பருத்தித்துறை கிளைமோர் தாக்குதல் - சந்தேகநபரின் ஒப்புதல் வாக்குமூலத்தை யாழ்.மேல் நீதிமன்றம் நிராகரிப்பு!


பருத்தித்துறை நாவலடி பிரதேசத்தில் கடந்த 2007 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதலாம் திகதி சுற்றுக் காவல் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த இராணுவத்தினர் மீது கிளைமோர் தாக்குதல் நடத்தி இராணுவ சிப்பாய் திசநாயக்க என்பவரைக் கொலை செய்ததாகக் குற்றம்சாட்டப்பட்ட வழக்கில், எதிரியினால் அளிக்கப்பட்டதாகக் கூறி, சமர்ப்பிக்கப்பட்ட ஒப்புதல் வாக்குமூலத்தை யாழ் மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியன் நிராகரித்துள்ளார்.
பருத்தித்துறை நாவலடி பிரதேசத்தில் கடந்த 2007 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதலாம் திகதி சுற்றுக் காவல் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த இராணுவத்தினர் மீது கிளைமோர் தாக்குதல் நடத்தி இராணுவ சிப்பாய் திசநாயக்க என்பவரைக் கொலை செய்ததாகக் குற்றம்சாட்டப்பட்ட வழக்கில், எதிரியினால் அளிக்கப்பட்டதாகக் கூறி, சமர்ப்பிக்கப்பட்ட ஒப்புதல் வாக்குமூலத்தை யாழ் மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியன் நிராகரித்துள்ளார்.
   
