புங்குடுதீவில் நடந்த கொடூரம் சொல்லும் செய்தி என்ன?


புங்குடுதீவில் பாடசாலை மாணவி ஒருவர் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட கொடூர செய்தியால் மனித மனங்கள் வெந்துபோயுள்ளன.

பாடசாலைக்குச் சென்ற வேளையில் நடந்த இக்கொடூரம் எங்கள் மண்ணில் பெண்களின் பாதுகாப்பு நிலைமை எங்ஙனம் உள்ளது என்பதை எடுத்துக் காட்டியுள்ளது.

இது தவிர, போரினால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களில் தீவகமும் ஒன்று. போர்ச் சூழல் முடிவுற்று தீவக மண்ணில் மக்கள் மீளக்குடியமரக் கூடிய சூழ்நிலை ஏற்பட்டபோது, தீவகத்தில் குடியமர்வதற்கு ஆட்கள் இல்லை என்ற நிலைமை உருவாகியிருந்தது.

தாங்கள் குடியிருந்த தீவக மண்ணில் இருந்து வெளியேற்றப்பட்டு நீண்டகாலமாகியதால் இப்பகுதி மக்கள் தங்களின் இருப்பிடங்களை -வாழ்விடங்களை யாழ்ப்பாணம், கொழும்பு, வெளிநாடு என மாற்றிக் கொண்டனர்.

இதன் காரணமாக தீவகத்தில் மீளக்குடியமர்ந்தவர்களின் எண்ணிக்கை மிகக்குறைவு என்றாயிற்று. அதேநேரம் தீவகத்தின் அபிவிருத்தி என்பது கவனிக்கப்படாத ஒன்றாகவே இருந்து வருகிறது. மிகப் பெருந்தொகையான மக்கள் வாழ்ந்த தீவகத்தில் இப்போது வாழ்கின்ற மக்களின் எண்ணிக்கை மிகச் சொற்பம் என்பதுடன் அங்கு மீளக்குடியமர்ந்த மக்களின் வாழ்வியல் என்பது பற்றைகளும் புதர்களும் உடைந்த வீதிகளுமான சூழமைவைக் கொண்டதாக இருப்பது உணரப்பட வேண்டும்.

உயர்தரத்தில் கல்வி கற்கும் மாணவி ஒருவர் மூன்று மைல் தூரத்திற்கு அப்பால் இருக்கின்ற பாடசாலைக்குச் செல்வதற்காக பற்றைகளையும் வெளிகளையும் பாழடைந்த வீடுகளையும் கடந்து செல்கின்ற துயரம் சாதாரணமானதன்று.

காலை வேளையில் சீருடையோடு பாடசாலைக்குச் சென்ற மாணவிக்கு நடந்தது என்ன? என்பதை அறிவதற்கு இருபத்துநான்கு மணிநேரம் கடக்க வேண்டியதாயிற்று என்றால்,அந்த மாணவி வாழ்ந்த சூழல், பயணித்த பாதை எவ்வாறானது என்பதைப் புரிந்து கொள்ள முடிகிற தல்லவா?

இது தவிர, பின்தங்கிய பிரதேசங்கள் என்று வகைமைப்படுத்தி பின்தங்கிய பிரதேசங்களை மேய்ப்பாரும் இல்லை. பார்ப்பாரும் இல்லை என்ற அவலநிலைக்கு தள்ளிவிட்டு; வசதியான இடங்களில் இருந்து கொண்டு அரசியல் நடத்துகின்ற அநியாயங்கள் சொல்லிமாளா!

தனது பிள்ளையைக் காணவில்லை என்று ஊர் காவற்றுறை பொலிஸில் முறைப்பாடு செய்யச் சென்றபோது, பொலிஸார் அந்த தாய்க்குச் சொல்லிய காரணம் எங்கள் இனம் தொடர்பில் பொலிஸார் என்ன கணிப்போடு உள்ளனர் என்பது புரிகிறதா?

முறைப்பாட்டைப் பொலிஸார் பதிவு செய்யவில்லை; காணாமல்போன பிள்ளையை தேடுவதற்கு வரவில்லை என்றால்,இது தொடர்பில் எந்த எம்பியிடம் முறையிட முடியும் அல்லது எந்த அரசியல் தலைமையிடம் சொல்ல முடியும். இதற்கான ஏற்பாடுகள் ஏதேனும் உண்டா?

ஓ! அந்தோ! கொடூரம். புங்குடுதீவில் பாடசாலை மாணவி ஒருவர் கூட்டு வன்புணர்வால் உயிரிழந்தார் என்றால்,எங்கள் இளம் சமூகம்; இளைஞர்கள் எந்த மனநிலையில் உள்ளனர்.

இவர்களை வழிப்படுத்த நெறிப்படுத்த எங்கள் அரசியல் தலைமைகள் தீட்டிய-செயற்படுத்திய திட்டங்கள் என்ன? எதுவுமே இல்லை எனும் போது, இழந்து இழந்து அழுவதுதான் எங்கள் தலைவிதி என்றாகிவிடும்.

தலைவிதியை மாற்ற வேண்டும் என மக்கள் நினைக்காதவரை துன்பம் தொடர் கதையாகத்தான் போகிறது.
Share this article :
Print PDF

Related Post:

 
Support : Eelam5.com | Untamil.com | News4tamil.com
Powered by Eelanila
Copyright © 2011. ஈழநிலா.கொம் - All Rights Reserved
Eelanila.com
Design by: Nilavan Published by: Eelanila