ஒரு விசாரணையும் வேண்டாம்! எங்களைப் பிரித்து விடு!

வன்னிப் பெரு நிலப்பரப்பில் நடந்த இன அழிப்பு மற்றும் போர்க்குற்றம் தொடர்பில் சர்வதேச விசாரணை இடம்பெறுவதை தடுத்து நிறுத்துவதில் இலங்கை அரசு மிகத் தீவிரமாக உள்ளது.
இவ்வாறு சர்வதேச விசாரணையைத் தடுத்து நிறுத்துவதில் இலங்கை அரசு கடும் பிரயத்தனம் எடுப்பதன் ஊடாக, தனது நாட்டின் சிறுபான்மை இனத்துக்கு மீண்டும் மீண்டும் அநீதி இழைப்பது உறுதியாகிறது.
போரினால் பாதிக்கப்பட்டவர்கள் தமிழ் மக்கள். பல்லாயிரக்கணக்கான தமிழ் மக்களைக் கொன்று ஒழித்தது மட்டுமன்றி படையினரிடம் தஞ்சம் அடைந்தவர்கள் எங்குள்ளனர் என்பது கூடத்தெரியாமல் உள்ளது.
நிலைமை இதுவாக இருக்கும்போது, தமிழ் மக்கள் மீதான இத்துணை கொடூரத்தனங்களும் எதற்கானது என்றால், சிங்கள இனம் மட்டுமே இந்த நாட்டில் வாழ வேண்டும்; பெளத்த சிங்களவர்களுக்கு மட்டுமே இந்த நாடு சொந்தம் என்ற வக்கிரத் தனத்தாலாகும்.
இத்தகைய நிலைமையின் காரணமாக தமிழினம் அழிக்கப்படுவதுடன், அழிக்கப்படுகின்ற தமிழினத்துக்கு நீதி கிடைப்பதையும் சிங்கள அரசு தடுத்து வருகிறது.
இந்நிலையில் இலங்கை ஆட்சியாளர்களால் காலத்துக்குக் காலம் கொல்லப்படும் தமிழினத்தின் ஒரே நம்பிக்கை சர்வதேசம் மட்டுமே.
இத்தகையதொரு சூழ்நிலையில் சர்வதேசமும் இலங்கை அரசின் கோரிக்கைகளுக்கு சந்தர்ப்பம் கொடுக்குமாயின் தமிழினத்தின் அழிவு பற்றி சர்வதேச சமூகம் கவலை கொள்ளவில்லை என்றே கூற முடியும்.
தற்போது நாட்டில், ஜனாதிபதி மைத்திரியின் ஆட்சி நடப்பதால் தமிழ் மக்கள் ஆறுதல் அடைந்தாலும் மைத்திரிதான் இந்த நாட்டின் நிலைத்த ஜனாதிபதி என்று கூற முடியாது.
எனவே, இந்த நாட்டின் தற்போதைய ஆட்சியில் தற்காலிகமாக அமைதி நிலவினாலும் எதிர்வரும் காலங்களில் வருகின்ற ஆட்சியாளர்கள் தமிழ் மக்களை என்ன செய்வார்கள் என்று சொல்ல முடியாது.
ஆகையால், சர்வதேச சமூகம் தமிழினத்தின் உரிமையைப் பாதுகாக்க நினைத்தால், பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் எனக் கருதினால், சர்வதேச விசாரணையை முன்னிறுத்த வேண்டும்.
சர்வதேச விசாரணையை ஏற்றுக் கொள்ள முடியாது என்று இலங்கை அரசு கூறுமாயின், பரவாயில்லை. இலங்கைத் தமிழர்கள் பிரிந்து சென்று தங்களின் ஆட்சியை நடத்த அனுமதியுங்கள் என்று இலங்கை அரசுக்குக் கூறவேண்டும்.
இவ்வாறானதொரு சந்தர்ப்பத்தில் சர்வதேச மற்றும் உள்ளக விசாரணைகள் முடிவுறுத்தப்படலாம்.
இதைவிடுத்து வன்னிப் பெருநிலப்பரப்பில் வைத்து தமிழ் மக்களை மிக மோசமாகக் கொன்று ஒழித்தவர் சூரியக் குளியல், நீச்சல் அடித்தல், செல்பி எடுத்தல் என்று உல்லாசமாக இருக்க,
அவரைப் பாதுகாக்க உள்ளக விசாரணை என்று இலங்கை அரசு கூறுவதும் அதனை சர்வதேசம் ஏற்பதும் வன்னியில் நடந்த பேரவலத்தை, பெரும் கொடுமையைவிட இன்னும் ஒருபடி மேலான கொடுமைத்தனம் என்றே கூறமுடியும்.
எனவே, சர்வதேச விசாரணையைத் தடுப்பதாயின் தமிழர்களுக்கு தனி நாட்டைக் கொடுக்க நீங்கள் தயாரா? என்று சர்வதேச சமூகம் இலங்கை அரசிடம் ஒரு கேள்வியைக் கேட்க வேண்டும் என்பது போரினால் பாதிக்கப்பட்ட தமிழினத்தின் தாழ்மையான கோரிக்கையாகும்.
Share this article :
Print PDF

Related Post:

 
Support : Eelam5.com | Untamil.com | News4tamil.com
Powered by Eelanila
Copyright © 2011. ஈழநிலா.கொம் - All Rights Reserved
Eelanila.com
Design by: Nilavan Published by: Eelanila