இந்தக் கொலை வழக்கில் எதிரிக்கு எதிராக முன்வைக்கப்பட்ட ஒரேயொரு ஆதாரமாகிய ஒப்புதல் வாக்குமூலம் நிராகரிக்கப்பட்டதையடுத்து, இந்த வழக்கை தொடர்ந்து நடத்துவதா, இல்லையா என்பதுபற்றி அறிவிக்குமாறு அரச சட்டத்தரணிக்கு அவகாசம் வழங்கி வழக்கை எதிர்வரும் நவம்பர் மாதம் 17 ஆம் திகதிக்கு நீதிபதி ஒத்தி வைத்துள்ளார்.
பருத்தித்துறை நாவலடி பிரதேசத்தில் சுற்றுக்காவல் கடமையில் ஈடுபட்டிருந்த இராணுவத்தினர் மீது கிளைமோர் கண்ணிவெடி தாக்குதல் நடத்தி, இராணுவ சிப்பாய் திசநாயக்காவைக் கொலை செய்ததாகக் குற்றம் சாட்டி, சட்டமா அதிபரினால், பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ், இரத்தினம் பூபாலபிள்ளை அல்லது பூபால் மாமா என்பவருக்கு எதிராக யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்த வழக்கில் எதிரியினால் வழக்கப்பட்டதாகக் குறிப்பிடப்படும் குற்ற ஒப்புதல் வாக்குமூலம் மாத்திரமே வழக்கை நடத்துவதற்கான ஆவணமாகப் பதிவிலக்கமிட்டு நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டிருந்தது.
எதிரியினால் வழங்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்ட குற்ற ஒப்புதல் வாக்குமூலத்தைப் பதிவு செய்ததாகக் கூறி நீதிமன்றத்தில் உதவி பொலிஸ் அத்தியட்சகர் ஜகத் பொன்சேகா சாட்சியமளித்தார். அவர் தனது சாட்சியத்தில், எதிரியான இரத்தினம் பூபாலபிள்ளையை அழைத்து, அவருடைய தேவையைப் பூர்த்தி செய்யுமாறு பயங்கரவாதத் தடுப்புப் பொலிஸ் பிரிவின் பணிப்பாளர் எனக்கு உத்தரவிட்டார். அதன்படி, எதிரியை அழைத்து கேட்டபோது, அவர் குற்ற ஒப்புதல் வாக்குமூலம் அளிக்க விரும்புவதாகத் தெரிவித்தார். இதனையடுத்து, குற்ற ஒப்புதல் வாக்குமூலம் தொடர்பான சட்ட திட்டங்களை விளங்கப்படுத்திய பின்னர், அவருடைய குற்ற ஒப்புதல் வாக்குமூலத்தைப் பதிவு செய்தேன்.
எனக்கு தமிழ்மொழி தெரியாது. அதேநேரம், எதிரிக்கு சிங்கள மொழி தெரிந்திருக்கவில்லை. எனவே எங்கள் இருவருக்குமிடையில் மொழிபெயர்ப்பாளராக பொலிஸ் சார்ஜன்ட் நஜீம் கடமையாற்றினார். பொலிஸ் சார்ஜன்ட் நஜிமுடைய மொழிபெயர்ப்புடன் எதிரி வழங்கிய குற்ற ஒப்புதல் வாக்குமூலத்தை அதே இடத்தில் நேரடியாகவே, பெண் பொலிஸ் கான்ஸ்டபிள் நிலாந்தி தட்டச்சு செய்தார் என தெரிவித்தார்.
அதனைத் தொடர்ந்து நீதிமன்றத்தில் சாட்சியமளித்த எதிரியான இரத்தினம் பூபாலபிள்ளை அல்லது பூபால் மாமா, அந்த குற்ற ஒப்புதல் வாக்குமூலத்தை தான் வழங்கவில்லை என உதவி பொலிஸ் அத்தியட்சகர் ஜகத் பொன்சேகாவின் சாட்சியக் கூற்றை மறுத்துரைத்தார். எதிரி தனது சாட்சியத்தில் மேலும் தெரிவித்ததாவது:
இந்த உதவி பொலிஸ் அத்தியட்சகரை நான் காணவே இல்லை. அவருக்கு நான் எந்தவிதமான குற்ற ஒப்புதல் வாக்குமூலமும் வழங்கவில்லை. இங்கு சமர்ப்பிக்கப்பட்டதாகக் கூறப்படுகின்ற ஒப்புதல் வாக்குமூலத்திற்கும் எனக்கும் எந்தவிதமான சம்பந்தமும் இல்லை. கடந்த 2009 ஆம் ஆண்டு மே மாதம் 16 ஆம் திகதி ஓமந்தையில் வைத்து படையினர் என்னைக் கைது செய்தார்கள். கொலை நடந்ததாகக் கூறப்படுகின்ற 2007 ஆம் ஆண்டு காலப்பகுதியில் நான் வன்னியில் இருந்தேன்.
ஆனால், 2007 ஆம் ஆண்டு தை மாதம் முதலாம் திகதி பருத்தித்துறை நாவலடி பகுதியில் நடைபெற்ற கிளமோர் தாக்குதல் சம்பவத்தில் என்மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டிருக்கின்றது. 2007 ஆம் ஆண்டு காலப்பகுதியில் வன்னியில் இருந்து எவரும் பருத்தித்துறை பகுதிக்கு எவரும் சுதந்திரமாகச் செல்ல முடியாது. அதேநேரம் சம்பவம் நடந்து இரண்டு வருடங்களின் பின்பே என்னைக் கைது செய்து என்மீது இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருக்கின்றது.இந்தக் கொலைக்கும் எனக்கும் எந்தவிதமான சம்பந்தமும் இல்லை என தெரிவித்தார்.
