மைத்திரியின் ரீமிக்சை ஒளிபரப்பக் கூடாது எச்சரிக்கும் சிங்கள மாணவர்கள்! கிழக்குப் பல்கலைக்கழகத்தில் நடந்தது என்ன?

தமிழில் தேசிய கீதத்தினை இசைக்க கூடாது எனக் கூறி இன்று கிழக்கு பல்கலைக்கழகத்தில் நடந்த நிகழ்வின் போது சிங்கள மாணவர்கள் நடந்து கொண்ட விதம் பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
பல்கலைக்கழகத்தில் நடந்தது என்ன? விரிவாக தருகிறோம்.
மட்டக்களப்பு வந்தாறுமூலை கிழக்கு பல்கலைக்கழகத்தில் கடந்த மூன்று தினங்களாக தொழில்துறை கண்காட்சி நடைபெற்று வருகின்றது. மாவட்டத்தில் உள்ள பிரதேச செயலகங்கள் தங்களது விதாத நிலையத்தின் ஊடாக பல்வேறுபட்ட உற்பத்திபொருட்களை காட்சிப்படுத்தி வந்தனர்.
மூன்றாவது நாளான இன்று தொழில்துறை கண்காட்சியில் பங்குபற்றிய மாணவர்கள் மற்றும் உத்தியோகத்தர்களுக்கான சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்வு இடம்பெற்றுள்ளது. குறித்த நிகழ்வில் மைத்திரி அரசாங்கத்தின் புதிய நடைமுறைக்கு அமைய தமிழில் தேசிய கீதம் இசைக்கப்பட்டுள்ளது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்த சிங்கள மாணவர்கள் சிங்களத்தில் தேசியகீதம் இசைக்கப்பட வேண்டுமென பல்கலைக்கழக நிர்வாகத்தினருடன் வாய்த்தர்க்கத்தில் ஈடுபட்டதுடன் தன்னிச்சையாக சிங்களத்தில் மீண்டும் தேசிய கீதத்தை ஒளிபரப்பியுள்ளனர்.
சிங்களத்தில் தேசிய கீதம் இசைக்கப்பட்டதை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வருகைதந்த சிங்கள மாணவர்கள் ஏறாவூர் பற்று பிரதேச செயலகத்தில் கடமையாற்றும் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் பேசிக்கொண்டிருந்த வேளை சுமார்100 பேர் சிங்கள தூசனவார்த்தைகளால் ஏசி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் மூவரையும் தாக்கமுற்பட்டபோது அலரியடித்துக்கொண்டு ஓடிய மூவரில் ஒருவர் கீழே விழ அவர்மீது சரமாரியாக தாக்குதல் நடத்தியுள்ளனர்.
தாக்குதலுக்கு உள்ளான உத்தியோகத்தர் பத்தக்குட்டி சுமன்(29) என்பவர் தற்போது செங்கலடி வைத்தியசாலையில் சிகிச்சைபெற்று வருகின்றார்.
மைத்திரியின் ரீமிக்சை ஒளிபரப்பக் கூடாது எச்சரிக்கும் சிங்கள மாணவர்கள்!
இதேநேரம் கடந்த மூன்று நாட்களாக தமிழ் மொழியில் இசைக்கப்பட்ட தேசிய கீதத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்த சிங்கள மாணவர்கள் அது மைத்திரிபாலவின் ரீமிக்ஸ் பாடல் அதை ஒளிபரப்பக் கூடாது நீங்கள் கட்டாயமாக சிங்களத்தில் உள்ள தேசிய கீதத்தை ஒளிபரப்ப வேண்டுமென முரண்பட்டுவந்த நிலையிலேயெ குறித்த சம்பவம் இன்று நடைபெற்றுள்ளது.
தாக்குதல் நடத்தியவர்களின் புகைப்படங்கள் வெளியாகியுள்ளது!
இதே நேரம் இன்றைய தினம் பிரதேச செயலக உத்தியோகத்தர் மீது தாக்குதல் நடத்திய குழுவினரின் புகைப்படங்கள் வெளியாகியுள்ளன.
புகைப்படத்தில் சிவப்பு நிற டி சேர்ட் அணிந்துள்ள வர்த்தக முகாமைத்துவ பீடத்தைச் சேர்ந்த மூன்றாம் ஆண்டு மாணவனான அநூர கொடித்துவக்கு என்பவரின் தலைமையிலான குழுவினரே தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்டதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளதுடன் அது குறித்து ஏறாவூர் பொலீஸ் நிலையத்தில் முறைப்பாடும் செய்யப்பட்டுள்ளது.
இந்த சிங்கள மாணவர் குழுக்கள் மீது ஏற்கனவே பல்வேறு பட்ட தாக்குதல் சம்பவங்கள் குறித்து முறைப்பாடுகள் பல பதிவுசெய்யப்பட்டுள்ளதாகவும் ஆனால் அது குறித்து இன்றுவரை பல்கலைகழக நிர்வாகமோ அல்லது பொலிஸாரோ எந்த நடவடிக்கைகளையும் எடுக்கவில்லையென பல்கலைகழக வட்டாரங்கள் தெரிவித்தன.
