தனது கணவனும் விடுதலைப் புலிகளின் திருகோணமலை மாவட்ட முன்னாள் அரசியல் துறை பொறுப்பாளருமான எழிலன் உள்ளிட்ட முன்னாள் போராளிகள் தொடர்பில் தாக்கல் செய்யப்பட்ட ஆட்கொணர்வு மனு மீதான விசாரணை, இன்று (வியாழக்கிழமை) முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றில் இடம்பெற்றது.
இன்றைய தினம் இதற்கு சாதமான பதிலை எதிர்பார்த்து காத்திருந்த நிலையில், மீண்டும் ஏமாற்றும் செயற்பாட்டையே நீதிமன்றில் இராணுவம் நிறைவேற்றியுள்ளதாக ஊடகவியலாளர்களிடம் அனந்தி குறிப்பிட்டார்.
ஆட்சி மாறியிருந்தாலும், இதற்கு பதில்சொல்ல வேண்டிய கடப்பாடு அரசாங்கத்திற்கே உள்ளதென குறிப்பிட்ட அனந்தி, இவ்விடயத்தில் கால இழுத்தடிப்பு செய்வதானது தமக்கான நீதியை பெற்றுத்தர முடியாத நிலையை தோற்றுவிப்பதாக தாம் அஞ்சுவதாகவும் குறிப்பிட்டார்.
சரணடைந்த போராளிகள் குறித்து மீண்டும் ஒரு பொய்யான அறிக்கையை சமர்ப்பிப்பதற்கே, இன்றைய விசாரணையில் இராணுவம் தவணை கோரியுள்ளதாக தெரிவித்த அனந்தி, அடுத்த ஐ.நா அமர்வில் இவ்விடயம் பாரியளவில் வெடிக்குமென்றும், அதற்கு முன்னர் சரணடைந்த போராளிகள் தொடர்பில் நீதியை பெற்றுக்கொடுக்க வேண்டுமென்றும் மேலும் தெரிவித்துள்ளார்.