வடகிழக்கிலிருந்து தமிழ்ப் பெண்களின் செய்தி

வடகிழக்கிலிருந்து தமிழ்ப் பெண்களின் செய்தி:-

 
உலக மகளிர் தினம் 2015:

வடகிழக்கிலிருந்து தமிழ்ப் பெண்களின் செய்தி


ஈழத்தமிழ்ப் பெண்கள் வடகிழக்கில் பல தசாப்தங்களாக நீடிக்கும் இன அழிப்பினால் கடுமையாகப் பாதிக்கப்பட்டி ருக்கிறார்கள். இன அழிப்புப் போர் முடிந்த பிறகும் தமிழருக்கெதிராகத் தொடர்ந்தும் மேற்கொள்ளப்படும் கட்டமைப்பு ரீதியான இன அழிப்பிலும் தமிழ்ப்  பெண்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகிறார்கள்.  குறிப்பாக, வடகிழக்கில் வாழும் பெண்களும் சிறார்களும் பாலியல் ரீதியிலான வன்முறைகளுக்கும் ஒடுக்குமுறைகளுக்கும் ஆளாக்கப்பட்டு வருகிறார்கள். இத்தகைய ஒடுக்குமுறைகள் இன அழிப்பு நோக்கோடே தொடர்ந்தும் மேற்கொள்ளப்படுகின்றன.


வடகிழக்கிலிருந்து எமது பெண்கள் இலங்கைத்தீவின் ஏனைய பகுதிகளுக்கும் அவர்களின் விருப்பை மீறிக் கொண்டு செல்லப்பட்டு கொடூரங்களுக்கு உள்ளாக்கப்பட்டிருக்கிறார்கள். குறிப்பாக, முன்னாள் பெண்போராளிகளும்  அரசியல் செயற்பாட்டாளர்களும் இராணுவத்தால் நடத்தப்படும் முகாம்களுக்கும் பண்ணைகளுக்கும் வலுக்கட்டாயமாக அனுப்பி வைக்கப்பட்டு அனைத்துவிதமான கொடுமைகளுக்கும் ஆளாக்கப்பட்டிருக்கிறார்கள். தவிரவும், பொருளாதாரத்தில் பின் தங்கிய தமிழ்ப் பெண்கள் ஏமாற்றப்பட்டு,  கொழும்பில் இருந்து அனுப்பப்படும் மக்கள் தொகைக் கட்டுப்பாட்டு மருத்துவ உள்ளீடுகளை அவர்களின் சுயவிருப்புக்கு மாறாக உடலுக்குள் செலுத்தி, கட்டாயக் குடும்பக் கட்டுப்பாடும் செய்யப்பட்டிருக்கிறது.



பல்லாயிரக்கணக்கான ஈழத்தமிழ் பெண்கள் போரினால் உருவான உளவியற் பாதிப்பில் இருந்து இதுவரை மீளவில்லை. உளவியயற் பாதிப்பின் பின்னான துன்பியல் உபாதை ஈழத்தமிழ் பெண்களுக்குதொடர்ச்சியாக ஏற்படுத்திவரும் பாதிப்புகள் குறித்த போதுமான கவனிப்பும் சிகிச்சையும் அளிக்கப்படவில்லை. போரின் முடிவில் தமது முன்னிலையில் இராணுவத்திடம் சரணடைந்த மற்றும் கையளிக்கப்பட்டவர்கள் தொடக்கம், கடத்தப்பட்டும் கைதுசெய்யப்பட்டும் காணமற்போனோர் ஆக்கப்பட்டிருக்கும் குடும்ப உறுப்பினர்களை பல்லாயிரக்கணக்கான ஈழத்தமிழ் பெண்கள் இன்னும் தேடி வருகிறார்கள். அவர்கள் குறித்த எவ்வித விவரமும் தெரியாமல் பேதலித்து நிற்கிறார்கள்.


