தேர்தலிலே வேட்பாளராக நிற்கும் தமிழீழ உறவுகளே, மிகவும் மனம் நொந்து சில வரிகள்:
"பெருமைக்கும் ஏனைச் சிறுமைக்கும் தத்தம்
கருமமே கட்டளைக் கல்" என்பது வள்ளுவன் வாய்மொழி! எனவே,
தேசியத் தலைவன் உட்பட யாரையுமே துணைக்கு இழுக்காதீர்கள்.
தேர்தலுக்கு முன்னர் தேசியத் தலைவனின் துணையும் வென்ற பின்னர் ராஜபக்ஷ, ரணில், சிறிசேன, சந்திரிகா போன்றோரின் துணையும், தேர்தலுக்கு முன்னர் புலிக்கொடியின் நிழலும் வென்ற பின்னர் சிங்கக்கொடியின் நிழலும் என வாழுதல் அரசியற் சாணக்கியமாகாது. அது அரசியல் வேசித்தனம். அதனை இராஜ தந்திரம் என்று அழைக்கவே வேண்டாம்; அடிமைப்பட்ட இனத்திற்குப் பொருந்தாத பதம் அது. இவ்வாறான கீழான அரசியலே ஈழத்தமிழரை இவ்வளவு கேவல நிலைக்கு இட்டுச்சென்றது. விலைபோகாத தேசியத் தலைவனைக் கூட மௌனிக்க வைக்குமளவுக்குப் பலவீனமாக்கியது.
மக்களிடம் வாக்குக் கேட்டுப் போகும்போது தயைகூர்ந்து, நீங்கள் இதுவரை செய்தவற்றையும் இனிச் செய்யவிருப்பதையும் கூறுங்கள்.
அதிகமாக எல்லோர் முதுகிலும் ஊத்தை இருக்கும். எனவே மற்ற வேட்பாளர்களின் முதுகைக் கவனிப்பதை விடுத்து உங்களுங்கள் முதுகைக் கவனியுங்கள்.
மொத்தத்திலே, உங்களுக்கு ஏன் மக்கள் வாக்களிக்க வேண்டும் என்பதற்கான பதிலைத் தெளிவாகக் கூறுங்கள்!
மக்கள் தெளிவானவர்கள். ஆனாலும் "ஒற்றுமையே பலந் தரும்" என்பதை நன்றாக உணர்ந்து "முதுகெலும்பில்லாத அரசியல்(த்) தலைவர்கள் வழிநடத்தும்" கட்சிக்கு வாக்களிக்கும் பிழையைப் பலமுறை விட்டுள்ளார்கள். இம்முறை சரியாகச் செய்வார்கள் என்று ஒரு நம்பிக்கை.
தமிழீழ உறவுகளே,
" செய்தக்க அல்ல செயக் கெடும் செய்தக்க
செய்யாமையானும் கெடும்". எனவே நெஞ்சம் சரியெனச் சொல்வதைச் செய்யுங்கள்!
Add Comments