இதனால் தமிழ் மாணவர்கள் மீது தொடர்ச்சியாக இந்த சிங்கள மாணவர் குழு தாக்குதல் நடாத்திவந்ததன் தொடர்ச்சியே இன்றைய தினம் நடைபெற்ற சம்பவமாகும்.
புதிய அரசாங்கத்திற்கு அபகீர்த்தியை ஏற்படுத்த முயற்சி!
தமிழ் மாணவர்கள் கூடுதலாக கல்வி பயிலும் தமிழர்களின் பிரதேசத்தில் இருக்கின்ற பல்கலைக்கழகத்திற்குள் சிங்கள பிரதேசங்களில் இருந்து வருகைதந்த குறிப்பிட்ட அளவிலான சிங்கள மாணவர்கள் பல்கலைகழக நிர்வாகத்தின் மீது அரசாங்கத்தின் சட்டதிட்டங்களை மதிக்காது சிங்கள இனவாதத்தை திணிக்க முற்படுவதுடன்,
தமிழ் மாணவர்களையும், உத்தியோகத்தர்களையும் தொடர்ச்சியாக தாக்கிவருவதானது தமிழ் இளைஞர்களை சிங்கள மாணவர்களுக்கு எதிராக தூண்டிவிடும் செயல் என்பதுடன் எதிர்காலத்தில் கிழக்குபல்கலைக்கழகத்திற்கு வரும் சிங்கள மாணவர்களுக்கு பாதுகாப்பற்ற சூழலை உருவாக்கி சிங்கள மாணவர்கள் மீது தமிழ் சமூகம் வெறுப்புணர்வுடன் செயற்படுவதற்குறிய வேலைத்திட்டங்களை குறிப்பிட்ட சிங்கள மாணவர் குழு உருவாக்கிவருவதுடன் இதன் ஊடாக மைத்திரிபால தலைமையிலான புதிய அரசாங்கத்திற்கு அபகீர்த்தியை ஏற்படுத்துவதற்கும் முயற்சிப்பதாக கூறப்படுகின்றது.
உத்தியோகத்தர் மீதான தாக்குதல் குறித்து நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் கருத்து
கிழக்கு பல்கலைக்கழக மாணவர்களின் தாக்குதல் சம்பவம் வன்மையாக கண்டிக்கத்தக்கது. இது எந்த விதத்திலும் நியாயமாக ஏற்றுக்கொள்ள முடியாத செயல். நல்லாட்சி என்று சொல்லப்படுகின்ற இந்த அரசாங்கத்தின் காலத்தில் தமிழ் மொழியில் தேசிய கீதம் பாடப்படுவதை எதிர்த்து சிங்கள மாணவர்கள் தாக்குதல் தொடுப்பது வன்முறையான செயல். இதற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
இல்லையேல் எதிர்காலத்தில் இதற்கு எதிராக பாரிய ஆர்பாட்டம் ஒன்று நடத்தப்படும் என்று மக்கள் கூறுகின்றார்கள் என்றார் அரியநேத்திரன். அவரின் முழுமையான உரை கீழே.

இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட இளைஞர் அணி விடுத்துள்ள கண்டன அறிக்கை
தேசிய நல்லிணக்கம் என்று கூறும் வேளையில் இளைய கல்விச் சமுதாயம் கிழக்குப் பல்கலைக் கழகத்தில் தேசிய கீதம் தமிழில் இசைக்கப்பட்டமைக்கு எதிராக அரச உத்தியோகத்தரை தாக்கியமை வேதனைக்குரியது என இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட இளைஞர் அணி விடுத்துள்ள கண்டன அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
இலங்கையில் கடந்த ஜனவரி மாதம் முதல் ஏற்பட்ட ஆட்சி மாற்றத்தில் ஓரளவுக்கேனும் ஜனநாயகம் துளிர்விடுகின்ற சந்தர்ப்பத்தில் அதன் ஒரு அம்சமாக இலங்கையின் தேசிய கீதம் நாட்டினுடைய அரச கரும மொழிகளில் ஒன்றாகிய தமிழிலும் இசைக்கப்படுவது பொருத்தமானது எனவும்,
அது தமிழர் பகுதிகளில் தமிழில் இசைக்கப்படுவதை அரசும், அமைச்சர்களும் அனுமதித்த வேளையில் இளைய பெரும்பான்மை கல்விச் சமுதாயம் அதுவும் பட்டப்படிப்புக்களை மேற்கொள்ளும் கல்வி சமுதாயம் இவ்வாறு காட்டுமிராண்டித் தனமாக செயற்படுவதன் மூலம் மீண்டும் ஒரு இன வன்முறைக்கு இட்டுச் செல்லக் கூடிய சந்தர்ப்பத்தை வேண்டும் என்றே உருவாக்குகின்றார்களா என மனதில் சந்தேகம் எண்ணத் தோன்றுகின்றது.
