1980களில் விடுதலைப் புலிகள் உருவாகும் போது இருந்த நிலைதான் வடக்கில் இன்று காணப்படுகின்றது எனவும், நாட்டைப் பிளவுபடுத்தும் முயற்சி மேற்கொள்ளப்படுவதாகவும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அநுராதபுரத்தில் தெரிவித்திருப்பது,
இனவாதத்தைப் பயன்படுத்துவதற்கு அவர் முற்பட்டுள்ளதை உணர்த்துவதாகவுள்ளது என தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
மஹிந்தவின் உரை தொடர்பில் கருத்து வெளியிட்ட அவர் மேலும் கூறியுள்ளதாவது;
வடக்கு கிழக்கில் வன்முறைகள் எதுவுமில்லை அமைதியான சூழ்நிலை காணப்படுவதாக புலனாய்வு அறிக்கைகளில் தெரிவிக்கப் பட்டுள்ளது.அத்துடன், இப்போது போர் முடிவடைந்து ஆறு வருடங்கள் முடிந்துவிட்டது. இந்தக் காலப்பகுதியில் வன்முறைகள் எதுவும் இடம்பெறவில்லை.
இப்படியான ஒரு சூழ்நிலையில் முன்னாள் ஜனாதிபதியும் தன்னை பிரதமர் வேட்பாளர் எனச் சொல்லிக் கொள்பவருமான மஹிந்த ராஜபக்ஷ இவ்வாறு இனக்குரோதமான முறையில் உரையாற்றுவது சிறுபான்மையின மக்களுக்கு அச்சுறுத்தலானதாகவே அமைந்துள்ளது.
எதிர்காலத்தில் அவர் அதிகாரத்துக்கு வரும்போது, சிறுபான்மையினங்களுக்கு எதிராகச் செயற்படுவார் என்பதையே இது உணர்த்துகின்றது.வன்முறைகள் இல்லாதுவிட்டாலும், வன்முறைகளை உருவாக்கும் வகையிலேயே அவரது உரை உள்ளது. இவர் தேர்தலில் வென்று பிரதமராக வந்தால், தமிழ், முஸ்லிம் மக்கள் இந்த நாட்டில் வாழமுடியாத நிலைதான் ஏற்படும் – என்று தெரிவித்தார் சுரேஸ்.