சமஷ்டியை மாத்திரமா தென்னிலங்கை எதிர்க்கிறது? குளோபல் தமிழ் செய்திகளுக்காக தீபச்செல்வன்

சமஷ்டியை மாத்திரமா தென்னிலங்கை எதிர்க்கிறது? குளோபல் தமிழ் செய்திகளுக்காக தீபச்செல்வன்:-

இலங்கைத் தீவில் யுத்தம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டபோதும் இனச்சிக்கல் முடிவுக்கு கொண்டு வரப்படவில்லை. இன முரண்பாட்டிற்கும் யுத்தத்திற்கும் தீர்வாக சம உரிமையை வழங்குவதில் சிங்கள ஆட்சியாளர்கள் தொடர்ந்தும் பேரினவாத அடக்குமுறைப் போக்கை கடைப்பிடித்து வருகின்றனர். ஒன்றுபட்ட இலங்கைக்குள் வடக்கு கிழக்கு தமிழர் தாயகம் இணைக்கப்பட்டு சமஷ்டி தீர்வு வழங்கப்பட வேண்டும் என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பு தேர்தல் விஞ்ஞாபனத்தில் விடுத்துள்ள கோரிக்கையை தென்னிலங்கை கடுமையாக எதிர்த்து வருகின்றது.

அறுபது வருடகால இலங்கையின் இனப்பிரச்சினையின் பின்னரும் ஈழத் தமிழர்களின் உரிமை வேண்டிய போராட்டங்களின் பின்னரும் ஆயுதப் புரட்சியின் பின்னரும் தென்னிலங்கையில் இவ்வாறு எழும் எதிர்ப்புக்கள் அங்கு இன்னமும் எவ்வாறான அணுகுமுறையும் விட்டுக்கொடுப்பும் பிரச்சினைகளை தீர்ப்பது தொடர்பிலான மனப்பாங்குகளும் உள்ளன என்பதைக் காட்டுகின்றன.

இலங்கை சிங்களவர்களை பெரும்பான்மையாகவும் தமிழ் பேசும் மக்களை சிறுபான்மையாகவும் கொண்ட நாடு. வெவ்வேறுபட்ட இனங்கள் வாழ்கின்ற இலங்கையில் ஒற்றையாட்சியில் அதிகாரத்தை குவிப்பதன் ஊடாக பெரும்பான்மை இனமே அதிகாரத்தை ஆளும் அனுபவிக்கும் நிலமை காணப்படுகின்றது. இதன் காரணமாக சிறுபான்மை இனங்களுக்கு அதிகாரம் மறுக்கப்படுவதுடன் அவர்கள் தொடர்ந்தும் இரண்டாம் தரப் பிரஜைகளாக வாழ நேரிட்டுள்ளது. ஒரு இனம் முன்னேறவும்  அந்த இனத்தின் சக சமத்துவ வாழ்வுக்கும் அரச அதிகாரம் இன்றியமையாது. இலங்கைத் தீவில் தமிழ் மக்களது சுய உரிமை சிங்களவர் தமிழர்களை ஆளும் அதிகாரமாக பிரயோகிகப்படுகிறது.

அந்நிய வருகையின் முன்னர் பிளவுண்டிருந்த இலங்கைத் தீவு பிரித்தானியர்களால் ஒற்றை ஆட்சியின் கீழ் ஒருங்கிணைக்கப்பட்டது. இலங்கைத் தீவு ஒற்றையாட்சியின் கீழ் கொண்டுவரப்பட்ட காலம் முதல் இலங்கை தமிழர்கள் தமக்கான அதிகாரத்தை அல்லது உரிமையை கேட்டு குரல் எழுப்பிவந்துள்ளனர். நாடு பிளவுபடுவதை தமிழ் மக்களே தவிர்த்தனர். எனினும் தமிழ் மக்களின் அந்த நல்லெண்ண வெளிப்பாட்டுக்கு பெரும்பான்மையினத்தால் ஏமாற்றப்பட்ட தமிழர்களது உரிமை மறுக்கப்பட்டு அடக்கி ஒடுக்கப்பட்டனர். இதன் காரணமாக இழந்த அதிகாரத்தை இழந்த உரிமையை ஈழத் தமிழ் மக்கள் கோரும் போராட்டங்களை முன்னெடுத்தனர். அகிம்சைப் போராட்டங்களின் தோல்வியை தொடர்ந்து ஆயுதப் புரட்சி ஏற்பட்டது.

