ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு அரசாங்கத்திற்கு தமது தந்தையை தேட வேண்டுமென்றே மெய்யான நோக்கம் இருக்கவில்லை என லங்கா ஈ நியூஸ் ஊடகத்தின் ஊடகவிலயாளா பிரகீத் எக்னெலிகொடவின் புதல்வர் சஞ்சய எக்னெலிகொட தெரிவித்துள்ளார்.
மெய்யான நோக்கத்துடன் காணாமல் போன தமது தந்தையை ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு தேடவில்லை என அவர் குற்றம் சுமத்தியுள்ளார். அண்மையில் தேர்தல் பிரச்சாரக் கூட்டமொன்றில் கொழும்பு மாவட்டத்தில் கூட்டமைப்பின் சார்பில் போட்டியிடும் வேட்பாளா உதய கம்மன்பில வெளியிட்ட கருத்துக்கு பதிலளிக்கும் வகையில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
எதிர்வரும் பொதுத் தேர்தலில் வெற்றியீட்டி சண்டே லீடர் பத்திரிகையின் முன்னாள் பிரதம ஆசிரியர் லசந்த விக்ரமதுங்க மற்றும் லங்கா ஈ நியூஸ் ஊடகத்தின் ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட ஆகியோர் குறித்த விசாரணைகள் நடத்தப்படும் என உதய கம்மன்பில குறிப்பிட்டுள்ளார்.
தனது தந்தையின் பெயரைப் பயன்படுத்தி அரசியல் லாபமீட்ட கம்மன்பில முயற்சிப்பதாக சஞ்சய எக்னெலிகொட தனது முகநூலில் குறிப்பிட்டுள்ளார்.
2010ம் ஆண்டு ஜனவரி மாதம் 24ம் திகதி தமது தந்தை காணாமல் போனதாகவும், ஐந்து ஆண்டுகள் கடந்துள்ள நிலையிலும் விசாரணை நடத்தப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
பொதுத் தேர்தல் காரணமாக தந்தையை சிலர் நினைவூட்டி வருவதாகக் குறிப்பிட்டுள்ளார். உதய கம்மன்பில போன்றவர்கள் விசாரணை நடத்துவார்கள் என நம்பும் அளவிற்கு தாம் முட்டாள்கள் அல்ல என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்