ஏனெனில் மாணவர்கள் விரைவாக உணர்ச்சி வசப்படக் கூடியவர்கள். இதன் காரணமாக மோதல் அதிகரிக்கக் கூடிய சந்தர்ப்பம் உண்டு. இருந்தும் அங்கு சம்பந்தப்பட்ட நேரத்தில் அமைதி ஏற்பட்டது வரவேற்கத்தக்கது.
கிழக்குப் பல்கலைக் கழகத்தில் விதாதாவள நிலையமும், செங்கலடிப் பிரதேச செயலகமும் இணைந்து நடாத்திய கண்காட்சி நிகழ்விலே நாட்டினுடைய தேசிய கீதம் தமிழிலிலே இசைக்கப்பட்டிருந்தது. அதேவேளை பிற்பகல் வேளையில் சிங்கள மொழியிலும் இசைக்கப்பட்டதாக நாம் அறிந்தோம்.
இது இவ்வாறு இருக்க அருவருக்கத் தக்க முறையில் பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்த நூறு மாணவர்கள் அங்கு பணியை முடித்து திரும்பிக் கொண்டிருந்த செங்கலடி பிரதேச செயலக உத்தியோகத்தர் பத்தக்குட்டி சுமன் என்பவரை தாக்கி இருப்பது இனநல்லிணத்துக்கு ஒரு சவாலாக விளங்கும் என்பதில் சந்தேகமில்லை.
இது பல்கலைக் கழக சூழலிலும் ஒரு பீதி நிலையை உருவாக்கும்.
கல்வி பயிலுகின்ற சமுதாயத்தினர் கல்வியோடு சேர்த்து ஒழுக்கத்தையும் கடைப்பிடிக்க வேண்டியது மீண்டும் ஒரு முறை இச்செயற்பாட்டின் மூலம் உறுதிப்படுத்தப்படுகின்றது. எனவே ஒரு நாட்டிலே நாங்கள் எல்லோரும் ஒற்றுமையாக வாழவேண்டுமென்றால் விட்டுக் கொடுப்புக்களும், புரிந்துணர்தலும் இதுபோன்ற கசப்புக்கள் களையப்பட வேண்டும்.
அதுவும் கல்விக் கூடங்களில் இவ்வாறான செயற்பாடுகள் முற்றாக அகற்றப்பட வேண்டும்.
தேசிய நல்லிணக்கம் என்று கூறும் வேளையில் இளைய கல்விச் சமுதாயம் கிழக்குப் பல்கலைக் கழகத்தில் தேசிய கீதம் தமிழில் இசைக்கப்பட்டமைக்கு எதிராக அரச உத்தியோகத்தரை தாக்கியமை வேதனைக்குரியது என இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட இளைஞர் அணி விடுத்துள்ள கண்டன அறிக்கையில் காட்டமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நடவடிக்கைக்கு உரிய விசாரணை மேற்கொண்டு நீதியை நிலைநாட்டும்படி சம்பந்தப்பட்ட தரப்பினரிடம் வேண்டுகின்றோம் என தமது கண்டன அறிக்கையில் மேலும் குறிப்பிட்டுள்ளனர்.
கிழக்கு பல்கலை.யில் தமிழில் தேசியகீதம்! உத்தியோகத்தர் மீது சிங்கள மாணவர்கள் தாக்குதல்!
மட்டக்களப்பு வந்தாறுமூலை கிழக்கு பல்கலைக்கழகத்தில் இன்றைய தினம் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் தமிழ் மொழியில் தேசியகீதம் இசைக்கப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்த சிங்கள மாணவர்கள் பலர் அரச உத்தியோகத்தர் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர்.
விதாதாவள நிலையமும் செங்கலடி பிரதேச செயலகமும் இணைந்து கடந்த மூன்று தினங்களாக கிழக்கு பல்கலைக்கழக வளாகத்தில் இந்த கண்காட்சியை நடாத்திவருகின்றறது.
இக் கண்காட்சி நிகழ்வில் இன்று தமிழ் மொழியில் தேசியகீதம் இசைக்கப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்த சிங்கள மாணவர்கள் பலர், ஏறாவூர்பற்று பிரதேச செயலகத்தில் கடமையாற்றி வரும் உத்தியோகத்தர் ஒருவர் மீது சரிமாரியாக தாக்குதல் நடத்தியுள்ளனர்.
தாக்குதலில் படுகாயமடைந்த இளம் குடும்பஸ்தர் செங்கலடி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்.
பத்தக்குட்டி சுமன் என்ற குடும்பஸ்தரே இவ்வாறு சிங்கள மாணவர்களின் தாக்குதலில் படுகாயமடைந்து செங்கலடி வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.
Share this article :
Print PDF

Related Post:

 
Support : Eelam5.com | Untamil.com | News4tamil.com
Powered by Eelanila
Copyright © 2011. ஈழநிலா.கொம் - All Rights Reserved
Eelanila.com
Design by: Nilavan Published by: Eelanila