ஈழத் தமிழர்களின் பிரச்சினைக்கு சமஷ்டியை தீ்வாக இலங்கையின் முன்னாள் பிரதமர் பண்டாரநாயக்காவே முன்மொழிந்தார். அன்றைய இடதுசாரிக் கட்சிகள் தமிழருக்கு சமஷ்டி வழங்க பெரும் ஆதரவு தெரிவித்தன. எனினும் பேரினவாதிகளின் எதிர்ப்பால் அன்றைக்கு சமஷ்டி தீர்வு ஏற்படுத்தப்படவில்லை. இலங்கையின் இனச்சிக்கல் காலம் தோறும் அதிகரித்தே வந்தது. அதிகாரத்தை பகிரும் உரிமையை மறுக்கும் பேரினவாதப் போக்கிற்கு எதிராக தனிநாடு கோரும் ஆயுதம் ஏந்தும் போராட்டம் இலங்கைத் தீவில் ஏற்பட்டது.

இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதூங்க தனித் தமிழீழ நோக்கம் கொண்ட ஆயுதப் போராட்ட எழுச்சியின் பின்னர் தமிழீழ விடுதலைப் புலிகளுடன் நடந்த பேச்சுவார்த்தையின்போது சமஷ்டி தீர்வினை வழங்க இணக்கம் தெரிவித்தார். 2002ஆம் ஆண்டில் ஒஸ்லோவில் நடந்த பேச்சுவார்தையின்போது செய்து கொள்ளப்பட்ட ஒப்பந்தத்திலும் இலங்கையில் வடக்கு கிழக்கை தாயகமாகக் கொண்டு ஓர் சமஷ்டி அலகை உருவாக்கும் ஒப்புதல் குறிப்பிடப்பட்டது. இலங்கை இனப்பிரச்சினைக்குக் காரணமான ஒற்றையாட்சிக்கும் அதனை எதிர்த்து தொடங்கப்பட்ட தனி நாடு கோரிய போராட்டத்திற்கும் இடையிலான ஓர் இணக்கமாக சமஷ்டி அமையப்பெறுகின்றது.

தமிழ் தேசியக் கூட்டமைப்பு சமஷ்டியை தேர்தல் விஞ்ஞாபனத்தில் குறிப்பிட்டதை தொடர்ந்து தெற்கின் பெரும்பாலான கட்சிகளும் அனைத்து இனவாதக் கட்சிகளும் சமஷ்டியை எதிர்கின்றன. மகிந்த ராஜபக்ச முதல் ரிவின் சில்வா வரை சமஸ்டியை எதிர்கின்றனர். சமஷ்டி தீர்வு வழங்கப்படாது என இலங்கை அரசு திட்டவட்டமாக அறிவிப்பதாக கூறுகிறது. பிரதான சிங்கள கட்சிகளான ஐக்கிய தேசியக் கட்சியும் எதிர்க்கிறது. சிறிலங்கா சுதந்திரக் கட்சியும் எதிர்க்கிறது. மக்கள் விடுதலை முன்னணியும் எதிர்க்கிறது. தமிழ் கட்சி ஒன்று முன்வைக்கும் தீர்வை எதிர்ப்பத்தில் அனைவரும் ஒன்றிணைகின்றனர். பௌத்த சிங்களப் பேரினவாதத்தை பேணும் அரசியல் அமைப்பான ஒற்றையாட்சியின் மூலம் தொடர்ந்தும் தமிழரை  ஒடுக்க முனையும் விடயத்தில் பேரினவாதிகள் அனைவரும் ஓர் அணியில் நிற்கின்றனர்.

“சமஷ்டியை பிரிவினை என்பவர்கள் முட்டாள்கள்” என்கிறார் மனித உரிமை செயற்பாட்டாளர் பாக்கியசோதி சரவணமுத்து.

“வடக்கு கிழக்கு இணைந்த சுயாட்சி பிரிவினையல்ல என்றும் அது நிலையான நியாயமான நிரந்தரமான தீர்வு என்றும் அதுவே உறுதியான நிரந்தரமான கொள்கை” என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் கூறியிருக்கிறார்.

தீர்வு என்ற பெயரால் தமிழ்மக்களுக்கு எதைக் கொடுத்தாலும் எதிர்க்கின்ற சிங்களப் பேரினவாதிகளே இலங்கைத் தீவின் இனச் சிக்கலுக்கும் பேரழிவுக்கும் காரணமானவர்கள். சமஷ்டியை பிரிவினை என்பவர்கள் தமிழர் பிரச்சினைக்கு எந்த தீர்வை முன்வைத்தாலும் அதனை பிரிவினை என்பவர்களே. உண்மையில் அவர்கள் முட்டாள்களல்ல. மோசமான ஒடுக்குமுறை மனப்பாங்கு கொண்ட பேரினவாதிகள்.