பின் தங்கிய வறுமை நிலையில், பெண்கள் தலைமையேற்று நடத்தும் குடும்பங்கள் மட்டும் வடகிழக்கில் ஒரு லட்சத்தை தொடும் என்று கணிக்கிறோம். 2009 மே போரின் முடிவின் பின்னர் அதிவேகமாக முடுக்கிவிடப்பட்டிருக்கும் இராணுவமய மாக்கலால் தமிழ்த் தேசத்தின் சமூக அடித்தளமே திட்டமிட்டரீதியில் கட்டமைப்புரீதியாக சிதைக்கப்பட்டுவருகிறது. முழுமையான இராணுவ மையப்படுத்தப்பட நிலையத்தில் இலங்கையின் வடகிழக்கில்  முன்பு பணியாற்றிய அரச சார்பற்ற தொண்டர் நிறுவனங்களும் ஐக்கிய நாடுகள் அமைப்பின் துணை நிறுவனங்களும் தங்களது அலுவலகங்களை மூடிவிட்டு கொழும்புக்குச் சென்றுவிட்டார்கள்.


பிராந்திய மற்றும் உலகளாவிய அரசியற் சக்திகளான இந்தியா, அமெரிக்கா மற்றும் சீனா இலங்கைத் தீவின்  மீதான கேந்திர முக்கியத்துவம் குறித்த ஏகாதிபத்திய போட்டியினால் கொழும்பை மையப்படுத்தியே சிந்தித்தும் செயற்பட்டும் வருகின்றன. அதன் விளைவாக தமிழ் அரசியல் தளத்தின் ஒரு பகுதியினர் கொழும்பை மையப்படுத்தியே சிந்திக்க முற்பட்டுள்ளனர்.


சர்வதேச மகளிர் நாளான மார்ச் 8 இல், உலக சமுதாயத்திடம் நாம் ஒரு முக்கிய வேண்டுகோளை விடுக்கிறோம். சுயாதீனமான சர்வதேச விசாரணை மூலம் தமிழர்களுக்கு ஈடுசெய் நீதி வழங்கப்படவேண்டும் என்பதும், வடகிழக்கில் இருந்து இன அழிப்பு இராணுவம் முழுமையாக விலக்கிக்கொள்ளப்படுவது நடந்து முடிந்த இன அழிப்புக்கான ஈடுசெய் நீதியின் ஒரு அங்கமாக அமைய வேண்டும் என்பதுமே அந்த வேண்டுகோளாகும்.  இந்தவகையில், வடகிழக்கில் இருந்து முழுமையான இராணுவ வெளியேற்றலை கோருகிறோம்.


வடகிழக்கில் இருக்கும் தமிழ் பேசும் பெண் பிரதிநிதிகளை உள்ளடக்கி சிலம்பு (chilampu.org) என்ற அமைப்பை உருவாக்கி இருக்கிறோம். இவ்வமைப்பு தமிழ் பெண்களின் போராட்டத்தை முன்னிலைப்படுத்திச் செயற்படும் என்பதையும் இத்தால் அறியத்தருகிறோம். எங்களது கோரிக்கைக்களான, சர்வதேச ரீதியிலான இன அழிப்பு விசாரணை மற்றும் முழுமையான இராணுவ வெளியேற்றம் ஆகிய கோரிக்கைகளுக்கு உலகளாவிய ஆதரவை வேண்டுகிறோம். தமிழ் அரசியற் கைதிகளை உடனடியாக விடுதலை செய்யவும் காணாமல் ஆக்கப்பட்டோர் நிலை குறித்த விளக்கத்தையும் உடனடியாக வெளியிடவும் சிறீலங்கா அரசிற்கு அழுத்தம் கொடுக்க சர்வதேச சமூகம் முன்வர வேண்டும் எனவும் இத்தால் கோரிக்கை விடுக்கிறோம்.


திருமதி அனந்தி சசிதரன்

தலைவி, சிலம்பு

வடமாகாணசபை உறுப்பினர்
Share this article :
Print PDF

Related Post:

 
Support : Eelam5.com | Untamil.com | News4tamil.com
Powered by Eelanila
Copyright © 2011. ஈழநிலா.கொம் - All Rights Reserved
Eelanila.com
Design by: Nilavan Published by: Eelanila