இரு தரப்பு சாட்சியங்களையும் செவிமடுத்த நீதிபதி இளஞ்செழியன், இந்த கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட முக்கிய விடயங்களை ஆய்வு செய்ததாகத் தனது தீர்ப்பில் தெரிவித்தார். அவர் தெரிவித்ததாவது: நீதிமன்றத்தில் உதவி பொலிஸ் அத்தியட்சகரி அளித்த சாட்சியத்தில், அவருக்கு பணிப்புரை வழங்கியதாகக் குறிப்பிட்ட பயங்கரவாதத் தடுப்பு பிரிவின் பணிப்பாளர் யார்? அவருடைய பெயர் என்ன? எதிரி அந்தப் பணிப்பாளரிடம் தெரிவிக்க விரும்பியிருந்த தகவல் என்ன? எதிரியின் விருப்பத்தை அல்லது தேவையை அந்தப் பணிப்பாளரிடம் கொண்டு சென்றவர் யார்? என்பது போன்ற எந்த விடயமும் தெளிவுபடுத்தப்படவில்லை.
எதிரியிடமிருந்து பெற்றதாகக் கூறப்படுகின்ற ஒப்புதல் வாக்குமூலம் சம்பந்தமாக மேற் குறிப்பிட்ட விடயங்கள் உதவி பொலிஸ் அத்தியட்சகரினால் எண்பிக்கப்படவில்லை. எதிரி உதவி பொலிஸ் அத்தியட்சகர் அளித்த சாட்சியத்தை மறுத்துரைத்துள்ளார். எதிரி தனது சாட்சியத்தில் கொலைச் சம்பவம் நடைபெற்றபோது, தான் வன்னியில் இருந்ததாகத் தெரிவித்துள்ளார். அத்துடன் சம்பவம் நடைபெற்று இரண்டு வருடங்களின் பின்னர் ஓமந்தையில் வைத்தே தன்னைக் கைது செய்ததாகவும் எதிரி தெரிவித்துள்ளார்.
எதிரியின் ஒப்புதல் வாக்குமூலத்தைப் பதிவு செய்ததாகக் கூறிய உதவி பொலிஸ் அத்தியட்சகரைத் தான் காணவில்லை என்று கூறி, அந்த ஒப்புதல் வாக்குமூலத்திற்கும் தனக்கும் சம்பந்தம் இல்லை என்று எதிரி தனது சாட்சியத்தில் கூறியுள்ளார். இங்கு அளிக்கப்பட்ட சாட்சியங்களில், எதிரி யாருடைய தடுப்புக்காவலில் வைக்கப்பட்டிருந்தார், சட்டரீதியான தடுப்புக்காவலிலா அல்லது முரணான தடுப்புக்காவலிலா என்பது தொடர்பிலான எதிரியின் தடுப்புக்காவல் உத்தரவுப் பத்திரம் எதுவும் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவில்லை.எதிரி தான் யாருக்கும் ஒப்புதல் வாக்குமூலம் வழங்கவில்லை என்றும், இந்தக் கொலைக்கும் தனக்கும் எதுவித சம்பந்தமும் இல்லை என தெரிவித்துள்ளார்.
எனவே, எதிரி சுதந்திரமாக, சுயவிருப்பத்தின் பேரில்தான் தனது குற்ற ஒப்புதல் வாக்குமூலத்தை வழங்கினார் என்பதை நிரூபிப்பதற்கு அரச தரப்பு தவறிவிட்டது. இந்த வழக்கின் ஒரேயொரு ஆவண சாட்சியமாகிய எதிரி வழங்கியதாகத் தெரிவிக்கப்பட்ட குற்ற ஒப்புதல் வாக்குமூலத்தை நிராகரித்து இந்த நீதிமன்றம் தீர்ப்பளிக்கின்றது என நீதிபதி தெரிவித்தார்.
அத்துடன், இந்த வழக்கைத் தொடர்ந்து நடத்துவதா, இல்லையா என்பதை அடுத்த தவணையில் தெரிவிக்க வேண்டும் என்று அரச தரப்பு சட்டத்தரணிக்கு அவகாசம் வழங்கி வழக்கை நீதிபதி இளஞ்செழியன் எதிர்வரும் நவம்பர் மாதம் 17 ஆம் திகதிக்கு ஒத்தி வைத்தார். இந்த வழக்கில் அரச தரப்பில் செல்வி சுகந்தி கந்தசாமியும் எதிரி தரப்பில் சட்டத்தரணி சிறிகாந்தாவும் முன்னிலையாகியிருந்தனர்.

Share this article :
Print PDF

Related Post:

 
Support : Eelam5.com | Untamil.com | News4tamil.com
Powered by Eelanila
Copyright © 2011. ஈழநிலா.கொம் - All Rights Reserved
Eelanila.com
Design by: Nilavan Published by: Eelanila