கடந்த காலத்தில் மகிந்த ராஜபக்ச ஆட்சியின்போது 13ஆவது திருத்தச் சட்டத்தையும் பேரினவாதிகள் எதிர்த்திருந்தனர். வடக்கு மாகாண சபைத் தேர்தலை நடத்தவும் எதிர்த்திருந்தனர். சமஷ்டி மாத்திரமல்ல தமிழ் மக்களுக்கு எந்த தீர்வினை வழங்க கூடாது என்பதே சிங்களப் பேரினவாதிகளின் நிலைப்பாடாகும். அதைப்போலவே வடக்கிலிருந்து இராணுவத்தை வெளியேற்றக்கூடாது என்பதும் அதற்கு சிங்கள அரசுகள் சத்தியம் செய்து சிங்கள பேரினவாத வெறியை ஊக்குவிக்கப்படுகிறது.  

ஈழத் தமிழ் மக்களை தொடர்ந்து சிங்கள இராணுவத்தின் கட்டுப்பாட்டுக்குள் வைத்து உரிமையை மறுத்து அவர்கள்மீது அந்நிய ஆட்சி நடத்தி தாயகத்தை அபகரித்து இனத்தை சுத்திகரிப்பு செய்யும் நடவடிக்கையில் ஈடுபடும் தீர்வையே இலங்கை அரசு இன்று தனது தீர்வாக கொண்டுள்ளது. ஒரு தேச மக்களின் இறைமை என்பது அவர்களிடம மாத்திரே உள்ளது. தமிழ் மக்களின் தாயகமான வடக்கு கிழக்கில் அவர்கள் தங்களை தாங்களே ஆளவும் ஆட்சி அதிகாரத்தை கொண்டிருப்பதையும் அவர்கள் விரும்புகின்றனர். தமிழர்களின் தலைவிதியை தமிழர்களே தீர்மானிக்க முடியும். ஆனால் தமிழர்களின் வாழ்வை சிங்கள இராணுவமும் சிங்கள ஆட்சியாளர்களுமே இன்று தீர்மானிக்கின்றனர்.

“தமிழ் தேசிய கூட்டமைப்பினர் 1949 முதல் இவ்வாறான கோரிக்கையை முன்வைத்து வருகின்றனர். இது அவர்களின் கனவுகளில் ஓன்று, சமஷ்டி முறையை ஏற்படுத்துவதற்கு பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை அவசியம், வெறுமனே பத்து ஆசனங்களை வைத்துக்கொண்டு அவர்களால் அதனை சாதிக்க முடியாது, நாங்கள் அதற்கு அனுமதிக்கவும் மாட்டோம்.”

இவ்வாறு கூறுகிறார் இலங்கை அமைச்சர் சம்பிக்க ரணவக்க. இதுவே பெரும்பான்மையின வெறி. இதுவே சிறுபான்மையாக பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் தமிழர் நிலை. தமிழ் மக்கள் பிரதிநிதிகளால் சிங்கள பாராளுமன்றத்தில் எதையும் செய்ய முடியாது என்பதனாலேயே தமிழ் மக்கள் வடகிழக்கில் சுயாட்சி கோருகின்றனர். தமிழ் மக்களை சிங்கள பாராளுமன்றத்தில் எதையும் செய்யவிடாமல் தமிழ் மக்களை சுயமாகவும் வாழ விடாமல் அடக்குமுறையை பிரயோகிப்பதுவே தற்போதைய ஆட்சி என்பதை சம்பிக்க ஒப்புக்கொள்கிறார்.

“60 மாத்தில் புதிய நாடு ஒன்றை கட்டி எழுப்புவதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கூறியிருப்பது வடக்கு கிழக்கு இணைந்த தமிழீழமே” என்று கூறுகிறார் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச. தான்ஆட்சிக்கு வந்தால் தமிழரின் சமஷ்டிவாதம் நிராகரிக்கப்படும் என்றும் குறிப்பிடுகிறார். ராஜபக்சவுக்கு ரணிலை எதிர்த்து பிரச்சாரம் செய்யவும் தான் வாக்குப் பெறவும் தமிழீழமும் விடுதலைப் புலிகளும் தேவை.  இம்முறை தமிழ் தேசியக் கூட்டமைப்பு தனது தேர்தல் விஞ்ஞாபனத்தில் எதைக் குறிப்பிட்டிருந்தாலும் பேரினவாதிகள் அதனை தமிழீழம் என்றே அழைத்திருப்பார். எனவே பேரினவாதிகளுக்கு அஞ்சி தமிழ் மக்களின் அபிலாசைகளை வெளிப்படுத்தாமல் இருக்க முடியாது.

