால், புத்திஜீவிகளால், கட்சிகளால் நிராகரிக்கப்பட்ட காணாமல்போனவர்களை விசாரிக்கும் ஆணைக்குழுவை மாற்ற முன்வரவில்லை.
இந்தஆணைக்குழுநடவடிக்கை பற்றி காணாமல் ஆக்கப்பட்ட சங்கத்தின் பிரதிநிதிகள் குறிப்பிடுகையில், நடைபெற்ற 11 ஆணைக்குழு விசாரணைகளில் 9 விசாரணைகள் கடந்த ஆட்சிக்காலத்தில் நிகழ்ந்தன. இவற்றின்போது அரசின் மறைமுகமான இடைஞ்சல்கள் பலமாக இருந்தன. குறிப்பாக புலனாய்வாளர்கள் இதில் பலமாகவும் பரந்துபட்டும் செயற்பட்டனர். புலனாய்வாளர்கள் என்பவர்கள் சுயமாக செயற்பட கூடியவர்கள் அல்ல அவர்கள் அரசின் பணியாளர்கள். இதனை திருகோணமலை மறைமாவட்ட ஆயர் கிங்ஸ்லிசுவாம்பிள்ளை ஆணைக்குழுவிற்கு எழுத்துமூலமாகவே முறையிட்டிருந்தார். திருகோணமலையில் நடந்த அமர்வில் இது வழங்கப்பட்டன.
மற்றும் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் ஆணைக்குழு முன் ஆஜாராக முன்னரும் அதன் பின்னரும் புலனாய்வாளர்கள் படையினரின் தொடர் பாடல் முறைப்பாட்டார்களுடன் மிகவும் அதிகரித்தே காணப்பட்டன. கிளி நொச்சியில் உள்ள அஞ்சலி என்ற பெண் கொழும்பில் உள்ள ஆணைக்குழுவினரிடம் இது பற்றி குறிப்பிடுகையில், தான் ஆணைக்குழுவிற்கு காணாமல் ஆக்கப்ட்ட எனது கால்நடை வைத்தியரான கணவர் தொடர்பாக முறையிட செல்ல ஆயத்தமானவேளை நீங்கள் செல்லக கூடாது என நேரடியாக அச்சுறுத்தப்பட்டமையையும் இதனால் குறித்த அமர்வில் தான் கலந்து கொள்ள முடியவில்லை என்பதனையும் பதிவு செய்தார். அது மட்டுமன்றி கொழும்பு 2ம் மாடியில் இருந்து தொலைபேசிமூலம் தொடர்பு கொண்ட பெண் ஒருவர் தனக்கு பல்வேறு வகையிலும் நிவாரண உதவிகளை வழங்க முன்வந்தமையையும் சுட்டிக்காட்டினார். இதுபோன்ற அரசின் பலமான பரந்து பட்ட ஆணைக்குழுவிசாரணைக்கான தடைகள், தலையீடுகள் அச்சுறுத்தல்கள் பற்றி விரிவாக சுட்டிக்காட்டியுள்ளனர். இவ்வாறான பல பொருத்தமற்ற, மக்களுக்கு நிவாரணங்களை வழங்குவதை நோக்கமாக கொள்ளாத ஆணைக்குழுவாக இது இயங்கின என்பது பாதிக்கப்பட்டவர்களின் நிலப்பாடாகவிருந்ன.
இதனாலேயே திருகோணமலை காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களின் சங்கம் முதன்முதலில் இந்த எதிர்ப்பு போராட்டத்தில் குதித்தது. ஐ.நா.விசாரணையை வலியுறுத்தின .இதன் விளைவாக கடந்த 23.3.2015 இல் வடகிழக்கு தழுவிய போராட்டமாக இது பரிணமித்தது. இதற்கு பல சிவில் அமைப்புகள் ஆதரவளித்ததுடன் பங்கு பற்றின. இரண்டாவது விசாரணை அம்பாறை மாவட்டத்தில் கடந்த 6.7,8,9 தேதிகளில்மேற் கொள்ளப்பட்டன. அதனையும் அம்பாறை மாவட்ட மக்கள் எதிர்த்தனர்.
இந்நடவடிக்கையானது காணாமல் ஆக்கப்பட்ட வடகிழக்கு மக்களின் புதிய ஆட்சியின் 100 நாள் வேலைத்திட்டமாக பரிணமித்துள்ளன.
விசாரணை அறிக்கை
இதற்கிடையில் விசாரணைகளைமேற் கொண்ட ஆணைக்குழுவினர் இடைக்கால அறிக்கையை ஜனாதிபதிக்கு சமர்பித்துள்ளதாக அறிவித்துள்ளனர். தமது விசாரணைகளின் படி 20400 வரையிலானமுறைப்பாடுகளில் 2000 வரையிலான முறைப்பாடுகளே பதிவு செய்யப்பட்டுள்ளன. இவற்றில் 30 வீதமானவை இராணுத்திற் கெதிராகவும் 10 வீதமானவை ஏனைய இயங்களுக் கெதிராகவும் 60 வீதமானவை விடுதலைப்புலிகளுக் கெதிரானவையுமாக முறையிடப்பட்டள்ளன எனவும் ஆணைக்குழுவின் தலைவர் பரணகம ஊடகங்களுக்கு குறிப்பாக இந்திய ஊடகத்திற்கு வழங்கியுள்ள செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.
