எந்த தேர்தலிலும் யாருக்கும் வாக்களிக்கவே போவதில்லை காணாமற் போனவர்களின் கடும் எதிர்ப்பு


காணாமற் போன உறவுகள் மீட்கப்படும் வரையில் நடைபெறவிருக்கின்ற பொதுத் தேர்தல் உட்பட தொடர்ந்து நடைபெறுகின்ற எந்தத் தேர்தலிலும் யாருக்கும் வாக்களிக்கப் போவதில்லை என நல்லூரில் இடம் பெற்ற போராட்டத்தில் காணாமற்போன வர்களின்  உறவுகள் தெரிவித்துள்ளனர்.

இந்தப் போராட்டத்தின் போது கடந்த அரசின் மீதும் ஆட்சிக்கு வந்த புதிய அரசின் மீதும் சரமாரியான குற்றச் சாட்டுக்களை முன்வைத்த காணாமற் போனவர்களது உறவுகள்; தேர்தல் காலத்தில் மட்டும் எம்மைத் தேடித் தேடி வருகின்ற அரசியல்வாதிகள் தேர்தல் முடிவடைந்ததன் பின்னர் எமக்காக எதனைச் செய்கின்றனர் என்றும் கேள்வியெழுப்பினர்.

வரலாற்றுப் பிரசித்தி பெற்ற நல்லூர்க் கந்தன் ஆலய முன்றிலில் நேற்றுக் காலை ஒன்று திரண்ட காணாமற் போனவர்களது உறவுகள் தமது உறவுகளை மீட்க வேண்டி வழிபாட்டில் ஈடுபட்டனர். இதனைத் தொடர்ந்து உறவுகள் எங்கே, எங்கே எனக் கேள்வியெழுப்பியவாறு அவர்களை மீட்டுத் தரக் கோரி ஆலய முன்றிலில் கோசம் எழுப்பினர்.

இதன் போது சமூகத்தில் முகங்கொடுக்க முடியாமல் தவிக்கும் இளம் தாய்மார்கள் நாம் எமது கணவர்கள் எங்கே, காணாமல் ஆக்கப்பட்டவர் களை இப்போதாவது சற்றுத் திரும்பிப் பார் அரசே, தேர் தல் காலத்தில் மட்டும் நாங்களும் மற்றவர்களும் சமமாகத் தெரிகின்றோம், தமிழ் அரச அதிபர்களே எமது உறவுகளை எம்மிடம் மீட்டுத் தாருங்கள்.

நல்லாட்சி இருக்கும் நாட் டில் நாமும் நலமாய் இருக்க வேண்டும். ஏன் எமக்கு இந்த நிலைமை, நல்லூரான் வீதியில் பிள்ளைகளை இழந்து தவிக்கும் எங்களுக்கு நல்வழி காட்ட யார் இங்கு வருவர், நம்பி வாழ்ந்து வெம்பி அழுகின்றோம், நலமின்றி வாழும் எங்களுக்கு நல்லூர்க் கந்தனே அருள் புரிவாயா, வேலியே பயிரை மேய்ந்ததா? எங்கள் வேதனையெல்லாம் உங்களுக்கு மகிழ்ச்சியா, யுத்தம் முடிவடைந்து ஆறு வருடங்கள் கடந்தும் எமது உறவுகளை காணாது தவிக்கின்றோம்.

பெண்கள் நாட்டின் கண்கள் என்றால் அந்தப் பெண்கள் கண்ணீர் சிந்தினால் நாடு வளம் பெறுமா? உள்ளிட்ட பல்வேறு வாசகங்கள் பொறிக்கப்பட்ட பதாகைகளைத் தாங்கியவாறு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும் இந்தப் பேராட்டத்தில் கலந்து கொண்ட உறவுகள் நாட்டில் நல்லாட்சி ஏற்பட்டுள்ளது, அனைவரும் மகிழ்ச்சியாக வாழ்கின்றனர் என்றெல்லாம் கூறப்படுகின்றது.ஆனால் பல வருடக் கணக்காக எமது உறவுகளைக் காணாது தினந்தினம் நாம் துன்ப்பட்டுக் கொண்டிருக்கின்றோம். ஏங்களின் துயர் துடைப்பதற்கு எந்த அரசியல்வாதியும் முன்வரவில்லை.

நாம் எங்கள் உறவுகளைத் தொலைத்தும் யாருமற்ற அநாதைகளாகவே பெரும் கஷ்ட துன்பங்களுக்கு மத்தியில் வாழ்ந்து வருகின்றோம். குடும்பத் தலைவனின்றி பெற்ற பிள்ளையின்றி நாம் படும் துன்பத்தை யாரறிவார்? எமது உறவுகள் எங்கிருக்கின்றார்கள் என்று தெரியாத நிலையில் நாம் யாருக்காக எதற்காக வாக்களிக்க வேண்டும்.

இதுவரை காலமும் நாம் வாக்களித்தவர்கள் எமக்காக என்ன செய்தார்கள். இன யும் நாம் ஏமாறத் தயாரில்லை என கண்ணீருடன் தெரிவித்தனர்.
Share this article :
Print PDF

Related Post:

 
Support : Eelam5.com | Untamil.com | News4tamil.com
Powered by Eelanila
Copyright © 2011. ஈழநிலா.கொம் - All Rights Reserved
Eelanila.com
Design by: Nilavan Published by: Eelanila