அண்மையில் லண்டனைத் தளமாகக் கொண்டு இயங்கும் உலகத்தமிழர் பேரவையினர், இலங்கை வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன், நோர்வே தரப்பினர் ஆகியோருக்கிடையில் லண்டனில் நடத்தப்பட்ட பேச்சுக்கள் பெரும் சர்ச்சைகள் எழுந்துள்ளன. இவை மிகவும் இரகசியமாக நடத்தப்பட்டதால் பல்வேறு ஊகங்களும் சந்தேகங்களும் எழுந்துள்ளன.
இப் பேச்சுக்கள் தொடர்பாக எதிர்க்கட்சித் தலைவர் நிமால் சிறி பால டி சில்வா புலம் பெயர் தமிழ் அமைப்புக்களுடன் நடத்தப்பட்ட பேச்சுக்கள் மீண்டும் பயங்கரவாதம் எழுச்சி பெற வாய்ப்பளித்துவிடும் என்ற தனது கண்டனத்தை வெளியிட்டார். புலம்பெயர் தமிழ் மக்களின் அமைப்புக்களைப் பயங்கரவாத அமைப்புக்களாகத் தடை செய்த கடந்த அரசாங்கத்தில் அவர் ஒரு முக்கிய அமைச்சராயிருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
அதற்குப் பதிலளித்த வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர, பலர் பல்வேறு காரணங்களால் புலம்பெயர்ந்த போதும், அவர்கள் இலங்கையர்கள் எனவும், நாட்டின் முன்னேற்றத்துக்கு அவர்களின் பங்களிப்பைப் பெற்றுக்கொள்ளும் வகையிலேயே பேச்சுக்கள் நடத்தப்பட்டன என்றும் புலம்பெயர் தமிழர்கள் அனைவரும் பயங்கரவாதிகள் அல்லவெனவும் தெரிவித்திருந்தார்.
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் ஒரு இனம் சம்பந்தப்பட்ட பேச்சுக்கள் வெளிப்படையாக நடத்தப்பட்டிருக்கவேண்டும் எனக் குறிப்பிட்டார், தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள்ளும் இப்பேச்சுக்கள் தொடர்பாக முரண்பட்ட கருத்துக்கள் வெளியிடப்பட்டுள்ளன.
இவை தொடர்பாக விளக்கமறித்த நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன், இப்பேச்சுக்களை இனவாதிகள் குழப்பங்களை ஏற்படுத்தப் பயன்படுத்திவிடலாம் என்பதனாலேயே அவை இரகசியமாக நடத்தப்பட்டதாகவும், அதில் மீள்குடியேற்றம், அரசியல் கைதிகள் பிரச்சனை என்பன தொடர்பாகவே பேசப்பட்டதாகவும் தெரிவித்திருந்தார்.
இப்படிப் பல்வேறு நபர்கள் பல்வேறு கருத்துக்களை வெளியிட்ட போதிலும் இப்பேச்சுக்கள் இரகசியமாக நடத்தப்பட்டமை, இது இடம்பெற்ற காலப்பகுதி, இதில் கலந்துகொண்ட நபர்கள் என்பன காரணமாகத் தமிழ் மக்கள் மத்தியில் இப்பேச்சுக்களின் நோக்கம் பற்றிய பலத்த சந்தேகங்கள் எழுந்துள்ளன.
கடந்த இலங்கையின் சுதந்திர தின விழாவின் போது தமிழ் மக்கள் 34 வருடங்களாகப் பின்பற்றிவந்த வழமையை மீறி அதில் கலந்துகொண்டமை, இலங்கையில் இடம்பெற்றதாகக் கூறப்படும் போர்க்குற்றங்கள், மனித உரிமை மீறல்கள் தொடர்பாக இலங்கை அரசின் உள்ளக விசாரணை நடத்தும் முடிவை வரவேற்றமை போன்ற காரணங்களால் ஏற்கனவே சுமந்திரனின் நிலைப்பாடு தொடர்பாக தமிழ் மக்கள் அதிர்ப்தி கொண்டிருந்தனர். அது மட்டுமன்றி 2014இல் அமெரிக்காவால் போர்க்குற்றங்கள் தொடர்பாக முன்வைக்கப்பட்ட முதலாவது முன்வரைபு தொடர்பாகத் திருப்தி தெரிவித்ததுடன் தமிழர் தரப்பு அதை ஏற்கவேண்டுமெனவும் வலியுறுத்தினார். ஆனால் புலம்பெயர் தமிழ் அமைப்புக்களும், மனித உரிமை நிறுவனங்களும் கொடுத்த அழுத்தங்கள் காரணமாக மீண்டும் மீண்டும் திருத்தப்பட்டு 3வது வரைவில் சர்வதேச விசாரணை என்பது உறுதிப்படுத்தப்பட்டது.
இப்படியான நிலையில் லண்டன் பேச்சுக்களில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனோ, தமிழரசுக்கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசாவோ கலந்துகொள்ளாமல் ஏன் சுமந்திரன் மட்டும் கலந்துகொண்டார் என்ற கேள்வி எழுகிறது.
அதேவேளையில் அரசாங்கத் தரப்பில் தேசிய இனப்பிரச்சினையுடனோ, பாதுகாப்பு அமைச்சுடனோ, மீள்குடியேற்ற அமைச்சரோ கலந்துகொள்ளாமல் வெளிவிவகார அமைச்சர் மட்டும் ஏன் கலந்துகொண்டார் என்ற கேள்வியும் எழுகிறது.
எதிர்வரும் செப்டம்பர் மாதம் இலங்கையின் போர்க்குற்றங்கள் மனித உரிமை மீறல் தொடர்பான ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளரால் அறிக்கை சமர்ப்பிக்கப்படவுள்ள வேளையில் உலகத் தமிழர் பேரவையுடன் பேச்சு நடத்தியதன் நோக்கம் என்ன? லண்டன் உலகத் தமிழர் பேரவை இலங்கையின் போர்க்குற்றங்கள் தொடர்பாக உறுதியான நிலைப்பாட்டைக் கொண்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
எனவே இப்பேச்சுக்கள் மூலம் எதிர்வரும் மனித உரிமைகள் பேரவையின் அமர்வின் போது உலகத் தமிழர் பேரவை இலங்கை அரசுக்கு சாதகமான சில விட்டுக்கொடுப்புக்களை மேற்கொள்ளத் தூண்டப்பட்டதா என்ற சந்தேகம் தமிழ் மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது.
நந்தவனத்திலோர் ஆண்டி நாலாறு மாதமாய் குயவனை வேண்டிக் கொண்டு வந்த தோண்டியை அவன் போட்டுடைத்த கதையாக நிகழ்ந்துவிடுமோ என்ற அச்சம் தமிழ் மக்கள் மத்தியில் எழுந்துள்ளது.
நெருக்கடிகள் வரும் போது வளைந்து நெளிவதிலும் அது நீங்கிய பின் பழையபடி மூர்க்கக் குணம் கொள்வதும் இலங்கை ஆட்சியாளர்களின் மாற்ற முடியாத வரலாறு. எனவே தமிழ் மக்களின் பேரால் தமிழ் மக்களுக்கு கிடைக்கும் வாய்ப்புக்களை நழுவ விடும் சந்தர்ப வாத அரசியல்வாதிகள் தொடர்பாகத் தமிழ் மக்கள் விழிப்பாக இருப்பது அடிப்படைத் தேவையாகும்.