_71139100_71139099தங்களுக்கு கிடைத்த தகவல்களின் அடிப்படையிலேயே இந்த அறிக்கை வெளியிடப்பட்டுள்ளதாக நியாயப்படுத்துகின்றார்.
இது தொடர்பாக புதனன்று கொழம்பில் ஆணைக்குழுவை சந்தித்த காணாமல் ஆக்கப்பட்ட வடகிழக்கு பிரதிநிதிகளும் சிவில் அமைப்பினரும் நேரடியாக கடுமையான விமர்சனத்தை முன்வைத்தனர். இதுபோன்ற அறிக்கைதான் வெளிவரும் என்பதனை தாம் ஏலவே எதிர்பார்த்தாவும் சுட்டிக்காட்டியதுடன் ஆணைக்குழுவிலும் அதன் செயற்பாட்டிலும் காணப்பட்ட குறைபாட்டை நேரடியாக தெளிவு படுத்தியதுடன் செய்யவேண்டிய மாற்றங்கள் பற்றியும் விரிவாக ஏடுத்துரைத்தனர். எழுத்துமூலமான விளக்கங்களையும் வழங்கினர் மட்டுமன்றி ஜனாதிபதிக்கும் தமது இந்த கடிதத்தை ஆனுப்பியுள்ளனர்.
அதில் முக்கியமானவை
சுதந்திரமான ஐ.நாவின் ஆலோசனையுடனான விசாரணைககுழுவை நியமித்தல். ஆணைக்குழுவிற்கு வழங்கப்பட்ட பரந்துபட்ட பணியைக் குறைத்து காணாமல் ஆக்கப்ட்டோரை விசாரிக்கவென மட்டும் மட்டுப்படுத்தல், நேரடியான பல சாட்சியங்களை படையினரால், மற்றும் இராணுவத்தினால் காணாமல் ஆக்கப்பட்டோர் சார்பாக வழங்கப்பட்டவற்றை உடனடியாக விசாரித்தல் அவற்றை விசாரிக்க சுயாதீன நீதிமன்றத்தை அமைத்தல் குறிப்பாக விசாரணைகளின்போதும் அதில் சம்பந்தப்பட்டோர் மீதும் மேற்கொள்ளப்படும் புலனாய்வு விசாரணை அச்சுறுத்தல்களை உடன் நிறுத்தல் குறைந்தபட்சம் இனம் காட்டப்பட்ட பல உறவினர்களின் தடயங்களின் அடிப்படையில் அவர்களை தேடி கண்டுபிடிக்க நடவடிக்கை எடுத்தல், இவற்றை மிகககுறைந்தகு றிப்பிட்டகாலத்திறகுள் மேற் கொள்ள வேண்டும். ஏலவே இக்குழுவின் நடவடிக்கை இழுத்தடிக்கப்படுவதாகவுள்ளன. எனவும் வலியுறுத்தியதுடன் ஆணைக்குழுவின் அறிக்கை உண்மைக்கு புறம்பானது எனவும் கலந்துரையாடலின்போது ஆதாரங்களுடனம் சாட்சியங்களுடனும் முன்வைத்தனர்.
இவ்வாறான நிலையிலேயே தமிழ் மக்களின் பிரச்சனைகளும் தீர்வுகளும்திட்டங்களும் உள்ளன. இங்கு முக்கியமான விடயமென்ன வென்றால் கிடைத்திருக்கம் சந்தர்ப்பங்களில் தமிழ் மக்கள் கொண்டிருக்கும் பிரச்சனைகள் தீர்வுகள் தொடர்பாக எம்மவர்கள் எனக் கருதப்படுபவர்களிடமும் தெளிவான பார்வை ஆய்வுடனான தீர்மானங்கள் இல்லாமையும் இந்த காலத்துள் அவதானிக்கப்பட்டுள்ளன. இதுமிக ஆபத்தான நிலமையாகவும் இந்நிலமைகளுக்கு காரணமாகவும் உள்ளன என விமர்சனங்கள் உள்ளன. அரசியல் சுயநலங்கள் மேலோங்கி வருகின்றன இந்தநிலையில் பாதிக்கப்பட்டவர்களின் சுமைகள் எவ்வாறு இறக்கப்பட போகின்றன.? என்ற கேள்வி உள்ளது.
தமிழ்லீடருக்காக
…பொன்சற்சிவானந்தம்…..
Share this article :
Print PDF

Related Post:

 
Support : Eelam5.com | Untamil.com | News4tamil.com
Powered by Eelanila
Copyright © 2011. ஈழநிலா.கொம் - All Rights Reserved
Eelanila.com
Design by: Nilavan Published by: Eelanila