மன்னாருக்கு நேற்று விஜயத்தை மேற்கொண்ட அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் கடற்படையினரால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள முள்ளிக்குளத்தை பார்வையிட தடைவிதிக்கப்பட்டுள்ளது.
முசலி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட சிலாபத்துறை மற்றும் முள்ளிக்குளம் ஆகிய கிராமங்களுக்குச் சென்று மீள்குடியேறிய மக்களின் பிரச்சினைகள் தொடர்பாக கேட்டறிந்தார். மீள்குடியேற்றத்தில் முசலி மக்கள் எதிர்நோக்கும் பல்வேறு பிரச்சினைகள் மற்றும் அக்கிராமங்களில் நிலவும் குறைபாடுகள் பற்றியும் இங்கு கலந்து கொண்டிருந்த மக்களால் பாராளுமன்ற உறுப்பினர், மற்றும் மீள்குடியேற்ற அமைச்சரின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டது.
இதனையடுத்து இடம்பெயர்ந்து வாழும் முள்ளிக்குளம் கிராம மக்களை அமைச்சர் சுவாமிநாதன் நேரடியாக சென்று பார்வையிட்டதோடு முள்ளிக்குளம் மக்களின் பிரச்சனைகளையும் கேட்டறிந்திருந்தார். இதேவேளை முள்ளிக்குளம் கிராமத்தில் மக்கள் வாழ்ந்த பகுதியை கடற்படையினர் ஆக்கிரமித்துள்ளதாகவும்,அந்த மக்களின் தொழில் வாய்ப்புக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அம்மக்களின் பல்வேறு பிரச்சினைகளும் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டது.
இந்த நிலையில் அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கலான செல்வம் அடைக்கலநாதன் மற்றும் குனைஸ் பாரூக் ஆகியோர் கடற்படையினரினால் அபகரிக்கப்பட்ட காணியை பார்வையிடுவதற்காக நேரடியாக கடற்படை முகாமுக்கு சொன்றிருந்தனர். எனினும் கடற்படை முகாமின் பிரதான நுழைவாயிலில் சுமார் 15 நிமிடங்கள் வரை தடுத்து நிறுத்தப்பட்டதன் பின்னரே உள்ளே செல்ல அனுமதிக்கப்பட்டனர். உள்ளே சென்ற அமைச்சர் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் பாடசாலை, தேவாலயம் ஆகியவற்றை பார்வையிட்டுள்ளனர்.
Add Comments