தமிழ் இனத்தின் உரிமையை தொடர்ந்து மறுக்கவேண்டும் என்பதும் தமிழ் இனத்தை தொடர்ந்து ஒடுக்க வேண்டும் என்பதுதான் சிங்களப் பேரினவாதிகளும் அதன் ஆட்சி பீடங்களும் தமக்குள் செய்து கொள்ளும் சத்தியங்களாகும். அவ்வாறு எதிர்ப்பதை நல்லிணக்கம் என்றும் நல்லாட்சி என்றும் சிங்களப் பேரினவாதக் கட்சிகள் அழைத்துக்கொள்ளுகின்றன. ஈழத் தமிழ் இனம் தனது முன்னேற்றத்திற்காகவும் ஒடுக்குமுறைகளிலிருந்து மீள் எழவும் தனது சுய உரிமைகளை கோருகின்றது. இன்னொரு இனத்தின் உரிமையை மறுக்கும் இன்னொரு இனத்தின் சுய கோரிக்கைகளை நிராகரிக்கும் இந்தச் செயற்பாடு மிகப்பெரும் உரிமை மறுப்பும் அடிமைப்படுத்தலும் ஆகும். அதற்கும் அப்பால் தமிழ் இனத்தை அழித் தொழிப்பதையே தென்னிலங்கை தனது தீர்வாக செயற்படுத்துகிறது.

இன்றும் உலகில் உள்ள ஈழத் தமிழர்களும் உலகத் தமிழர்களும் தனிநாடு குறித்தகோரிக்கையை முன் வைக்கின்றனர். இன்னொரு பிரதான தமிழ் கட்சியான தமிழ் தேசிய முன்னணி தனது விஞ்ஞாபனத்தில் தமிழ் தனித் தேசம் என்ற அடிப்படையில் சுயநிர்ணய உரிமையை கோரியுள்ளது. 2009 இனப்படுகொலை யுத்தத்தின் பின்னர் தமிழ் மக்கள் தேர்தல்களின் ஊடாக ஒற்றுமையை வெளிப்படுத்தியுள்ளதுடன் சிங்கள பேரினவாத அரசுமீதான தமது ஒற்றுமையான எதிர்ப்பையும் வெளிப்படுத்தியுள்ளனர். வடகிழக்கில் பிரிந்து செல்லுவதற்கான வாக்கெடுப்பு நடத்தப்பட்டால் கொதிநிலையில் உள்ள இலங்கை இனச்சிக்கலின் நிலை தெளிவாக புலப்படும். தமிழ் மக்களை தொடர்ந்தும் பிரிந்து செல்லும் நிலைக்கே இலங்கை அரசு தள்ளுகிறது.

தமிழர்களை தொடர்ந்தும் இரண்டாம்தரப் பிஜைகளாகவே வாழ வைக்கும் தமது இனத்தால் ஆளப்படும் அதிகாரத்தின் கீழ் அடிமைப்படுத்தும் உரிமையை மறுக்கும் பேரினவாதப் போக்கு இன்னமும் மாறவில்லை என்பதும் அது மிகப் பலம் கொண்டு இருக்கிறது என்பதும் பெரும் துயரம் தரும் செய்தி மாத்திரமின்றி ஈழத் தமிழ் இனத்தின் இருப்பின் ஆபத்தை உணர்த்தும் செய்தியுமாகும். இன்னொரு இனத்தின் அதிகாரத்தை இன்னொரு இனத்தை ஆளும் இலங்கை வரலாறு மாறவே இல்லை. எனவே இந்த தேர்தலில் சிங்கள தேசத்திற்கு தக்க பதிலை வழங்க வேண்டிய தார்மீகப் பொறுப்பு தமிழ் மக்களுக்கு உண்டு. இன்றைய ஜனநாயக ஆயுதத்தின் மூலம் ஈழத் தமிழர் ஒற்றுமையை அபிலாசையை எடுத்துரைக்க வேண்டியுள்ளது.

நாட்டில் அதிகாரத்தை பகிர்ந்து தமிழ் மக்கள் சமத்துவமாக வாழ வழி செய்வதே இலங்கையின் இனப்பிரச்சினையை தீர்க்க உகந்த வழி என்பதே இலங்கையின் அறுபது வருடகால இனச்சிக்கலும் முப்பது வருட கால ஆயுதப் போராட்டமும் கற்றுத்தரும் பாடமாகும். இனப்படு கொலையால் காயப்பட்ட இனம் அறுபது வருடமாக ஒடுக்குமுறையால் பாதிக்கப்பட்ட இனம் தலை நிமிர்ந்து வாழ சுய மரியாதையுடன் சுய உரிமையுடன் வாழவே விரும்புகிறது. சிங்கள அரசும் தெற்கும் ஒன்றுபட்ட நாட்டுக்குள் தமிழர்களின் சுய அதிகாரத்தை பகிர மறுத்தால் தமிழர்கள் மீண்டும் தனிநாட்டுக் கோரிக்கைக்கு செல்வது தவிர்க்க முடியாதது.
Share this article :
Print PDF

Related Post:

 
Support : Eelam5.com | Untamil.com | News4tamil.com
Powered by Eelanila
Copyright © 2011. ஈழநிலா.கொம் - All Rights Reserved
Eelanila.com
Design by: Nilavan Published by: Eelanila